கேள்வி 1: தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றிய மசோதாவை நிறுத்திவைக்க ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை, அவரது செயல் சட்ட விரோதம் என்று உச்ச நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியதோடு, மேலும் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கியும் நீதிபதிகள் உத்தரவிட்டிருப்பது ஆளுநர் ஆர்.என். ரவியின் ஏதேச்சதிகார- சர்வாதிகாரப் போக்கிற்கு மரண அடி என்று கருதலாமா?
– சீதாலட்சுமி, திண்டிவனம்.
பதில் 1: ஆம், நிச்சயமாக. நாம் மட்டும் இதை இப்படிக் கூறவில்லை; ஊரே, உலகமே – குறிப்பாக நியாய உலகம் முழுமையுமே கூறுகிறதே!
“திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?” என்ற இசைப்பாட்டு (எம்ஜிஆருடையது) காதில் ஒலிக்கிறது.
– – – – –
கேள்வி 2: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலியாக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருவதற்கு உரிய பலன் கிட்டுமா?
– த.புகழேந்தி, பூந்தமல்லி.
பதில் 2: நாணயமான அரசியல்வாதிகள் தங்கள் தவறைத் திருத்தி வாழவே முயலுவர். இவர்கள் ரகம் போகப் போகப் புரியும்!
– – – – –
கேள்வி 3: “வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை ஏற்க மறுப்பவர்கள் தேசத் துரோகிகளாகக் கருதப்படுவார்கள்” என்று பீகார் துணை முதலமைச்சர் விஜய் குமார் சின்ஹா கூறியிருப்பது ஜனநாயக சக்திகளுக்கு விடுக்கும் அச்சுறுத்தல் ஆகாதா?
– கு.கணேஷ், கடப்பாக்கம்.
பதில் 3: நாடக ராஜாக்கள் – சில மணிநேரம் பேசும் வசனம்போல, இன்னும் சில மாதங்கள் வரை தான் துணை முதலமைச்சர் பதவி இவருக்கு. அதுவரை இதுபோன்ற ‘வீர வஜனம்’ பேசலாம் – இந்த அவர்களது தெருக்கூத்தில்!
– – – – –
கேள்வி 4: “திமுகவை வீழ்த்திவிட்டால் திராவிடத்தை எளிதாக வீழ்த்திவிடலாம் என்ற இன எதிரிகளின் கனவு வி.சி.க. இருக்கும் வரை பலிக்காது” என்று உரக்க முழக்கமிட்டுள்ள வி.சி.க. தலைவர் தொல்.திருமாவளவனின் உறுதிப்பாட்டை கையொலி எழுப்பிப் பாராட்டலாம் அல்லவா?
– இ.தனசேகரன், அரூர்.
பதில் 4: நிச்சயமாக; பலத்த கர ஒலி எழுப்புங்கள். அது அவருக்கும், அவரது கட்சிக்கும் ஊக்க மாத்திரையாகும்!
– – – – –
கேள்வி 5: எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புகளைப் புறந்தள்ளி, வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அனுமதி அளித்தது ஏற்புடையதா?
– அ.ஷெரிப், கூடுவாஞ்சேரி.
பதில் 5: இன்றைய அரசியலில் ரப்பர் ஸ்டாம்ப் பதவிகளுக்கு உள்ள சக்தியில் இதைத் தவிர வேறு என்ன எதை எதிர்பார்க்க முடியும்? பாவம் – பரிதாபத்திற்குரிய அவரது நிலை!
– – – – –
கேள்வி 6: இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் 9.69 சதவீத வளர்ச்சியுடன் புதிய உச்சத்தை தொட்டுள்ள மாநிலம் தமிழ்நாடு என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சிக்கு சூட்டிய மணிமகுடம் என்று ஒவ்வொரு தமிழரும் பெருமிதம் அடையலாம் அல்லவா?
-க.கண்மணி, காஞ்சிபுரம்
பதில் 6: தமிழர்கள் மட்டுமல்ல; மாநில உரிமை, மாநிலக் கட்சிகள் எனப்படுபவை, எதிர்க்கட்சிகளான இந்தியா கூட்டணி உள்பட எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும் – வழிகாட்டும் சிறந்த அரசியல், நிதி ஆளுமைக்கான சான்று ஆகும்!
– – – – –
கேள்வி 7: எதிர்காலத்தில் பிற சமூகங்களை குறிவைப்பதற்கான முன்னோடியாக வக்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு இருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டி இருப்பது நூற்றுக்கு நூறு உண்மை என்று எடுத்துக் கொள்ளலாமா?
– எஸ்.இராபர்ட், பள்ளிக்கரணை.
பதில் 7: ராகுல் காந்தி அவர்கள் பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் – காங்கிரஸ் பேரியக்கத்தின் ஆற்றல்மிகு ஆளுமை என்பதற்கும் அப்பாற்பட்டு, இன்றைய ஆட்சியாளர்கள் ‘எஜமானன்’ போன்ற ஆர்.எஸ்.எஸ். காட்டும் வழியில் செயல்படுவதுதான் மோடி அரசின் வேலை என்கிறபோது, பொறுப்புணர்வோடு ராகுல்காந்தி எடுத்துக்காட்டியுள்ளபடி, அடுத்து கிறிஸ்துவர்கள் சொத்து பற்றிய நடவடிக்கைகளில் கவனம் திரும்பும் வகையில் தாக்கீது போன்ற கட்டுரை வெளிவந்துள்ளதே! அது பின்னே வருவதற்கு முன்னோட்ட மணியோசைதானே!
– – – – –
கேள்வி 8: “ஆளுநருக்கு சுய முடிவு எடுக்கும் அதிகாரம் கிடையாது” என்று உச்ச நீதிமன்றம் ஓங்கி உரைத்துள்ள நிலையில், இனியாவது ஆளுநர்கள் தன்னிச்சையாக செயல்படாமல் அந்தந்த மாநில அரசுகளுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிப்பார்கள் என்று நம்பலாமா?
– ச.சாந்தி, நாமக்கல்.
பதில் 8: அது உச்சநீதிமன்றத்தின் பரிந்துரை அல்ல; அத்தீர்ப்பு அரசமைப்புச் சட்டப்படியான தீர்ப்பு – ஆணை. கடைப்பிடிக்க மறுத்தால் மறுப்பவர் விளைவுகளை சந்திக்கக் கடும் விலை கொடுத்தாக வேண்டும் என்பதே சட்டம்.
– – – – –
கேள்வி 9: தங்களின் இனிய நண்பர் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்களின் மறைவு
தங்களை எந்த வகையில் பாதித்தது?
– க.மோகன்காந்தி, செய்யாறு.
பதில் 9: வெகுவாக பாதித்தது; ஒத்த வயதுள்ளவர் (சில மாதங்கள் மூத்தவர்) – 60 ஆண்டுகால ‘அகநக நட்பு’! பழைய நட்பு வட்டம் வெகுவாகச் சுருங்கும் போதெல்லாம் நமது மகிழ்ச்சி, தெம்பில் பல பகுதி காணாமற் போய்விடுகிறதே என்ற வேதனை – காலம்தான் அதனை மாற்ற முடியும்!
– – – – –
கேள்வி 10: “உச்ச நீதிமன்றத்தில் வாதாடி-போராடி உயர்க்கல்வி உரிமையை தமிழ்நாட்டு முதலமைச்சர் சமூகநீதியின் சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெற்றுத் தந்திருக்கிறார்” என்று கவிஞர் வைரமுத்து தமது ‘எக்ஸ்’ தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பது தமிழ்நாட்டு மாணவர்களை மட்டுமன்றி இந்தியாவில் உள்ள அனைத்து மாணவர்களையும், பெற்றோர்களையும் மகிழ்ச்சியில் திளைக்க வைக்கும் அல்லவா?
– யாழ்நிலா, கும்பகோணம்.
பதில் 10: வருங்காலத்திற்கும் பற்பல எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கும் இது ஓர் அருமையான அரசியல் எழுச்சிப் படலத்தின் விடியல்.
ஆளுநர்களை ஒன்றிய அரசு இனி தடுப்புகளாக – வம்படிகளாக மாற்ற முடியாத ஒரு நல்ல விடிவும் கூட!
எனவே, உயர்கல்வி உரிமையையும் தாண்டிய ஒரு பெரும் – பெரும் வெற்றி!