பி.பி.மண்டல இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சமூகச் சீர்திருத்தவாதி ஆவார். இவர் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் குழுவின் தலைவராக இருந்தவர். பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய இட ஒதுக்கீட்டுப் பரிந்துரைகளை இந்தக் குழு இந்திய நடுவணரசுக்குச் சமர்ப்பித்தது.
பி.பி.மண்டல் வடக்குப் பீகாரில் சகர்சா என்னும் பகுதியில் வசதிமிக்க ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் தலைமையிலான ஆணையம் இந்தியாவில் சமூக மற்றும் கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை (Other Backward Classes – OBC) அடையாளம் கண்டு அவர்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகளை பரிந்துரை செய்தது நாடு முழுவதும் கள ஆய்வுகள், மக்கள் தொகை தரவுகள் மற்றும் சமூக-பொருளாதார புள்ளிவிவரங்களைப் பயன்படுத்தி அறிக்கை தயாரிக்கப்பட்டது. சமூக, கல்வி, பொருளாதார அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளம் காண 11 அளவுகோல்கள் (Criteria) உருவாக்கப்பட்டன.
முக்கிய பரிந்துரைகள்:
வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு: ஒன்றிய மற்றும் மாநில அரசு வேலைகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு.
கல்வி இடஒதுக்கீடு: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் ஓபிசி-களுக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு. பிற்படுத்தப்பட்ட வகுப்பு பட்டியல்: ஓபிசி-களை அடையாளப்படுத்தி, அவர்களை ஒரு தனி பட்டியலாக வகைப்படுத்துதல். பொருளாதார உதவி: ஓபிசி-களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கு கடன், பயிற்சி, மற்றும் தொழில் திட்டங்கள்.
கண்காணிப்பு அமைப்பு: இடஒதுக்கீடு செயல்பாட்டை மேற்பார்வையிட தனி ஆணையம் அமைக்க பரிந்துரை.
டிசம்பர் 1980-இல் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த ஆணையம் மொத்தம் 3743 ஜாதிகளை சமூக, கல்வி அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோராக அடையாளம் கண்டு, மக்கள் தொகையில் 52 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) இருப்பதாக மதிப்பிட்டது.
1990ஆம் ஆண்டு வி.பி.சிங் அரசால் மண்டல் ஆணையப் பரிந்துரைகள் ஏற்கப்பட்டது. 1993இல் ஒன்றிய அரசு வேலைகளில் 27 சதவீதம் ஓபிசி இடஒதுக்கீடாக செயல்படுத்தப்பட்டது.
“நான் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் அல்ல, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் உங்களிடம் பேசுகிறேன். நாங்கள் தரப்போகும் அறிக்கை நீங்கள் எப்படி எதிர்பார்க்கிறீர்களோ அப்படி அமையப் போவது உறுதி.
ஆனால், அதிகார வர்க்கமாக இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் கூட்டம் எல்லாம் உயர்ஜாதிக்காரர்கள் தான் என்பதை மறந்து விடாதீர்கள்!
அந்த அதிகார வர்க்கம் இந்த அறிக்கையை செயல்படுத்த விடாமல்தான் முட்டுக்கட்டை போடும். அதை செயல்படுத்த செய்ய வேண்டிய பொறுப்பு உங்கள் கையில்தான் இருக்கிறது.
பெரியார் பிறந்த மண்ணில் தோன்றிய நீங்கள் அந்த எண்ணவோட்டத்தை உருவாக்க வேண்டிய சக்தியை பெற்றிருக்கிறீர்கள். இது பெரியாரின் மண். இந்த மண்ணில் நான் ஏராளமாக தெரிந்து கொள்ள வந்திருக்கிறேன்.”
இதன்மூலம் பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் புதிய வாய்ப்புகள், அரசியல் முக்கியத்துவம் ஆகியன கிடைத்தன. மண்டல் ஆணைக்குழு இந்தியாவின் சமூக நீதி மற்றும் இடஒதுக்கீடு கொள்கைகளில் மிக முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தியது.