ஆளுநர் தொடர்பான தீர்ப்பை அடுத்து இந்தியன் எக்ஸ்பிரஸ் டில்லி பதிப்பில் வெளிவந்த ஆங்கிலத் தலையங்கத்தின் தமிழாக்கம்
முன்னுதாரணம்
தமிழ்நாடு ஆளுநருக்கு என்று வீட்டோ’ பவர் எல்லாம் கிடையாது அவரது செயல்பாடு சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்து, மசோதாக்களின் மீது நடவடிக்கை எடுக்க காலக்கெடு நிர்ணயித்ததில், உச்ச நீதிமன்றம் வரவேற்கத்தக்க முன்னுதாரணத்தை அமைத்துள்ளது
நாடு முழுவதும் உள்ள மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் இடையேயான உறவை மறுவடிவமைக்கும் ஒரு முடிவில், உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை வரம்புகளை மீறி தாமதப்படுத்தியதை கடுமையாக கண்டித்து, தனக்கு அனைத்து அதிகாரமும் உள்ளது என்று ஆளுநர் நினைப்பது “சட்டவிரோதமானது” மற்றும் “தவறானது” என்று விவரித்தது
அடிப்படை ஜனநாயகம்
“தி ஸ்டேட் ஆஃப் தமிழ்நாடு vs தி கவர்னர் ஆஃப் தமிழ்நாடு” வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு ஒரு அடிப்படை ஜனநாயக கொள்கையை மீண்டும் வலியுறுத்துகிறது: சட்டமன்றம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மூலம் வெளிப்படுத்தப்படும் மக்களின் விருப்பத்தை மதிக்க வேண்டும்.
பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் என்ற வருத்தத்திற்குரிய வகையில் உருவெடுத்துள்ள இந்த காலகட்டத்தில், நீதிமன்றம் வரவேற்கத்தக்க முன்னுதாரணத்தை அமைத்துள்ளது. ஆளுநர் அலுவலகம் அரசியலமைப்பு ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு நிகராக இருக்க முடியாது என்று அது தீர்ப்பளித்துள்ளது.
அதிகார வரம்பு
ஆளுநர்கள் அதிகார வரம்பு மீறுவது குறித்து நீதிமன்றம் எச்சரிக்கை செய்வது இது முதல் முறை அல்ல. 2023ஆம் ஆண்டில், ஸ்டேட் ஆஃப் பஞ்சாப் vs பிரின்சிபல் செக்ரட்டரி டு பஞ்சாப் கவர்னர் வழக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களின் மீது ஆளுநர்கள் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்க கடமைப்பட்டுள்ளனர் என்றும், நியாயப்படுத்த முடியாத காரணத்திற்காக ஒப்புதலை நிறுத்தி வைப்பது மக்களின் விருப்பத்தை குறைத்து மதிப்பிடுவதாகும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
முடிவெடுக்கும் அதிகாரம்
2023ஆம் ஆண்டில், ஆளுநர்களின் நடவடிக்கை யின்மை குறித்து உச்ச நீதிமன்றம் கடும் கவலை தெரிவித்த சில நாட்களுக்குப் பிறகு, ஆளுநர் ரவி மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட நிலுவையில் இருந்த 10 மசோதாக்களை திருப்பி அனுப்பியிருந்தார். ஊழலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள், பொதுப் பணியமர்த்தங்கள் மற்றும் மாநில பல்கலைக்கழகங்களின் நிர்வாகத்திற்கான திருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை இவை கையாண்டன.
ஆளுநர் உருவளவிலான தலைவராக இருந்தாலும், சட்டமன்ற செயல்முறைகளைத் தடுக்க முடியாது என்றும், அவரது அலுவலகத்தின் அதிகாரங்களை வரையறுக்கும் 200ஆவது சரத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியது. ஆளுநர் சில விருப்ப உரிமை அதிகாரங்களைக் கொண்டிருந்தாலும், முடிவெடுக்கும் அதிகாரம் முக்கியமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடம் உள்ளது என்பதை உறுதி செய்துள்ளது
ஆளுநர் ரவியால் நீண்ட காலமாக தாமதப்படுத்தப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அறிவிக்க, அரசியலமைப்பின் 142ஆவது சரத்தின் கீழ் உள்ள அதன் அதிகாரங்களையும் நீதிமன்றம் பயன்படுத்தியது.
முக்கியமாக, ஆளுநர்கள் எந்த காலவரையில் செயல்பட வேண்டும் என்பது குறித்த ஒரு தெளிவின் மையை இந்தத் தீர்ப்பு நிவர்த்தி செய்கிறது,
இதற்கு முன்பு கால வரை குறித்த எந்த ஒரு விதிமுறைகளும் இல்லா ததால் ஆளுநர்கள் மசோ தாக்களை காலவரையின்றி நிறுத்தி வைக்க அனுமதித்தது போல் தோன்றியது.
இப்போது ஒரு மசோதாவை சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்புவதற்கு அல்லது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பு வதற்கான காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது.
மாநில சட்டமன்றத்தால் மறுபரிசீலனை செய்யப் பட்ட பின் மீண்டும் சமர்ப்பிக்கப் பட்டால், ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறது. கேரளா மற்றும் தெலங்கானா போன்ற மாநிலங்களும் தங்கள் ஆளுநர்களின் தடைமுறை உத்திகள் மற்றும் அளவுக்கதிகமான தாமதங்கள் குறித்து குற்றம் சாட்டி நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில், தமிழ்நாடு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.
ஜனநாயக நிறுவனங்களின் நேர்மையைப் பாதுகாப்பதற்கும், மக்களின் விருப்பம் நிலைத்திருப்பதை உறுதி செய்வதற்கும் ஆளுநரின் பங்கு குறித்த இந்த தீர்ப்பு வரலாற்று சிறப்பு வாய்ந்தது ஆகும்.
(தமிழாக்கம்: சரவணா.)