அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி என்பது அசல் சந்தர்ப்பவாத கூட்டணியே செல்வப் பெருந்தகை அறிக்கை

Viduthalai
2 Min Read

சென்னை, ஏப். 13- “கடந்த காலங்களில் மகாராட்டிராவில் சிவசேனாவோடு பாஜக கூட்டணி வைத்தது, பீகாரில், நிதிஷ்குமாரோடு ஒன்றுபட்ட அய்க்கிய ஜனதா தளத்தோடு கூட்டணி வைத்தது, அதனால் அந்த இரண்டு கட்சிகளும் பிளவை சந்தித்து இன்றைக்கு பாஜகவால் கபளீகரம் செய்யப்பட்டு கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. அதைப் போல அதிமுகவையும் அமித்ஷா கபளீகரம் செய்கிற முயற்சிக்கு எடப்பாடி பலியாகி இருக்கிறார்” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.

நெருக்கடிகள்
இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:
பல்வேறு திரைமறைவு நெருக்கடி களுக்கு பின்னாலும், அரசியல் இடைத் தரகர்களின் தீவிர பேரங்களுக்குப் பிறகும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்திருக்கிறது. இந்த கூட்டணியை அமைப்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்து பத்திரிகையாளர் சந்திப்பில் கூட்டணியை அறிவித்திருக்கிறார். பலமுறை தள்ளி வைக்கப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பு மாலை 3 மணிக்குத் தான் நடைபெற்றது.

சந்தர்ப்பவாதம்
பாஜக, அதிமுக கூட்டணி அப்பட்டமான ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. ஒரு கொள்கையற்ற கூட்டணி என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. பாஜகவின் செயல் திட்டங்களில் பலவற்றை அதிமுக ஏற்கப் போகிறதா? இல்லையா என்பதை தெளிவுபடுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பாஜக அரசின் நீட் தேர்வு திணிப்பு, மும்மொழி திட்டம் திணிப்பு, புதிய கல்விக் கொள்கை மூலமாக இந்தியை திணிக்கும் பி.எம்.சிறீ. பள்ளிகளை திறப்பது, மக்களவை தொகுதி சீரமைப்பில் தமிழ்நாடு எதிர்கொள்ள இருக்கும் பாதிப்பு, நிதிப் பகிர்வில் தமிழ்நாடு புறக்கணிப்பு; வெள்ள நிவாரண நிதியில் பழிவாங்கும் போக்கு, மும்மொழித் திட்டத்தை ஏற்காததால் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்திற்கு ரூபாய் 2132 கோடி வழங்காததால் 8 மாதங்களாக ஊதியம் தர முடியாத நெருக்கடி, இதனால் 40 லட்சம் மாணவர்கள் பாதிப்பு, ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே கலாச்சாரம், சிறுபான்மையின மக்களின் சொத்துகளை பறிக்கும் வக்பு சட்டத் திருத்தம், சிறுபான்மையின மக்களின் உரிமைகளை பறிக்கும் குடியுரிமை சட்ட திருத்தம், 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி மறுப்பு.

தோல்வி நிச்சயம்
தமிழ்நாட்டில் உரிமைகளை பாதுகாக்கிற மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துகிற மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கு மக்கள் பேராதரவை வழங்கியிருக்கிறார்கள். தலைவர் ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் இணைந்த தலைமை மீது தமிழ்நாட்டு மக்கள் அளவற்ற நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள்.
இந்தியா கூட்டணி என்பது தமிழ்நாட்டின் நலன் சார்ந்த கொள்கை கூட்டணி. இந்தியா கூட்டணி கட்டுக்கோப்பாக ஒருமித்த குரலில் செயல்பட்டு வருகிறது.
அரசியல் சுயநலத்தின் அடிப்படையில் வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை போன்றவற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அதிமுக, இன்றைக்கு பாஜகவிடம் சரணடைந்து அமைத்திருக்கிற சந்தர்ப்பவாத கூட்டணியை 2026 சட்டமன்றத் தேர்தலில், மக்கள் படுதோல்வியடையச் செய்து நிச்சயம் உரிய பாடத்தை புகட்டு வார்கள். இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *