மயிலாடுதுறை, ஏப்.12- மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு தகுதியான இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் எச்.எஸ்.சிறீகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் முதலமைச்சர் மாநில இளைஞர் விருது ஆண்டுதோறும் சுதந்திர நாளன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள், 3 பெண்களுக்கு வழங்கப்படுகிறது. விருது ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவைகளை உள்ளடக்கியதாகும். அதன்படி, நிகழாண்டுக்கான விருது ஆக.15-ஆம் தேதி நடைபெறும் சுதந்திர நாள் விழாவில் வழங்கப்படவுள்ளது.
இவ்விருதுக்கு 2024-ஆம் ஆண்டு ஏப்.1 முதல் 2025-ஆம் ஆண்டு மார்ச் 31 வரை மேற்கொள்ளப்பட்ட தொண்டுகள் மட்டும் கருத்தில் கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் சமுதாயம்/சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உண்டாக்கியதாக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு இணையம் இணையதளத்தில் ஆன்லைன் மூலம் மே 3-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை உரிய இணைப்புகளுடன் இணைய தளத்திலும், விண்ணப்பத்தின் 3 நகல்களை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மயிலாடுதுறை அலுவலகத்தில் நேரடியாக வழங்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தொலைபேசி எண்: 7401703459 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேயர் ஆர்.பிரியா
சென்னை, ஏப்.12- சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி மணலி மற்றும் மாதவரம் மண்டலங்களுக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா 11.4.2025 அன்று களஆய்வு மேற்கொண்டார் அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில், மாநகராட்சி பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டமைப்புகள், பள்ளிகளின் செயல்பாடுகள், மாணவர்களின் கல்வித்திறன் செயல்பாடு குறித்து பொதுமக்களிடம் எடுத்துக்கூறி, மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் மாநகராட்சி பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்து அப்பள்ளிகளில் பயின்றுவரும் மாணவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன என்றார் அவர்.