தேவர்கள் என்றும், பல தெய்வங்கள் என்றும், அவற்றின் அவதாரமென்றும், உருவமென்றும், அதற்காக மதமென்றும், சமயமென்றும், மதாச்சாரியார்களென்றும், சமயாச்சாரிக ளென்றும் கட்டியழுபவர்கள் ஒன்று. பகுத்தறிவில்லாதவர் களாகவாவது அல்லது வயிற்றுப் பிழைப்பிற்குப் புறப்பட்ட புரட்டர்களாகவாவது இருக்க வேண்டும்.
அதுபோலவே, சிவன் என்றோ, விஷ்ணு என்றோ, பிரம்மா என்றோ அல்லது ஒரு ஆசாமி என்றோ அல்லது ஒரு உருவமென்றோ கொள்ளுவதும் உண்மை ஞானமற்றவர்களின் கொள்கை ஆகும்.
ஆதலால் உலகத் தோற்றமும், அதில் நடைபெறும் உற்பத்தி, வாழ்விப்பு, அழிப்பு என்பவைகளான மூவகைத் தன்மை களையும் மேற்படி ‘சாமி’களோ, ஆசாமி களோ, ஒவ்வொரு தன்மையை ஒவ்வொரு ஆசாமி நடத்துகிறான் என்றோ அல்லது ஒவ்வொரு தன்மைக்கும் ஒவ்வொரு ஆசாமி பொறுப்பாளியாய் இருக்கிறான் என்றோ நினைத்துக் கொண்டிருப்பவர்களை விசாரஞானமற்றவர்கள் என்றே சொல்ல வேண்டும்.
அந்தக் கடவுள் என்பவைகளுக்கு கண், மூக்கு, வாய், கால், கை, தலை, பெயர், ஆண் – பெண் தன்மை, பெண்சாதி – புருஷன், வைப்பாட்டி, தாசி, குழந்தை குட்டி, தாய் – தகப்பன் முதலியவைகளைக் கற்பித்து, அவைகளிடத்தில் பக்தி செய்ய வேண்டுமென்றும், அவற்றிற்கு கோவில் கட்டி, கும்பாபிஷேகம் செய்து தினம் பல வேளை பாலாபிஷேகம், படைப்பு, பூஜை முதலியன செய்ய வேண்டுமென்றும், அச்சாமிகளுக்குக் கல்யாணம் முதலியவைகளைச் செய்வதோடு, அந்தக் கடவுள் அப்படிச் செய்தார், இந்தக் கடவுள் இப்படிச் செய்தார் என்பதான “திருவிளையாடல்கள்” முதலியவைகள் செய்து காட்ட வருஷா வருஷம் உற்சவம் செய்ய வேண்டும் என்றும், அக்கடவுள்களின் பெருமையைப் பற்றியும், திருவிளையாடல் கள் பற்றியும் பாட வேண்டும். ‘திருமுறை’யாக, ‘பிரபந்த’மாக. அப்படிப்பட்ட கடவுள்கள் உண்டு என்பதற்கு ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற இன்னும் பல செய்தால் அக்கடவுள்கள் நமது இச்சைகளை நிறைவேற்றுவார்கள் என்றும் மற்றும் நாம் செய்த – செய்கின்ற – செய்யப் போகின்ற எவ்வித அக்கிரமங்களையும், அயோக்கியத் தனங்களையும், கொடுமைகளையும் மன்னிப்பார் என்றும் சொல்லப்படுபவைகள் மூடநம்பிக்கை – வயிற்றுப் பிழைப்பு – சுயநலப் பிரச்சாரமே.
ஏனெனில், இந்நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்திற்கும், மக்களை மக்கள் ஏமாற்றிக் கொடுமைப்படுத்துவதற்கும், மற்ற நாட் டார்கள் போல நம் நாட்டு மக்களுக்குப் பகுத்தறிவு விசாலப்படாமல், மற்ற நாட்டார்களைப் போல விஞ்ஞான சாஸ்திரத்திலே (சயன்ஸ்) முன்னேற்ற மடையாமலிருப்பதற்கும், இம்மூட நம்பிக்கைகளும், சில சுயநலமிகளின் வயிற்றுச் சோற்றுப் பிரச்சாரமும், இவைகளினால் ஏற்பட்ட கண்மூடி வழக்கங்களும், செலவுகளுமேதான் காரணங்கள் ஆகும்.
ஒருவரையொருவர் உயர்வு – தாழ்வு கற்பித்துக் கொடுமைப்படுத்தி ஒற்றுமை இல்லாமல் செய்திருப்பதற்கும், மக்கள் பாடுபட்டுச் சம்பாதிக்கும் பொருள்கள் எல்லாம் நாட்டின் முன்னேற்றத்திற்குப் பயன்படாமல் பாழாவதற்கும், மக்களின் அறிவு வளர்ச்சிக் கட்டுப்பட்டுக் கிடப்பதற்கும், சிறப்பாக மக்களின் ஒழுக்கங்கள் குன்றி மக்களிடத்தில் மக்களுக்கு அன்பும், உபகாரமும் இல்லாமல் இருப்பதற்கும் கடவுள் என்பதும், அதன் சமயமும், சமயாச்சாரியார்கள் என்பவர்களும், அவர்களது பாடல்களும், நெறிகளுமே காரணம் என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன்.
நிற்க, இக்கடவுள்களின் பொருட்டாக நம் நாட்டில் பூசைக்கும், அபிஷேகத்திற்கும், அவற்றின் கல்யாணம் முதலிய உற்சவங்களுக்கும், பஜனை முதலிய காலட்சேப நேரக் கேட்டிற்கும், இக்கடவுள்களைப் பற்றிய சமயங்களுக்காக மடங்களுக்கும், மடாதிபதிகளுக்கும், மூர்த்திஸ்தலம், தீர்த்த ஸ்தலம் முதலிய யாத்திரைகளுக்கும், இக்கடவுள் அவதாரமகிமைகளையும், திருவிளையாடல்களையும், இக்கடவுள்களைப் பற்றிப் பாடின பாட்டுக்களை அச்சடித்து விற்கும் புத்தகங்களை வாங்குவதற்கும் மற்றும் இவைகளுக்காகச் செலவாகும் பொருள்களாலும், நேரங்களாலும் நம் நாட்டில் பல கோடி ரூபாய்களுக்குக் குறைவில்லாமல் வருஷா வருஷம் பாழாகிக் கொண்டிருக்கிறது.
இந்த பல கோடிக்கணக்கான ரூபாய்கள் இம்மாதிரியாக பாழுக்கிறைக்காமல் மக்களின் கல்விக்கோ, அறிவு வளர்ச் சிக்கோ, விஞ்ஞான (சயன்ஸ்) வளர்ச்சிக்கோ, தொழில் வளர்ச் சிக்கோ செலவாக்கப்பட்டு வருமானால், நம் மக்கள் இன்னும் காட்டுமிராண்டிகளாகவும், உடலுழைப்புக் கூலிகளாகவும் இருக்க முடியுமா அன்றியும் தீண்டக்கூடாத, நெருங்கக் கூடாத, பார்க்கக் கூடாத மக்கள் என்போர்கள் கோடிக்கணக்காய் இருக்க முடியுமா? 100-க்கு மூன்று பேர்களாயிருக்கும் பார்ப்பனர்கள் மற்ற 100-க்கு 97 பேர்களை சண்டாளர், மிலேச்சர், சூத்திரர், வேசி மக்கள், தாசி மக்கள், அடிமைப் பிறப்பு என்று சொல்லிக் கொண்டு அட்டைகள் இரத்தத்தை உறிஞ்சுவது போல உறிஞ்சிக் கொண்டு இருக்க முடியுமா? என்று கேட்கிறோம். கடவுள் – மத மூடநம்பிக்கைகள் ஒழியச் செய்யும் காரியத்தை நாஸ்திகமென்றும், பாப காரியமென்றும் கூறுவது பகுத்தறிவற்ற பாமர மக்களை ஏமாற்றிச் சுரண்டிப் பிழைப்பவர்களின் சுயநலப் புரட்டே ஆகும்.
(தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம் – ‘விடுதலை’ 29.12.1969).