ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாகவும் சுயராஜ்யக் கட்சி யின் சார்பாகவும், சென்னையிலே சின்னாட்களாக தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் வெகு மும்முரமாக நடைபெறுகின்றன. அவற்றுள் சுயராஜ்யக் கட்சியின் சார்பாக நடப்பவற்றிக்குப் பொது ஜனங்கள் கூட்டம் அருகி ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக நடப்ப வற்றிற்குப் பெருகி வருகின்றன.
எனவே, இப்போது நடக்கும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களுள் தலைசிறந்து மிளிர்வது ஜஸ்டிஸ் கட்சியினருடையதே. ஆதலால் கூட்டம் கூட்டக் கூடாதென உத்தரவு ஏதேனும் பிறக்குமேல் அது ஜஸ்டிஸ் கட்சியின் கூட்டத்தைப் பாதிப்பதாகவே யிருக்கும். ஏனெனில் முற்கூறியது போன்று சுயராஜ் யக் கட்சியின் கூட்டத்தைக் கண்டு மதிப்பாருமில்லை, மகிழ்வாருமில்லை. இவ்வாறிருக்க, சென்னை நகர போலீஸ் கமிஷனர். “சென்னை நகர எல்லைக்குட் பட்ட எந்தத் தெருவிலும், வீதியிலும், தெரு மூலையிலும், ரஸ்தா மூலையிலும், பொதுமக்கள் நடமாடும் எந்த ராஜபாட்டையிலும், பொதுஜன நடமாட்டத் திற்குத் தடையாயிருக்கக் கூடிய வேறெந்த பொது இடத்திலும் தேர்தல் கூட்டங்களோ ஊர்வலங்களோ நடத்த இனி அனுமதிக்க முடியாது”
என்றதொரு தடை உத்தரவை பிறப்புவித்திருக்கின்றார். ஆனால், இத்தடை உத்தரவிற்கு ‘ஜஸ்டிஸ்’, ‘திராவிடன்’ ஆகிய இரு பத்திரிகைகளும் ஆதரவு கூறுகின்றன. இவைகள் ஆதரவு கூறுவது, எக்காரணம் பற்றியே யாயினும் “யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது” போன்றிருக்கிறது என்பதே நமது கருத்து.
தடை உத்தரவு
ஏனெனில் நாம் முன்பே கூறியிருப்பது போல் சுயராஜ்யக் கட்சிக்கு சார்பாகக் கூட்டம் சேருவது மில்லை; கூடும் சிறு கூட்டமும் அமைதியோடு கலைவதுமில்லை. ஆனால் ஜஸ்டிஸ் கட்சியின் பிரசங்கங்களிலோ ஆயிரக்கணக்கான ஜனங்கள் வந்து கூடுவதும் பொறுப்பு வாய்ந்த பிரமுகர்களும், பெரிய மனிதர்களும் பேசிவருவதுமாகயிருக்கின்றனர். இம்மட்டோ! காங்கிரஸி லிருந்து தேசத்திற்காக எவ்வளவோ அருந் தியாகமும் பெருந் தொண்டும் ஆற்றிவந்த திருவாளர்கள் ஆரியா, சக்கரைச் செட்டியார், இராமசாமி நாயக்கர், கலியாணசுந்தர முதலியார், டாக்டர் வரதராஜூலு நாயுடுகார், தண்டபாணி பிள்ளை, இராமநாதன், சின்னையாபிள்ளை, மௌலானா சாகிப் போன்ற நவமணிகளும் ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக பேசப்போகுங் காலம் சமீபித்துவிடவே போலீஸ் இலாக்கா நிர்வாகம் மைலாப்பூர் கோஷ்டியாரின் இனத்தவர் கையிலிருப்பதால் இவர்களெல்லாம் அய்யங்கார் கட்சிக்கு ஆதரவு கூற வேண்டும். அப்படியல்லாமல் ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாகப் பேசினால் 144-வது பிரிவின் படி தடை உத்திரவு போடுவேன் என்று சொல்லுவதற்கு பதிலாகயிருப்பது போன்ற இத்தகைய உத்தரவை போலீஸ் கமிஷனர் பிறப்பித்து விட்டார். இச்சட்டம் பார்ப்பனர்களுக்கு உதவி செய்வதாய் இருந்தாலும் “கோழித் திருடியும் கூடக் குலாவுவது போல்” ‘சுதேசமித்திரன்’ இவ்வுத்திரவைக் கண்டிக்கிறான். இத்தடை உத்தரவைக் கொண்டு ‘மித்திரன்’ அடங்கா மகிழ்வு கொள்ள வேண்டியதிருக்க மாயக்கண்ணீர் விடுவது பொதுமக்களை ஏமாற்றுதற்கேயன்றி வேறல்ல.
இனி, ஜஸ்டிஸ் கட்சியார் வாளாக் கிடத்தலாகாது. கட்டிடங்களுக்குள்ளும் சுற்றாலைச் சுவர்களுக்குள்ளும் கூட்டம் நிகழ்த்துவதோடு மட்டும் நில்லாது ஜஸ்டிஸ் கட்சியார் செய்த நன்மைகளையும் சுயராஜ்யக் கட்சியின் பொய்மைகளையும் எழுதி பதினா யிரக்கணக்கான துண்டுப்பிரதிகளும் துண்டுப் புத்தகங்களையும் அச்சிறுத்தி ஒவ்வொரு வீடு தோறும் வழங்க வேண்டுமென்பதாக ஜஸ்டிஸ் கட்சியாருக்கு நினைவூட்டுகிறோம்.
– குடிஅரசு, – துணைத்தலையங்கம், 18.07.1926