பார்ப்பன ஸநாதன சங்கிகள் விபீடணர்களை வைத்து, ‘நீட்’ தேர்வு தேவையானதுதான் என்று திரிபுவாதம் செய்கின்றனர். நம் அப்பாவிகள் சிலர் மேனாள் துணைவேந்தர் சொன்னால், சரியாகத்தானிருக்கும் என்று நம்புகின்றனர். இந்த துரோக திரிபுவாதத்திற்கு, கழகத் துணைத் தலைவர் ‘விடுதலை’ 8.4.2025 ஏட்டில் சரியான சவுக்கடி போன்ற பதிலளித்துள்ளார்.
எடுத்துக்காட்டாக 2021ஆம் ஆண்டு ‘தஸ்விப்ட் இந்தியா’ என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், உ.பி. போன்ற 5 வட இந்திய மாநிலங்களில், எந்த ஏழை எளிய மாணவர்களும் மருத்துவப் படிப்பில், இந்த ‘நீட்’ தேர்வால் சேர இயலவில்லை என்பதை எடுத்துக்காட்டியதைக் கூறலாம். ‘நீட்’ கோச்சிங் சென்டர்’ என்ற கொள்ளைக் கூட்டங்கள் வசூலிக்கும் கொள்ளைப் பணத்தை ஏழைகள் எவ்வாறு கட்ட முடியும்? என்ற கேள்வியை நம் பார்ப்பனரல்லாத ஏமாளிகள் சிந்திக்க வேண்டும். ‘நீட்’ தேர்வு குறித்து அசாம் முதலமைச்சர் வட இந்திய மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்றாலும் ஆங்கில அறிவே இல்லை என்று கூறியதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நடைபெறுவது போட்டித் தேர்வா? தகுதித் தேர்வா? என்ற கவிஞரின் கேள்வி மிக மிக ஏற்கக் கூடியதேயாகும். ‘நீட்’ தேர்வில் 0,1, பெற்றவர்களும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து விடுவார்கள் என்றால் இத்தேர்வின் யோக்கியதை என்ன என்பதைத் தோலுரித்துக் காட்டியுள்ளார்.
இறுதியாக, நரேந்திரமோடி குஜராத் முதலமைச்சராக இருந்த பொழுது, காங்கிரஸ் ஆட்சி கொண்டு வந்ததை எதிர்த்து விட்டு இன்று இவர் பிரதமரானவுடன் அதே ‘நீட்’ தேர்வை ஆதரிக்கக் கட்டாயப்படுத்துவது ஏன்? என்ற கட்டுரையின் கேள்வி நியாயமானதே ஆகும்.
இக்கட்டுரைக்கு ‘தினமலர்’ இதுவரை பதில் கூறவில்லை என்பதிலிருந்தே இக்கட்டுரையில் உள்ள நியாயத்தை புரிந்து கொள்ள முடிகிறது.
– பேராசிரியர் பூ.சி. இளங்கோவன்
சிதம்பரம் மாவட்டத் தலைவர்