தங்கள் சுற்றுப்புறத்தைப் பறவைகள் எவ்வாறு பார்க்கின்றன, எந்தெந்த நிறங்களை அவை உணர முடியும் போன்ற கேள்விகள் அறிவியல் உலகத்தின் முன் நீண்டகாலமாக நிலுவையில் இருந்தன. சுவீடனைச் சேர்ந்த லன்ட் பல்கலைக்கழகம் அதற்கான விடைகளைக் கண்டுபிடித்துள்ளது.
லன்ட் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பேராசிரியர் டான் எரிக் நில்சன், “மனிதர்களின் பார்வை சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய நிறங்களை அடிப்படையாகக் கொண்டது. பறவைகளுக்கு இவற்றோடு கூடுதலாக புறஊதா நிறங்களையும் காண முடியும். உதாரணத்திற்கு, அடர்த்தியான வனத்தில் நம்மால் பச்சை நிறத்தில் மட்டுமே இலைகளை மட்டுமே காண முடியும். ஆனால் பறவைகளால், இலைகளின் மேற்புறம் மங்கலான பச்சையையும், கீழ்புறம் அடர்த்தியான பச்சையையும் வேறுபடுத்திக் காண முடியும். இதன் மூலம் தன் உணவுகளைச் சேகரிப்பதில் தொடங்கி, லாகவமாகப் பறப்பது வரை தன்னைக் கட்டமைத்துக் கொள்கின்றன. இப்படி வேறுபட்ட வண்ணங்களில் பறவைகளால் பார்க்க முடியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டது இதுவே முதல்முறை” என்றார்.
இந்த ஆராய்ச்சிக்காகவே பிரத்யேக கேமராவை லன்ட் விஷன் குரூப் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன்மூலம், பறவைகள் மட்டுமல்லாது, உலகில் உள்ள எந்த விலங்குகளின் பார்க்கும் திறனையும் கண்டறிய முடியுமாம். நம்முடைய கற்பனைக்கும் எட்டாத நிறங்களில் விலங்குகள் உலகைக் காண்கின்றன என்று லன்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வியக்கிறார்கள்.