விக்கல் ‘ஹக்க்’ என்ற ஒருவித சத்தத்துடன் நெஞ்சை, வயிற்றை, அல்லது தொண்டையை அடைக்கும் அல்லது இறுக்கும் அறிகுறிகளுடன் தோன்றும். பொதுவாக, நிமிடத்திற்கு ஓரிரு விக்கல் வரும். ஆனால், இதுவே நிமிடத்திற்கு 50-60 வரை நீடிப்பதும் உண்டு. பெரும்பாலும் தானாகவே விக்கல் நின்றுவிடும் என்றாலும் இதுவே ஓரிரு மணிகளிலிருந்து ஓரிரு மாதங்கள் வரை கூடத் தொடரக்கூடும்.
விக்கல் எப்படி ஏற்படுகிறது?
உடம்பில், உதரவிதானம் என்ற தசை நெஞ்சையும், வயிற்றையும் பிரிக்கும் தடுப்புச் சுவராக உள்ளது. இது, மூச்சை உள்ளே இழுக்கும் போது கீழேயும், மூச்சை விடும்போது மேலேயும் எழும்பும், இந்தத் தசையில் ஏதாவது ஒரு கோளாறால் உறுத்தல் ஏற்படும் சமயம் வயிற்றை இழுக்கும். அப்போது, தொண்டையினுள் காற்று இழுக்கப்பட்டு, அது குரல் நாண்களை மூடும்போது ஏற்படும் ஒலியே விக்கல் எனப்படுகிறது.
விக்கல் ஏற்படக் காரணம் என்ன?
விக்கல் ஏன் திடீர் என்று ஏற்படுகிறது? என்பது இன்று வரை அறிவியல் ரீதியாக அறியப்படவில்லை. இருப்பினும் விக்கலைத் தூண்டும் சில காரணங்கள் உண்டு.
- வேகமாகச் சாப்பிடுவது, சூடாக உண்பது, போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது, மிகுந்த காரமான பொருட்கள், மசாலா பொருட்கள் ஆகியவை, உதரவிதானத்திற்கு உதவும் நரம்புகளைத் தூண்டி விக்கலை ஏற்படுத்தும்.
- அளவுக்கதிகமான உணவு, நுரை வரும் மென்பானங்கள், பீர், அதிகமாகக் காற்றைக் குடிப்பது போன்றவை இரைப்பையை விரிவடையச் செய்து, உதரவிதானத்தை அழுத்துவதால் விக்கல் உண்டாகும்.
- சூடான பொருட்களைக் குடித்தவுடன், குளிரான பொருட்களைக் குடித்தாலும் அல்லது சூடான நீரில் குளித்துவிட்டுக் குளிர்ந்த தண்ணீரில் உடன் குளித்தாலும் விக்கல் ஏற்படலாம். இதுதவிர, புகையிலை அதிகம் உபயோகிக்கும்போதும், அதிக மன உளைச்சல் காரணமாகவும் மற்றும் அதிர்ச்சி ஏற்படும் நேரங்களிலும் விக்கல் உண்டாகும்.
மருத்துவக் காரணம்
இவற்றைத் தவிர, சில மருத்துவக் காரணங்களினாலும் அதிக நேரம் இடைவிடாது தொடர்ந்து விக்கல் நீடிக்கும். இதற்கான மருத்துவக் காரணங்கள் 100-க்கு மேற்பட்டவையாகும்.
அவற்றில் முக்கியமானவை, உதரவிதானத்திற்குச் செல்லும் நரம்புப் பழுது. இவை, பொதுவாகக் கழுத்தில் தோன்றும் கட்டிகளாலும் காதில் உள்ளே விழுந்த புறப்பொருட்களாலும் (எ.கா.முடி, குச்சி) ஆகும். இது போலவே, பொது நரம்பு மண்டலத்தில் ஏற்படும் தொற்று, கல்லீரல் கோளாறு, மூளைக்காய்ச்சல், நுரையீரல் நோய்த் தொற்று, கணைய அழற்சி, குடல் அடைப்பு மற்றும் கட்டிகளினாலும் விக்கல் உண்டாகலாம்.
இதுபோலவே, சிறுநீரகம் சரியாக வேலை செய்யாது பாதிக்கப்பட்ட நிலையில், இரத்தத்தில் யூரியா உப்பு அதிகமானாலும் அல்லது உடலில் போதுமான அளவு கரியமில வாயு இல்லாதபோதும் விக்கல் ஏற்படலாம். சில சமயங்களில், மயக்க மருந்து கொடுத்து அறுவைச் சிகிச்சை செய்த பின் விக்கல் ஏற்படுகிறது. வலி நிவாரணி மாத்திரைகள், ஸ்டீராய்டு மாத்திரைகளும் விக்கலை உண்டாக்கும்.
பொதுவாக, மது அருந்துபவர்களுக்கும் மற்றும் புகையிலை போடுகிறவர்களுக்கும், அவற்றை உபயோகிக்காதவர்களைக் காட்டிலும் சற்று கூடுதலாகவே விக்கல் உண்டாகிறது. மேலும், பெண்களைவிட ஆண்களுக்கு நீண்ட நேரம் நீடிக்கும் விக்கல் ஏற்படுகிறது.
விக்கல் 48 மணி நேரத்திற்குப் பிறகும் நீடித்தால், மருத்துவம் தேவை. இல்லையேல் வீட்டு மருத்துவம் பல நேரங்களில் உதவும். அவையாவன: 1.ஒரு டீஸ்பூன் சீனியை விழுங்குதல். 2. ஒரு பாலித்தீன் பையினுள் பெருமூச்சை விட்டு விட்டு இழுத்தல். 3. ஜில் என்று ஒரு குவளைத் தண்ணீர் குடித்தல். 4. பத்து எண்ணும் வரை மூச்சடக்குதல் -ஆகும். இவற்றில் விக்கல் நிற்காமல் 48 மணி நேரத்திற்குப் பிறகும் தொடர்ந்தால், மருத்துவர் உதவியுடன் சிறுநீரகம், தொற்று மற்றும் கட்டிகளை அறிய இரத்தப் பரிசோதனைகளுடன் மார்பு எக்ஸ்ரே, இசிஜி மற்றும் காது பரிசோதனையும் அவசியம்.