வாஷிங்டன், ஏப்.15- 63 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல பாப் பாடகி உள் பட 6பேர் விண்வெளிக்கு வெற்றிகரமாக சுற்றுலா பயணம் மேற்கொண்டனர்.
விண்வெளி சுற்றுலா
1963 ஆம் ஆண்டில் ரஷியா விண்வெளி வீராங்கனை வேலண்டினா திரஸ்கோவா, தனியாக விண்வெளிப் பயணம் மேற்கொண்டு விண்வெளியைச் சுற்றி வந்த முதல் பெண் என சாதனை படைத்தார். இதனைத் தொடர்ந்து ஆராய்ச்சிக்காக விண்வெளி வீராங்கனைகள் பலர் விண்வெளிக்கு சென்றாலும் சுற்றுலாவுக்காக விண்வெளிக்கு பெண்கள் அழைத்துச் செல்லப்படுவதில்லை.
இந்நிலையில் உலக பணக் காரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவனருமான ஜெப் பெசோஸ் தன்னுடைய ‘புளூ ஆர்ஜின்’ என்ற தனியார் விண்வெளி நிறுவனத்தின் மூலமாக விண்வெளிக்குப் பெண்கள் மட் டும் அடங்கிய குழுவினரை அழைத்துச் செல்ல முடிவு செய்தார்.
இதற்காக பிரபலமான 5 பெண்களை தேர்வு செய்து, அந்தக் குழுவுடன் தனது காதலியான லாரன் சான்செசையும் அனுப்ப முடிவு செய்தார். அதன்படி அமெரிக்கா நாட்டின் பிரபல பாப் பாடகி கேட்டி பெரி, பத்திரிகையாளர் கெயில் கிங், பொறியாளர் அய்ஷா பவ், சமூகப் போராளி அமன்தா குயென் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் கேரியன் பிளின் ஆகியோர் இந்த பய ணத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்படி நேற்று (14.4.2025) உள்ளூர் நேரப்படி காலை 8.30 மணியளவில் புளூ ஆர்ஜின் நிறுவனத்திற்குச் சொந்தமான புளு ஷெப்பர்ட் ராக்கெட் மூலமாக அவர்கள் விண்வெளிக்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகா ணத்தில் அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ஏவுதளத்தில் இருந்து, நெருப்பைக் கக்கியபடி அந்த ராக்கெட் விண்வெளியை வெற்றிகரமாக அடைந்தது. விண்கலத்தில் இருந்தபடி 6 பெண்களும் விண்வெளியின் அழகைக் கண்டு ரசித்தனர். தொடர்ந்து 11 நிமிடங்கள் விண்ணில் இருந்த நிலையில் அது பூமிக்குத் பத்திரமாக தரையிறங்கியது. விண்வெளி அழகை ரசித்த பெண்கள் இந்த அனுபவம் புதுமையாக இருந்ததாகத் தெரிவித்தனர். 63 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளிக்கு முழுக்க முழுக்க பெண்கள் குழு மட்டும் சென்று சாதனை படைத்துள்ளது.