சென்னை, ஏப்.14 ரூ.2152 கோடி கல்வி நிதி தராத ஒன்றிய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றிய அரசு கடந்த 2000ஆம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது.
நிதி ஒதுக்கீடு
நாடு முழுவதும் இந்த திட்டம் 2010ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப் பட்டது. இதற்காக ஒன்றிய அரசு 60 சதவீதம் பங்குநிதி மற்றும் மாநில அரசு 40 சதவீதம் பங்கு நிதி என்ற அளவில் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு தேவையான கோரிக்கைகள் அடங்கிய பட்ஜெட்டை மாநில அரசு ஒன்றிய அரசுக்கு அனுப்பியது.
அதன்படி ஒன்றிய அரசு மாநிலங் களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீடு செய்து வந்தது. 2010ஆம் ஆண்டிற்கு பிறகு இந்த நிதியை பயன்படுத்தி தமிழ்நாட்டில் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேற்கொண்டு வந்தது. அதனை தொடர்ந்து 2010ஆம் ஆண்டில் 9ஆம் வகுப்பு வரை இந்த திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு திட்டத்திற்கு பெயர் ஆர்எம்எஸ்ஏ என பெயரிடப்பட்டது. அதன்படி திட்டத்திற்கு ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியானது அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் ஒன்றிய அரசின் நிதி ஆண்டுக்கு ரூ.1200 கோடி என தமிழ் நாட்டிற்கு கிடைத்தது.
இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் ஆர்எம்எஸ்ஏ இரண்டு திட்டத்தை ஒன்றாக இணைத்து சமக்கர ஷிக்ஷா(ஒருங்கிணைந்த பள்ளி கல்வி) என பெயர் மாற்றப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் மாதிரி பள்ளிகள் உருவாக்குவது, 9ஆம் மற்றும் 10ஆம் வகுப்புகளில் ஆங்கில வழிக்கல்வி, மற்ற கட்டட வசதிகள், வகுப்பறைகள், டிஜிட்டல் போர்டுகள், ஸ்மார்ட் போர்டு, கணினி வசதிகள் பள்ளிகளில் ஏற்பட்டுத்தப்பட்டு, பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி திட்டங்கள் வழங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நிதி வழங்க மறுப்பு
தற்சமயம் தமிழ்நாட்டில் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான பட்ஜெட் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டிற்கு ரூ.2152 கோடி வரவேண்டியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஒன்றிய அரசு இந்த நிதியை வழங்க மறுத்து வருகிறது. இதையடுத்து மாநில கல்வி அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு பிரதமர், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோரை சந்தித்து நிதியை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அப்போது, பிஎம்சி திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் மாநில அரசு கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து மாநில முதலமைச்சருடன் கலந்தாலேசித்த பின்னரே முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழ்நாட்டில் பிஎம்சி திட்டம் மற்றும் புதிய கல்விக் கொள்கையை ஆராய்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர், நிபுணர்கள் அடங்கி குழுக்களை அமைத்தார். இந்நிலையில் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் ஒன்று அனுப்பினார். அதில், பிஎம்சி திட்டத்தில் கையெழுத்திட வேண்டும் என தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த தலைமை செயலாளர், தமிழ்நாட்டில் இதுதொடர்பான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிபுணர் குழு என்ன பரிந்துரை செய்கிறதோ அதன்படி பிஎம்சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடிவு எடுக்கப்படும் என பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னரும் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கவில்லை. இதையடுத்து ஒன்றிய கல்வி அமைச்சரை மாநில அமைச்சர் சந்தித்தார்.
அப்போது பிஎம்சி திட்டத்தில் கையெழுத்திட்டால் மட்டுமே நிதி வழங்கப்படும் என ஒன்றிய நிதியமைச்சர் தெரிவித்தார். இந்த பெரிய சர்ச்சையை உருவாக்கியது. இதையடுத்து காசியில் நடத்த விழாவில் ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் கூறுகையில், பிஎம்சி திட்டத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டால் மட்டுமே நிதி வழங்கட்பபடும் என பகிரங்கமாக தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
அவரின் இந்த பேச்சுக்கு தமிழ்நாட்டில் கண்டன குரல்கள் எழுந்தன. பல அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதித்தார்கள். இருப்பினும், ஒன்றிய அரசு நிதி வழங்காமல் பிடிவாதமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ஏற்கெனவே தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டதை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்து, அதற்கான தீர்ப்பு கடந்த வாரம் வெளியானது.
இந்த தீர்ப்பு தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் விழிப்புணர்வை ஏற்டுத்தியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசுப் பள்ளி கல்வித்துறைக்கு ஒன்றிய அரசு ஒதுக்க வேண்டிய நிதியை வழங்க கோரி நீதிமன்றத்தை நாடுவது என்று முடிவு செய்துள்ளது. ரூ.2152 கோடி கல்வி நிதி தராத ஒன்றிய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வி நிதியை நிறுத்துவது நியாயமற்றது என்று கடந்த மாதம் கல்விக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவும் கூறியிருந்தது. சட்ட நிபுணர்களிடம் இருந்து அரசு பெற்ற கருத்துகளும் வழக்கு தொடர சாதகமாக இருப்பதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர்.