சென்னை, ஏப்.12- பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தமிழ் நாட்டுக்கு அதிமுக செய்த மிகப் பெரிய துரோகம் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
அதிமுக செய்ததது
பெரிய துரோகம்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக துணை பொதுச் செயலாளரும், எம்.பியுமான கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“தமிழ்நாட்டு மக்களுக்கு இழைக்கக் கூடிய மிகப் பெரிய துரோகமாக அதிமுக – பாஜக கூட்டணி அமைந்திருக்கிறது. தேர்தலில் இந்தக் கூட்டணிக்கு மக்கள் தகுந்த பாடத்தை கற்றுத் தருவார்கள். பழனிசாமிக்கு பேசக் கூடிய உரிமை கூட இல்லாமல் கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக அரசு கொண்டுவந்த மக்களுக்கு எதிரான பல்வேறு மசோதாக்களையும், திட்டங் களையும் எதிர்ப்பதாக சொன்ன அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமித் ஷாவுடன் ஒரே மேடையில் மவுனமாக அமர்ந்து, பாஜக – அதிமுக கூட்டணியை ஆமோதித்து ஏற்றுக் கொண்டதை பார்க்க முடிந்தது. அதிமுகவுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் இழைக்கக் கூடிய மிகப் பெரிய துரோகமாக இந்த கூட்டணி அமைந்து இருக்கிறது.
பாஜகவும், அதிமுகவும் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்கள் என பலமுறை தமிழ்நாடு முதலமைச்சர் கூறி வந்தார். இந்தக் கூட்டணி மீண்டும் உருவாகும் என்பதை பல முறை சுட்டிக் காட்டி இருந்தார். அது இன்று உண்மை ஆகியிருக்கிறது. இது இன்று பட்டவர்த்தனமாக தெளிவாக தெரிய வந்திருக்கிறது. மக்களை வெகுநாள் ஏமாற்ற முடியாமல், கூட்டணியை இன்று வெளிப்படையாக அறிவிக்கக்கூடிய நிர்பந்தத்துக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்கள்,” என்றார்.
அப்போது, தமிழ்மொழிக்கு திமுக செய்த தொண்டை பட்டியலிட முடியுமா என உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்கிறாரே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “காசி தமிழ்ச் சங்கமம் நடத்துவதை தமிழுக்கு தாங்கள் செய்துள்ள மிகப் பெரிய தொண்டாக சொல்கிறார்கள்.
தமிழ் மொழி மூலம் காசிக்கு செய்துள்ள நன்மையாகத்தான் இதனைப் பார்க்க வேண்டும். இதனால் தமிழ் எப்படி வளரும் எனத் தெரியவில்லை. சமஸ்கிருதத்துக்கு 2,400 கோடி ரூபாய் ஒன்றிய அரசு நிதி ஒதுக்கி செலவு செய்கிறது. ஆனால், தமிழுக்கு 100 கோடி ரூபாய் கூட ஒதுக்குவதில்லை என முதலமைச்சர் சொல்லி இருக்கிறார்.
இப்படி பாரபட்சமாக நடந்து கொள்ள கூடிய ஆட்சிதான் ஒன்றிய பாஜக ஆட்சி. தமிழ்நாட்டில் செயல்படும் கேந்திரிய வித்யாலா பள்ளிகளில், தமிழ் பயிற்றுவிக்க ஆசிரியர்களை அமைக்காத ஒன்றிய அரசு, தமிழுக்கு பெரிதாக என்னத் தொண்டு செய்து இருக்கிறது? பிரதமர் மோடி சில மேடைகளில் திருக்குறளை சொல்லுவதும் நிதி அமைச்சர் திருக்குறளை மேற்கோள் காட்டுவதும் தமிழ் வளர்ச்சிக்கான முயற்சியாக எடுத்துக் கொள்ள முடியாது. ஹிந்தியை திணிப்பதைத்தான் அவர்கள் செயல்படுத்தி வருகிறார்கள்.
இவ்வாறு கனிமொழி எம்.பி. கூறினார்.