சென்னை, ஏப்.12- ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் ஆகியோர் 10.4.2025 அன்று சந்தித்தனர்.
பின்னர் பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி வருமாறு:-
ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் வைத்திருந்த 10 சட்ட மசோதாக்கள் தொடர்பாக உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி உள்ளது. அதற்கு முதலமைச்சருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் நேரில் சந்தித்து தெரிவித்தோம்.
சட்ட மசோதாக்களை ஆளுநர் முடக்கி வைத்தது சட்டவிரோதம் என்று சொன்னது மட்டுமல்லாமல், அந்த மசோதாக்கள் அனைத்திற்கும் உச்சநீதிமன்றமே நேரடியாக ஒப்புதல் வழங்கி இருப்பது வரலாற்றில் இதுவரை நடந்திராத மிகப்பெரிய சிறப்பு அம்சம்.
முறையானதல்ல…
சட்டமன்ற உரிமைகளையும், கூட்டாட்சி தத்துவத்தையும் பாதுகாக்கக்கூடிய இந்தத் தீர்ப்பு, இந்தியாவிற்கே கிடைத்திருக்கும் ஒரு வரப்பிரசாதம். அரசியல் சாசனத்திற்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார்.
அவர் இனி மேலும் பதவியில் நீடிப்பது எந்த வகையிலும் முறையற்றது. அவரை உடனடியாக ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்.மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டதற்காகவும், சென்னையில் காரல் மார்க்சுக்கு சிலை அமைக்கப்படும் என்று அறிவித்ததற்காகவும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தோம்.
பா.ஜனதா கட்சியின் தலையாட்டி பொம்மையாக அ.தி.மு.க. மாறிவிட்டது. மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால், நீட் தேர்வு தொடர்பான அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க. கலந்து கொண்டிருக்கும். ரகசிய பேரம் பேசும் நிலையில் அரசியல் தேவைக்காக மக்கள் நலனை காவு கொடுக்கின்றனர்.
சாம்சங் நிறுவனம், முக்கிய தொழிற்சங்கங்களை அங்கீகரித்து சுமுகமான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தொழிலாளர்கள் போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதரிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.