சாமியார்கள் அனைவரையுமே பணக்காரர்களாக்கி விடலாமே? என்று கேள்வி கேட்டவர் ஆபிரகாம் கோவூர்.
தோமஸ் ஆபிரகாம் கோவூர் (Thomas Abraham Kovoor, 1898–1978) இந்திய-இலங்கை பகுத்தறிவுவாதி (rationalist), பேராசிரியர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி – மூடநம்பிக்கைகள், மதச் சடங்குகள் மற்றும் அறிவியலுக்கு எதிரான கூற்றுகளை கடுமையாக எதிர்த்து சாமியார்களின் குட்டுக்களை அவர்களுக்கு முன்பாகவே உடைத்துக் கண்பித்தார்.
10.4.1898ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தார்.
முதலில் ஆசிரியராகப் பணியாற்றியவர் பின்னர் பகுத்தறிவு இயக்கத்தின் முன்னோடியாக திகழ்ந்தார்
இலங்கையிலும் இந்தியாவிலும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.
சாமியார்கள் வாயிலிருந்து மரகத லிங்கத்தை எடுப்பது – காற்றில் கையைச் சுற்றிவிட்டு தங்கச்செயினை வரவைப்பது, மற்றும் தேங்காயை உருளவைப்பது போன்ற ஏமாற்று வேலைகளை செய்து சாமியார்கள் தங்களுக்குச் தெய்வீக சக்திகள் இருப்பதாகக் கூறினால், அவற்றை எதிர்த்து அறிவியல் அடிப்படையில் சவால் விடுவார்.
வெற்று பாத்திரத்தில் புனிதநீர் என்று ஏமாற்றிய சாமியார் முன்பாகவே எளிய நீராவி குளிர்ந்து நீராக மாறுவதைத்தான் வெற்றுப்பாத்திரத்தில் தண்ணீர் வரவைக்கிறார்கள் என்பதை பொதுமகக்ள் முன்னிலையில் செய்து காட்டி சாமியார்களை ஓட ஓட விரட்டினார்.
நூல்கள்: அவர் “Begone Godmen!” (தமிழில் “சாமியார்களே விலகுங்கள்!”) போன்ற புத்தகங்களை எழுதினார், இதில் மதம் மற்றும் மூடநம்பிக்கைகளை விமர்சித்தார்.
தமிழ்நாட்டில், திராவிட இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் மத்தியில், அவரது பணி செல்வாக்கு பெற்றது. தந்தை பெரியார் போன்றவர்களின் சிந்தனைகளுடன் அவரது கருத்துகள் ஒத்துப்போனதால், அவரது பெயர் தமிழ்ச் சூழலில் அடிக்கடி குறிப்பிடப்படுகிறது.
லீலாவதி என்ற பெண்மணியின் கணவர் இங்கிலாந்திற்குச் சென்று அங்கு உலகப்போர் நடந்த போது கொல்லப்பட்டார் என்று செய்தி வந்தது, இதனை அடுத்து லீவாவதி உடல் நலமில்லாமல் போனார்.
லீலாவதியின் கணவர் தான் ஆவியாக வந்து அவரது உடலில் புகுந்துவிட்டார் என்று கதைவிட்டு இந்தியாவில் இருந்து சில சாமியார்கள் லீலாவதியின் செல்வந்த பெற்றோர்களிடம் பணம் பார்க்க முயன்றனர்.
இது தொடர்பாக அப்போது பேராசிரியராக இருந்த ஆபிரகாம் கோவூரிடம் லீலாவதியை மனநிலசிகிச்சைக்காக கொண்டு செல்லும்படி அவ்வூரில் உள்ள ஒருவர் கூறினார்.
இதனை அடுத்து லீலாவதி கோவூரிடம் அழைத்து வரப்பட்டார்.
மனநலம் தொடர்பான ஆலோசனைகளைக் கூறிய கோவூர், லீலாவதியின் உள்ளுணர்வுகளுக்குப் பல விடயங்களை விளக்கி இனிமேல் எதற்குமே பயப்படாமல் வாழும்படி நம்பிக்கையூட்டி சிகிச்சை அளித்தார்.
மேலும் லீலாவதி பெற்றோரிடம் இனிமேல் லீலாவதியின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு சாமியார்களை அணுகாமல் இருங்கள், அவரோடு அனைவரும் இனிமையாக பழகுங்கள், குடும்பத்தோடு உரையாடுங்கள் என்று அறிவுரை சொன்னார். பின்னர் லீலாவதி இயல்பு நிலைக்குத் திரும்பினார்.
இந்த நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு கோவூர் தனது நண்பர் பியதாசாவுடன் அக்மீமனைக்குச் சென்றார். அங்கு லீலாவதி குணமடைந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் லீலாவதி கடிதம் ஒன்றை கோவூருக்கு எழுதி இருந்தார். அதில் போரில் இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட எனது கணவர் சோமபாலா உயிருடன் வந்து விட்டார் என்பதுதான் அக்கடிதம் கூறிய தகவல்.
எதிரிகளால் சிறை பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்ததாகவும், போர் முடிந்து விடுதலை செய்யப்பட்ட பின்பு சோமபாலா இலங்கை திரும்பியுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கடிதம் கோவூருக்கு ஒரு வகையில் மகிழ்ச்சியையும், இன்னொருபுறம் வேதனையையும் கொடுத்தது.பிரிந்தவர் கூடியதை அறிந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தார். ஆனால், அதேசமயம் உயிருடன் இருப்பவனின் ஆவியே உலவுகிறது என்று கூறும் சாமியார்கள், அதை நம்பும் மக்களும் இருக்கிறார்களே என்று எண்ணி வருத்தமும் அடைந்தார்.