எயிட்ஸ் நோயிலிருந்து காப்பாற்று வதற்காக, கருவிலுள்ள இரு சிசுக்களின் டி.என்.ஏ.க்களை மாற்றியமைத்ததாகவும், அந்த சிசுக்கள் தற்போது பெண் குழந்தைகளாகப் பிறந்து நலமுடன் இருப்பதாகவும், ஹாங்காங்கில் கடந்தாண்டு நவம்பரில் நடைபெற்ற மனித மரபணு மாற்றம் உச்சிமாநாட்டில் சீன விஞ்ஞானி ஜியான்குய் ஹி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். மரபணு விஞ்ஞானிகள் மத்தியில் மிகப்பெரிய விவாதத்தை, இக்கண்டுபிடிப்பு உருவாக்கியுள்ளது.
சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தென் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் ஜியான்குய் ஹி, கருவில் உள்ள சிசுக்களுக்கு எச்.அய்.வி. நோய்த் தொற்று தாக்காமல் இருக்க, சிசுக்களின் மரபணுக்களை மாற்றி, குழந்தைகளைப் பிறக்கும் வரை பாதுகாத்ததாக மாநாட்டில் கூறினார். மேலும் ஒரு பெண், டி.என்.ஏ. மாற்றப்பட்ட குழந்தையை சுமந்து வருவதாகவும் கூறியது பலரையும் ஆச்சர்யப்படுத்தியது.
கடந்த ஜனவரி 21ஆம் தேதி சீனாவின் குவாங்டாங் மாநில அதிகாரிகள், ஜியான்குய் ஹி’யின் ஆராய்ச்சியை ஒத்துக்கொண்டதோடு, அவர் சீனாவின் சட்டதிட்டங்களை மீறிவிட்டதாகவும், சட்டப்படி தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். மார்ச் 2017 முதல் நவம்பர் 2018 வரையில் மரபணு மாற்றப்பட்ட குழந்தைகளை உருவாக்கி அவர் பாதுகாத்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது சீனாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.