நமது அருமை கெழுதகை நண்பரும், காங்கிரஸ் பேரியக்கத்தில் மாணவப் பருவம் முதல் உழைத்தவரும், தமிழ்க்கனல் மிக்க தமிழாய்வாளருமான தோழர் திரு. குமரி அனந்தன் அவர்கள் (93) இன்று (09-04-2025) காலை மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனையும், துயரமும் அடைந்தேன்; அவருடனான அரசியல் தாண்டிய நட்பு ஓர் அரை நூற்றாண்டுக்கும் அதிகமானது. அவரது நடைப்பயணங்களைத் துவக்கி வைக்கப் பலமுறை அழைப்பார்.
அவருடன் உரிமை எடுத்துக் கொண்டு பழகுவோம். பெரியார் திடல் நிகழ்ச்சிகள் பலவற்றுக்குக் கேட்பாளராகவும் வருகை தந்து எங்களை வியப்பில் ஆழ்த்துவார்.
காமராசரின் சீரிய தொண்டராகவும், நம்பிக்கைக்குரியவராகவும், காந்தியாரின் உண்மைத் தொண்டராகவும் வாழ்ந்தவர்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அவரைப் பனை வாரியத் தலைவராக்கி மகிழ்ந்தார். நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தகைசால் தமிழர் விருதினை அளித்துப் பெருமைப்படுத்தினார். எவரித்திடலும் பண்போடும், பாசத்தோடும் பழகுபவர்; சிறந்த மனிதநேயர் ஆவார். அவரது மறைவு அவர்தம் குடும்பத்திற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் மட்டுமல்ல, தமிழ்நாட்டுப் பொதுவாழ்விற்கும், தமிழுலகத்திற்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு இரங்கலையும், அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர், குறிப்பாக அவரது மகள் டாக்டர் தமிழிசை அவர்களுக்கும், மற்றவர்களுக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் நமது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
9.4.2025
சென்னை