நமது அன்றாட வாழ்வில் அறிவியல், மின்னணுவியலின் வியக்கத்தக்க வளர்ச்சி மனித குலத்தை மகத்தான வளர்ச்சிப் பாய்ச்சலுக்குக் கொண்டு போய் சேர்த்துக் கொண்டேயிருக்கிறது.
ஆனால், எல்லா வளர்ச்சி, முன்னேற்றத்திலும் அதற்கென ஒரு மறுபக்கமும் தவிர்க்க இயலாதது தானே! அதன்படி கோடி நன்மைகள் உருவாகும் போது, அதனைத் தவறாகப் பயன்படுத்திப் பயனாளிகளுக்குக் கொடும் சோதனை – வேதனை அனுபவங்களையும் ஏற்படுத்தி வரும் வாய்ப்பும் நமது பார்வையிலிருந்து தப்பக் கூடியவைதானே!
எடுத்துக்காட்டாக, சில லட்சங்களில் கைத் தொலைபேசிகள் கையிலில்லாதவர்களே நாட்டில் ஒரு, இரு சதவிகிதம் இருப்பார்களா என்ற கேள்விக்கு ‘ஆம்’ என்பது தானே சரியான விடையாக இருக்க முடியும்?
கைத்தொலைபேசிகளால் சுமார் 10, 12 தொழில்களுக்கு – நிறுவனங்களுக்கு வேலையே இல்லாமல் ஆகி விட்ட நிலை. கேமராத் தொழில் – பதிவுக் கருவிகள் இத்தியாதி இத்தியாதி!
அதைவிட இதில் எல்லாவற்றையும் கையடக்க மாக்கிக் கொண்டுள்ளதால்தான் அது பல குற்றங்களுக்கு வழி வகுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது!
‘அந்திமழை’ ஒரு நல்ல பயனுள்ள மாத ஏடு. அதில் இம்மாதம் வந்துள்ள முக்கிய மய்யக் கட்டுரை, ‘சைபர் கிரைம்’ – சைபர் குற்றங்கள் பற்றிய பல அறிய வேண்டிய அரிய தகவல்களையும், அதனைத் தடுக்க உரிய எச்சரிக்கைகளையும் வாசகர்களுக்கு அளித்துள்ளது!
‘‘இன்று தகவல் தொடர்புக் கருவிகள் மூலம் ஒரு முறையேனும் ஏமாற்றப்படாத அல்லது ஏமாற்றும் முயற்சியை சந்தித்திராத ஆட்கள் யாரையும் பார்க்க முடியாது!
அப்படி ஒருவர் இருந்தால் அவர் இன்னும் 50 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்பவர் என்று சொல்லி விடலாம்’ என்ற அந்த ‘பைசர் கிரைம்’ சிறப்புப் பக்கங்கள் விளக்குகின்றன!
இணைய வழி குற்றங்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பெருகி இருக்கின்றன. அதில் உள்ள அரிய தகவல்கள் இதோ:
‘‘நாம் நினைத்திராத அளவில் இணைய வழிக் குற்றங்கள் பெருகி இருக் கின்றன. புகார்களாகப் பதிவா கின்றவை மிகக் குறைவு என்றே சொல்ல வேண்டும்,’’ என தனிப்பட்ட முறையில் கூறினார் காவல் அதிகாரி ஒருவர்.
கடந்த ஆண்டு(2024) ஜனவரியில் இருந்து – ஏப்ரல் வரைக்குமான நான்கு மாதங்களில் 7,40,000 புகார்கள் தேசிய சைபர்கிரைம் இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றால் 1,750 கோடி ரூபாய் மக்களுக்கு இழப்பு ஏற்பட்டதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த இணைய தளம் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் நிர்வாகத்தில் உள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் ஒவ்வொரு நாளும் சராசரியாக ஏழாயிரம் புகார்கள் பதிவு செய்யப்பட்டன. மூன்றாண்டுகளுக்கு முந்தைய இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 113 சதவீதம் அதிகம் என்று ‘எகனாமிக் டைம்ஸ்’ நாளேட்டில் வந்த ஒரு செய்தியறிக்கை கூறுகிறது.
பெரும்பாலான புகார்கள் பொருளா தார மோசடி தொடர்பானவை.
2024-இன் முதல் நான்கு மாதங்களில் 4599 (டிஜிட்டல் அரெஸ்ட் எனப்படும் மோசடிகள் நடந்தன. இதில் சுமார் 120 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. தற்போது போனில் நம்பரைப் போட்டு டயல் செய்தவுடன் கேட்கும் உள்துறை அமைச்சகத்தின் எச்சரிக்கை வாசகம் சும்மா இல்லை. அதிகரிக்கும் குற்றங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்குத்தான் – உங்கள் மின்கட்டணம் செலுத்தப்படவில்லை. ஆகவே உங்கள் இணைப்புத் துண்டிக்கப்படலாம். இந்த எண்ணுக்கு அழையுங்கள் என எஸ்.எம். எஸ்.கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. உங்கள் போன் மூலம் குற்றச்செயல் நடந்துள்ளது. எண் ஒன்பதை அழுத்துங்கள் என தானியங்கி குரல் அழைப்பு தேசிய டேட்டா சென்டர் எனக்காட்டும் பெயரில் இருந்து வந்துகொண்டே இருக்கிறது. ‘கார்டு மேலே இருக்கும் நம்பர் சொல்லு’ என சதா வந்துகொண்டிருக்கும் வட இந்திய அழைப்புகள் இப்போது குறைந்துவிட்டன. ஆனால் மின்னஞ்சல், சமூக ஊடகங்கள் மூலம் வரும் அடையாளம் தெரியாத லிங்குகள் அதிகரித்துள்ளன. அவற்றைத் தொட்டால் தரவிறங்கும் செயலிகள் உங்கள் கணிப்பொறி – போன்களை தங்கள் கைவசப்படுத்திவிடும் என்கிறார்கள்.
பாஸ்வேர்டுகளை ஸ்ட்ராங்காகப் போடுங்கள் என்பவர்களைப் பார்த்தால் எல்லாவற்றையும் மறந்துவிடும் எம்மைப் போன்றவர்களுக்குச் சிரிப்பு மட்டும்தான் வருகிறது. மின்னஞ்சல்கள், வங்கிப் பரிவர்த்தனைகளில் இரட்டை அடுக்கு ஓடிபி கண்காணிப்பு அறிமுகப்படுத்தப் பட்டிராவிட்டால் நம்மில் பலர் பெரும் இழப்புகளைச் சந்தித்திருப்போம்.
நண்பர் ஒருவர் மிக எச்சரிக்கையானவர். உங்கள் கேஒய்சி அப்டேட் செய்யவேண்டும், இல்லாவிட்டால் கணக்கை முடக்கிவிடுவோம் என வங்கியிலிருந்து வந்த குறுந்தகவல்களை புன்னகையுடன் புறந்தள்ளிக் கொண்டிருந்தார். ஒருநாள் நிஜமாகவே டெபிட்கார்டு வேலை செய்யவில்லை. வங்கிக்கு ஓடினால், அந்த குறுந்தகவல்கள் உண்மையானவை என்று தெரிந்தது!
ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகமாகி இருக்கும் இந்நிலையில் இணையக் குற்றங் களும் பெருகி இருக்கின்றன. பேசவேண்டிய தேவையும் அவசியமாகித்தான் இருக்கிறது!’’
(மேலும் தொடரும்)