ஆசிரியரின் சமீப கால ஆஸ்திரேலியச் சுற்றுப் பயணம் குறித்தும் பல்வேறு மாநிலங்களில் அவர் கலந்து கொண்ட நிகழ்வுகள் பற்றியும், அளித்த பேட்டிகள், ஆற்றிய உரைகள் பற்றியும் நாம் அறிவோம். பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் தலைவர் முனைவர் அண்ணா மகிழ்நன் ஆசிரியருக்கு நன்றி தெரிவித்து மடல் எழுதியுள்ளார். அதன் பொருளடக்கம் கீழ்க்கண்டவாறு:
மானமிகு ஆசிரியர் அய்யா:
பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் (PATCA) சார்பில் தங்களுக்கு எங்கள் உளங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். தங்கள் சூறாவளிப் பயணம் வியப்பளித்தது. பிரிஸ்பேன், சிட்னி, கேன்பெரா மற்றும் மெல்பர்ன் மாநிலங்களுக்கு கொள்கைப் பரப்புச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்களுடன் தாங்கள் மேற்கொண்ட சுற்றுப்பயணம் எங்கள் நெஞ்சில் நீங்காத நினைவாக நிலைத்திருக்கும். தங்கள் வருகையும் தங்களுடன் கழித்த நாட்களும் எங்களுக்கு மிகப்பெரிய பெருமையும் அரிய வாய்ப்புமாகும். ஆஸ்திரேலியா வாழ் இந்தியத் தமிழர்களின் மனங்களிலும் இந்த நாட்டு அன்பர்களின் மனங்களிலும் தங்கள் வருகையின் நினைவு என்றும் அழியாமலிருக்கும்.
தாங்கள் ஆற்றிய சொற்பொழிவுகள், புலம் பெயர்ந்து இங்கு வந்துள்ள இந்தியத் தமிழர்களை மிகவும் கவர்ந்து விட்டன. பல அரிய தகவல்களை வழங்கி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களை ஊக்கப்படுத்தி விட்டீர்கள். தந்தை பெரியாரின் சிந்தனைகளையும், அறிவுரைகளையும் இளைய தலைமுறையினர் புரிந்துகொள்ள முடிந்தது. எங்களைப் போன்ற மூத்த தலைமுறையினருக்கும் தங்களுடன் ஒன்றிணைந்து இயங்க உற்சாகம் அதிகரித்துள்ளது. சமூகநீதி, ஒற்றுமை, சமத்துவம், சுயமரியாதை போன்ற பல உயர்ந்த கொள்கைகளுக்காக பாடுபட்டவர் தந்தை பெரியார். யதேச்சதிகார தீயசக்திகளை பூண்டோடு அழிக்கப் போராடியவர். அவருடைய அடிச்சுவட்டில் நாங்கள் பயணிக்க தங்களுடைய இந்த ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணம் மூலம் எங்களுக்கு புத்துணர்வு ஏற்பட்டுள்ளது. இங்கு நாங்கள் எதிர் கொண்டு வரும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தங்கள் சொற்பொழிவுகள் வழிவகுத்துத் தந்து உற்சாகப்படுத்தி யுள்ளன.
தங்கள் ஆஸ்திரேலியப் பயணம் எங்கள் PATCA சிந்தனை வட்டத்தின் வரலாற்றில் ஒரு மைல்கல்
இனிவரும் ஆண்டுகளில் மேலும் பல ஒத்த சிந்தனையுள்ள தலைவர்களையும், சொற்பொழிவாளர்களையும் ஆஸ்திரேலியாவுக்கு அழைக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து மேலும் பல பிரமுகர்களை இவ்வாறு வரவழைத்து இங்குள்ள தமிழ்மக்களை ஊக்கப்படுத்த முடிவு செய்துள்ளோம். முக்கியமாக, மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின், கவிஞர் கனிமொழி, எம்.பி; திரு.ஆ.ராசா, எம்.பி; திரு.பழனிவேல் ராஜன் மற்றும் பல பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்க உள்ளோம். திராவிட இயக்கக் கொள்கைகளின் அடையாளச் சின்னமாக விளங்கும் இவர்கள் அனைவரின் வருகையும் எங்களுக்கு நற்பயன் விளைவிக்கும்.
தமிழ்நாட்டிலிருந்து இப்படிப்பட்ட பிரமுகர்கள் இங்கு வந்து நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பிப்பது புலம் பெயர்ந்து வந்து வாழும் ஆஸ்திரேலியத் தமிழர்கள் மீது வியக்கத்தகு தாக்கம் ஏற்படுத்தும். தமிழர் பண்பாட்டின் சிறப்பு மேலும் வேகமாக பரவிப் படரும். முற்போக்குச் சிந்தனை இங்குள்ளவர்கள் மனங்களில் அதிகரிக்கும். சமூகநீதியின் அவசியமும் அதன் சிறப்பும் இங்குள்ளவர்களுக்கு தெளிவாகப் புரிய அவர்களுடைய வருகை வழிவகுக்கும்.
இந்த விஷயத்தில் தங்களுடைய ஆதரவும், ஆலோசனைகளும் எங்களுக்கு இன்றியமையாதவை. தமிழ்நாட்டுத் தலைவர்கள், பிரமுகர்களின் வருகைகளுக்கு எங்களுக்கு உதவி வழிநடத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
திராவிட மாடல் அரசின் மாண்பினை இங்குள்ளவர்கள் புரிந்து கொள்ள முக்கியப் பிரமுகர்களின் வருகை நிச்சயம் உதவும். பெரும்பான்மைவாத அரசியல், ஜாதி பாகுபாடுகள், மதவெறி போன்றவை இந்த மண்ணை நெருங்கவிடாமல் தடுப்பது எங்கள் நோக்கம். தற்போது தமிழ்நாட்டில் சிறந்து விளங்கும் திராவிட மாடல் அரசில் முக்கியப் பங்கு வகிக்கும் தலைவர்களை இங்கே வரவழைக்க தங்களால் இயன்ற உதவிகளைச் செய்யவும்.
ஆசிரியர் அய்யா, தங்கள் தளராத உழைப்பிற்கும் ஈடு இணையற்ற தலைமைக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. தந்தை பெரியாரின் மரபு வழிக் கொள்கை நெறிகளைப் பின்பற்ற தங்கள் ஆதரவைக் கோருகிறோம்.
இந்த மடலை எங்கள் அனைவரின் நன்றியின் அடையாளமாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
தங்கள் பொதுவாழ்வுப் பயணத்தில் தங்களோடு உடன்வர எங்களையும் அனுமதியுங்கள். என்றும் கொள்கைக் குடும்பமாகவே இருந்து நாங்கள் உங்கள் கரங்களைப் பலப்படுத்துவோம் என்று உறுதியளிக்கிறோம்.
உளங்கனிந்த நன்றியுடன்.
முனைவர் அண்ணா மகிழ்நன்
பெரியார் அம்பேத்கர் சிந்தனையாளர் வட்டம், ஆஸ்திரேலியா (PATCA)