பீகாரில் உள்ள சிர்ஷா என்ற ஊரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிறகு அங்குள்ள கோவில் ஒன்றில் பீகார் காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான கண்ணையா குமார் சென்று வழிபாடு செய்தார்.
இந்த நிலையில் அவர் சென்ற பிறகு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கோவிலுக்குள் நுழைந்ததால் கோவில் தீட்டாகிவிட்டது என்று கூறி, பாஜகவினரும் ஹிந்துத்துவ அமைப்பினரும் சேர்ந்து கங்கை நீரை ஊற்றி கோவிலில் தீட்டுக் கழித்தனர்.
இதே போல் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2024 ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரையின் போது சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கன்னோஜ் என்ற ஊரில் உள்ள சிவன் கோவிலில் சென்று வழிபட்டார். அவர் சென்ற பிறகு பாஜகவினர் அந்தக்கோவிலை கங்கை நீர் ஊற்றி சுத்திகரித்தனர்.
அதே போல் கடந்த ஜனவரி மாதம் அவரது கட்சியின் அயோத்தியா நாடாளுமன்ற உறுப்பினரான அவதேஷ் பிரசாத் தனது தொகுதிக்கு உள்பட்ட அனுமார் கோவிலுக்குச் சென்று வழிபட்டார்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச்சேர்ந்த அவர் கோவிலுக்குள் சென்றதால் கோவில் தீட்டாகிவிட்டது என்று கூறி அனுமர் கோவிலையும் உயர்ஜாதி வகுப்பினர் வசிக்கும் தெருமுழுவதையும் கங்கை நீர் ஊற்றி சுத்திகரித்தது குறிப்பிடத்தக்கது
பீகாரில் மாஞ்சி 2014ஆம் ஆண்டு மதுபானி மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலுக்குச் சென்றார். சென்று வந்த பிறகு, கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு, பின்னர் கங்கை நீர் கொண்டு வரப்பட்டு, சாமி சிலைகள் உள்ளிட்டவைகளைக் கழுவி தீட்டுக் கழிக்கப்பட்டன.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதி ஒருவர், வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், அந்த இடத்திற்கு வேறு மாநிலத்திலிருந்து மாற்றப்பட்ட பார்ப்பன நீதிபதி ஒருவர் முன்பு தாழ்த்தப்பட்ட சமூக நீதிபதியிருந்த அறையைத் தீட்டுக் கழித்ததுண்டே!
உத்தரப்பிரதேச முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் 2017ஆம் ஆண்டு முதலமைச்சராகப் பதவியேற்ற போது, லக்னோவில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தை பிஜேபியினர் கங்கை நீரால் கழுவி சுத்திகரித்தனரே.
பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த பாபு ஜெகஜீவன்ராம், உத்தரப்பிரதேச முதலமைச்சர் சம்பூர்ணானந்து சிலையை காசியில் திறந்த நிலையில் (1971) ஓர் உயர் ஜாதிக்காரரின் சிலையை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் எப்படி திறக்கலாம்? சிலை தீட்டுப்பட்டு விட்டது என்று கூறி, பனாரஸ் பல்கலைக் கழக உயர் ஜாதி பார்ப்பன மாணவர்கள் கங்கை நீரைக் கொண்டு வந்து, சம்பூர்னானந்து சிலையைக் கழுவினார்களா? இல்லையா?
சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம், அந்த நிகழ்ச்சியை எடுத்துக் கூறியதுடன், சமூகப் புரட்சியாளர் பெரியார் பிறந்த மண்ணில் இந்த வேதனையை எடுத்துக் கூறாமல் வேறு எங்குப் போய்ப் பேச முடியும்? என்று குமுறினாரே!
அர்த்தமுள்ள இந்து மதம் என்றும், அத்தகைய ஹிந்து சாம்ராஜ்ஜியத்தை அமைக்கப் போகிறோம் என்றும் கூறுபவர்கள் ஆட்சி அதிகாரத்திலும் இருப்பதை நினைவூட்டுகிறோம். இதற்கொரு முடிவுதான் என்ன?
சமூகப் புரட்சி மக்கள் மத்தியில் கிளர்ந்து எழுவதுதான் ஒரே தீர்வு.