சென்னை,ஏப்.12- தன்னிடம் செயின் பறித்து தப்ப முயன்ற கொள்ளையனை இளம் பெண் ஒருவர் துணிச்சலாக பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளார். அவரை பொதுமக்களும், காவல் துறையினரும் வெகுவாகப் பாராட்டினர்.
திருச்சியைச் சேர்ந்தவர் யோகராணி (26). இவர் சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள அவரது அக்கா வீட்டில் தங்கியிருந்து வள்ளுவர் கோட்டத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்து வருகிறார். 10.4.2025 அன்று இரவு பணி முடிந்து வடபழனியில் உள்ள கோயில் ஒன்றுக்கு சென்றுவிட்டு, தியாகராயர் நகர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார்.
மடக்கிப் பிடித்தார்
அப்போது, அந்த வழியாக வந்த ஒருவர், திடீரென யோகராணி கழுத்தில் அணிந்திருந்த 10.8 கிராம் எடையுள்ள தங்கச் செயினை பறித்துவிட்டு தப்ப முயன்றார். உடனே யோகராணி தனது கழுத்தில் கிடந்த நகையை ஒரு கையால் இறுக பிடித்துக் கொண்டு மற்றொரு கையால் கொள்ளையனை மடக்கி, `திருடன்.. திருடன்..’ எனக் கூச்சலிட்டார்.
அவரின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் விரைந்து சென்று கொள்ளையனை சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர், அவரை மாம்பலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல் துறையினரின் விசாரணையில் பிடிபட்டது சைதாப்பேட்டை, சிஅய்டி நகர், 2-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த ராஜா (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கொள்ளையனை தைரியமாக பிடித்த துணிச்சல் பெண் யோகராணியை பொதுமக்கள் மட்டுமின்றி காவல் துறையினரும் வெகுவாகப் பாராட்டினர்