சென்னை,ஏப்.10– முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள்கூட்டத்தில் ‘நீட்’ தேர்வுக்கு எதிராக சட்டப் போராட்டத்தை தொய்வின்றித் தொடர்வோம்!” என்று முதலமைச்சர் உறுதிபடத் தெரிவித்தார்.
நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான சட்ட பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பான அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று (9.4.2025) மாலை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
நீட் தேர்வு முறையை அகற்றி, தமிழ்நாட்டில் மருத்து வக் கல்வி கனவோடு பயிலும் இலட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கனவை நனவாக்க தமிழ்நாடு அரசு உறுதியோடு சட்டரீதியான அனைத்து நடவடிக்கை களையும் எடுத்திட, அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடத்தப்படும் என்று முதலமைச்சர் 4.4.2025 அன்று சட்டமன்றப் பேரவையில் அறிவித்தார்.
அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் தலைமையில் நேற்று (9.4.2025) தலைமைச் செயலகத்தில், நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பான அனைத்து சட்டமன்றக் கட்சித் தலை வர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நடை பெற்றது.
இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:–
“தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வை ஆரம்பத்தில் இருந்தே தி.மு.கழகம் எதிர்த்துக்கொண்டு இருக்கிறது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும்.
பொதுவாக, நுழைவுத் தேர்வு என்பது ஏழை எளிய கிராமப்புற விளிம்பு நிலை மாணவர்களைப் பாதிக்கக் கூடியது. அதனால், அதைத் தவிர்த்து பள்ளிக் கல்வித் திறனை மட்டும் அடிப்படையாகக் கொண்டதாக கல்லூரி மாணவர் சேர்க்கை அமைய வேண்டும் என்ப தில் அசைக்க முடியாத உறுதி கொண்டதாக நம்முடைய அரசு இருக்கிறது. இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது என்று நான் நம்புகிறேன்.
முத்தமிழறிஞர் கலைஞர் அகற்றிய நுழைவுத் தேர்வு!
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர், மாநில அளவில் நடந்து கொண்டு இருந்த நுழைவுத் தேர்வுகளை 2006 ஆம் ஆண்டு அதற்காக தனிச்சட்டம் இயற்றி அகற்றினார். அந்தச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று, கல்லூரி மாணவர்கள் சேர்க்கையில் ஏழை எளிய கிராமப்புற மாணவர்களின் நலன் காக்கப்படுவதை உறுதி செய்தார். இதன் அடிப்படையில் தான், பல ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடந்து திறன்மிக்க நம்முடைய மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி பயில கூடிய வாய்ப்பு கிடைத்தது.
இந்த மருத்துவர்கள் மூலமாகத்தான் இன்றைக்கு நம்முடைய தமிழ்நாடு மருத்துவத்துறையில் நாட்டிற்கே முன்னோடியாக விளங்கிக் கொண்டு இருக்கிறது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒன்றிய அரசு கொண்டு வந்த நீட் தேர்வுக்கான திருத்தச் சட்டம் அதற்குப் பிறகு கொண்டுவரப்பட்ட தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் ஆகியவை மருத்துவ மாணவர் சேர்க்கையில், நீட் தேர்வை கொண்டு வந்தது. இது நம்முடைய மாணவர்களை வெகுவாக பாதித்துக் கொண்டு வருகிறது. மாநில அரசுகளால் தொடங்கப்படக்கூடிய மருத்துவக் கல்லூரிகளில் எப்படி அந்த மாநில மாணவர்களை சேர்க்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யக்கூடிய உரிமையை மாநில அரசுகளிடம் இருந்து ஒன்றிய அரசு பறித்தது. நுழைவுத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சிகளைப் பெறுவதற்கான வசதி வாய்ப்பு இருக்கும் மாணவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருப்பதுதான் நீட் தேர்வின் மாபெரும் அநீதி. இதற்கு எதிராக தொடர்ந்து மக்கள் மன்றத்தில் நாம் போராடினோம்.
நீட் பாதிப்பை கண்டறிய
நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு!
நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு!
ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 2021 ஆம் ஆண்டு முதல் மாபெரும் சட்டப் போராட்டத்தை தொடங்கி னோம். ஒன்றிய அரசால் நடத்தப்படும் நீட் தேர்வால் சமுதாயத்தில் பின் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து அறிக்கை வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி டாக்டர் ஏ.கே.ராஜன் தலைமையில் ஒரு குழுவை அமைத்தோம்.
சமுதாயத்தில் பின்தங்கியோர் மருத்துவக் கல்வியை பெறும் கனவுக்கு இடையூறாகவும், சமூகப் பொருளாதாரத்தில் வளம் மிகுந்த பிரிவினருக்கு சாதகமாகவும் இருந்து எம்.பி.பி.எஸ். மற்றும் உயர் மருத்துவப் படிப்புகளில் இருக்கும் பலதரப்பட்ட சமூகப் பிரதிநிதித்துவத்தை நீட் தேர்வு குறைத்திருக்கிறது என்று இந்தக் குழு தெரிவித்தது.
எனவே, 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிற்சார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை சட்டம் மாதிரியான ஒரு சட்டத்தை மாநில அரசு நிறைவேற்றி, அதற்காக குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறலாம் என்றும் இந்தக் குழு பரிந்துரை செய்தது. இந்த விரி வான பரிந்துரைகளை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள அமைக்கப்பட்ட அரசு செயலாளர்களை கொண்ட குழு நீட் விலக்கு சட்டத்தை உருவாக்க பரிந்துரை செய்தது.
இதன் தொடர்ச்சியாக, நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டத்தை 13.9.2021 அன்று நான் முன்மொழிந்தேன். அந்தச் சட்ட முன்வடிவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்தோம். இந்தச் சட்ட முன்வடிவை உடனடியாக ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால், அவர் தன்னுடைய அரசியல் சட்டக் கடமையைச் செய்யாமல், அரசியல் செய்ய ஆரம்பித்தார் என்பதை வேதனையோடு பதிவு செய்கி றேன். ஆனால், நாமும் சளைக்காமல் அந்தச் சட்டத்துக்கு ஒப்புதல் பெற கடுமையாக போராடினோம்.
இந்த நிலையில் 1.2.2022 அன்று அதை திருப்பி அனுப்பினார். உடனடியாக, 5.2.2022 அன்று இதே மாதிரியான சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்ட த்தை நாம் நடத்தினோம். அதில், இந்தச் சட்ட முன்வடிவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநர் அவர்களுக்கு மீண்டும் அனுப்புவது என்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினோம். அதன் பின்னர் தமிழ்நாடு சட்டமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க கூட்டத்தில் இந்த சட்ட முன்வடிவு மீண்டும் 8.2.2022 அன்று நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புத லுக்காக ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.
சட்டமுன்வடிவுக்கு ஒப்புதல் நேரில் வலியுறுத்தல்!
இது தொடர்பாக ஆளுநர் அவர்களை நான் நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். பிரதமர் அவர்களையும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அவர்களையும் சந்தித்து, இந்த சட்ட முன்வடிவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
அனைத்துக் கட்சிகளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதுகுறித்து குடியரசுத் தலைவர் அவர்களின் அலுவலகத்தில் நேரடியாக சென்று மனு அளித்தார்கள். இந்த தொடர் முயற்சிகளின் பயனாக ஒரு வரலாற்று நிகழ்வாக நாம் சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்த நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் அவர்கள் அனுப்பி வைத்தார் என்ற செய்தியை 4.5.2022 அன்று சட்டமன்றத்தில் நான் பகிர்ந்து கொண்டேன்.
நீட் விலக்கு தொடர்பான நம்முடைய போராட்டத்தின் அடுத்த கட்டமாக, ஒன்றிய அரசை வலியுறுத்தி இந்த சட்ட முன்வடிவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறுவதற்கான எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன.
இது குறித்து ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை, ஆயுஷ் துறை, உள்துறை, உயர் கல்வித் துறை என்று பல்வேறு அமைச்சகங்கள் கூறிய எல்லா சந்தேகங்க ளுக்கும் தமிழ்நாடு அரசு உடனுக்குடன் உரிய விளக்கங்களையும் வழங்கியது. ஆனால் இதையெல்லாம் ஏற்காமல் நம்முடைய மாணவர்களுக்கு பெரும் பேரிடியாக ஒன்றிய அரசு நம்முடைய நீட் விலக்குச் சட்டத்துக்கு ஒப்புதலை மறுத்து விட்டார்கள் என்பதை சில நாட்களுக்கு முன்பு சட்டமன்ற பேரவையில் வேதனையோடு தெரிவித்து இருந்தேன்.
ஒன்றிய அரசு நம்முடைய கோரிக்கையை நிராகரித்து இருக்கலாம். ஆனால் நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான நம்முடைய போராட்டம் எந்த வகையிலும் முடிந்து விடவில்லை என்பதையும் இந்தப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தில் நாம் எடுக்க வேண்டிய சட்டபூர்வமான நடவடிக்கைகள் குறித்து சட்ட வல்லுநர்களிடமும் கலந்து ஆலோசிக்கப்படும் என்றும் சட்டமன்றத்தில் நான் குறிப்பிட்டு இருந்தேன்.
எனவே அந்த வகையில் இந்த பிரச்சினையில் அடுத்த கட்டமாக நாம் மேற்கொள்ள வேண்டிய நட வடிக்கைகள் குறித்தான உங்களுடைய மேலான ஆலோசனைகளை நீங்கள் எல்லோரும் வழங்கிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
நீட் தேர்வு என்பது விலக்க முடியாத தேர்வு அல்ல!
நீட் தேர்வு என்பது ஏதோ விலக்க முடியாத தேர்வு அல்ல. பயிற்சி மய்யங்களின் நலனுக்காக யாரோ சிலர் தங்களின் சுயநலனுக்காகச் சொல்லி ஒன்றிய அரசை தவறாக வழி நடத்தி நடத்தும் தேர்வு அது. அதையும் முறையாக நடத்தவில்லை என்பது பல்வேறு மாநிலங்களில் சிபிஅய் மூலமாக வழக்குகள் நடந்து வருவதுமூலம் உங்களுக்கும் தெரியும் நாட்டுக்கும் நன்றாக தெரியும்.
நேற்று உச்சநீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பு நமக்கு மாபெரும் நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது. நமது சட்டப் போராட்டத்தை தொய்வில்லாமல் தொடர்ந்து நடத்தினால், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.”
இவ்வாறு முதலமைச்சர் அவர்கள் உரையாற்றினார்.
கலந்துகொண்டோர்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று (9.4.2025) தலைமைச் செயலகத்தில், நீட் தேர்வு முறையை அகற்றுவதற்கான சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பான அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர் துரைமுருகன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினரும், மூத்த வழக்குரைஞருமான
பி. வில்சன், சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், அரசு தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார், சட்டத்துறை செயலாளர் எஸ். ஜார்ஜ் அலெக்சாண்டர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.