திராவிடர் கழகத் தலைவர் அறிக்கை
இந்தியா என்ற நாடு உருவாகி 46 ஆண்டுகளுக்குப் பிறகு (1993இல்) பிற்படுத்தப்பட்டோருக்கு விடுதலை கிடைத்தது மண்டல் கமிஷன் அறிக்கையினால்தான்!
பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளை வழங்காமல், ‘சமூக ரீதியாக, கல்வி ரீதியாகப் பிற்படுத்தப்பட்டோர் யார் என்பதை அடையாளம் காணாமல் எப்படி வழங்குவது’ என்று அதற்குக் காரணம் மட்டுமே காட்டிக் கொண்டிருந்த வேளையில், 1979-இல் அமைக்கப்பட்ட பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் (B.P.Mandala) தலைமையிலான ஆணையம்தான் பெரும் பணியாற்றி, இந்தியா முழுமையும் உள்ள பிற்படுத்தப்பட்டோரை அடையாளம் கண்டது.
பிற்படுத்தப்பட்டோருக்குக் குறைந்தபட்சம் 27% இட ஒதுக்கீடேனும் வழங்கப்பட வேண்டும் என்னும் நோக்கில் அவர் வழங்கிய பரிந்துரையை சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள் ஏற்றுக் கொண்டு பிற்படுத்தப்பட்டோர் வாழ்வில் ஒளி ஏற்றினார்.
திராவிடர் கழகம் இதற்காக நடத்திய 16 போராட்டங்களும், 42 மாநாடுகளும், எண்ணற்ற கருத்தரங்குகளும், பொதுக்கூட்டங்களும், பிரச்சாரப் பயணங்களும், வடபுலத்துத் தலைவர்களையெல்லாம் அணிதிரட்டித் தெளிவூட்டிய பணிகளும் சமூகநீதி வரலாற்றில் பலரும் படிக்க வேண்டிய பாடமாகும். “காகா கலேல்கர் தலைமையிலான முதல் பிற்படுத்தப்பட்டோர் கமிஷனுக்கு ஏற்பட்ட நிலை இதற்கும் ஏற்பட்டுவிடக் கூடாது; இதை நிறைவேற்றுவது பெரியார் பிறந்த மண்ணால், திராவிடர் கழகத்தால் மட்டுமே முடியும்” என்று வெளிப்படையாகவே சொன்னார். அவர் நம்மீது கொண்ட நம்பிக்கையை அயராத் தொடர் நடவடிக்கைகள், செயல்பாடுகள் மூலம் திராவிடர் கழகம் வென்று காட்டியது.
மண்டல் ஆணையம் வழங்கிய 13 பரிந்துரைகளில், பதவி உயர்வில் இட ஒதுக்கீடு உள்பட நடைமுறைக்கு வரவேண்டிய சமூக நீதித் திட்டங்கள் இன்னும் எஞ்சியுள்ளன.
மண்டல் அவர்களின் நினைவு நாளான இன்று (13.04.2025) சமூகநீதித் திசையில் நாம் மேற்கொள்ள வேண்டிய நெடும்பயணத்துக்கான சூளுரை ஏற்போம்!
கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
13.4.2025 –