தமிழ்நாட்டு ஆளுநர் (?) கூட கம்ப இராமாயணத்தைக் கொண்டாடுகிறார். கம்பன் பிறந்ததாகக் கூறப்படும் தேரிழந்தூர் வரை மெனக்கட்டு சென்றிருக்கிறார்.
கம்பன் நேர்மையானவனாக இருந்தால், வால்மீகி இராமாயணத்தில் உள்ள உத்தர காண்டம் என்ற பகுதியை கைவிட்டது ஏன்?
ஏனென்றால் சம்புகன் என்ற சூத்திரன் தவம் இருந்தான் என்ற காரணத்துக்காக வருண தர்மத்தைக் காப்பாற்ற அவதாரம் எடுத்ததாகக் கூறப்படும் ராமனால் வெட்டிக் கொல்லப்பட்டான். இதனை மறைக்க வேண்டிய அவசியம் கம்பனுக்கு ஏன் ஏற்பட்டது?
வால்மீகியாவது ராமனை ஒரு மனிதனாகப் படைத்தான் காட்டிக் கொடுத்த கம்பனோ ராமனைக் கடவுளாக அல்லவோ சித்தரித்துள்ளான்.
இராமாயணம் சாம்பலானது
இந்தியா முழுவதும் கவுதம புத்தரின் 2500 ஆம் ஆண்டு விழாவையொட்டி 1956-ஆம் ஆண்டு நான்கு நாள் புத்தர் பிறந்த நாள் விழாக்கள் கொண்டாடப்பட்டன. தமிழ்நாட்டிலும் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் 4 ஆம் நாள் நிகழ்வாக தந்தை பெரியாரும் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். சென்னை வானொலி, மூன்று நாள் நிகழ்ச்சியை மட்டும் ஒலிபரப்பி விட்டு, நான்காம் நாள் பெரியார் பங்கேற்ற நிகழ்ச்சியை மட்டும் நிகழ்ச்சியைப் பதிவு செய்தும் ஒலிபரப்பாமல் விட்டுவிட்டது. “வானொலி இதை ஏன் ஒலிபரப்பவில்லை, ஒரு வாரத்துக்குள் ஒலி பரப்ப வேண்டும்; அப்படி ஒலிபரப்பாவிட்டால் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக ‘ராமன்’ படம் எரிக்கப்பட்டு விஷயம் மக்கள் அறியும்படி செய்யப்படும்” என்று பெரியார் அறிவித்தார். 1.8.1956 அன்று தமிழ்நாடு முழுதும் பொதுக் கூட்டங்கள் போட்டு ராமன் படத்தை எரிக்குமாறு பெரியார் அறிவித்தார். அன்று சென்னை மீரான் சாயபு தெருவிலுள்ள அவரது இல்லத்தில் பெரியாரும், குத்தூசி குருசாமியும் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு 1965-இல் பெரியார் ‘ராம நவமி’ நாளான 9.4.1965 அன்று கம்ப இராமாயணம் எரிப்புப் போராட்டத்தை தமிழ்நாடு முழுதும் நடத்தினார். ‘‘இராமாயண நூலை எரித்து அதன் சாம்பலை பெரியார் திடலுக்கு அனுப்புங்கள்’’ என்று தந்தை பெரியார் விடுத்த அறிவிப்பை அடுத்து பெரியார் திடலில் அஞ்சல் மூலம் சாம்பல்கள் பொதிந்த பார்சல்கள் வந்துகொண்டே இருந்தன.
ஆயிரந்தான் கம்பன் ஆரியக் கதையைப் பாடியிருந் தாலும் அவ்வளவுச் சுலபத்தில் கம்பன் படைப்பை அரங்கேற்ற விட்டார்களா ஆரியப் பார்ப்பனர்கள்? என்னதான் ஆரிய அடிமையாக இருந்தாலும் கம்பன், சற்சூத்திரனாயிற்றே -அதனால் திருவரங்கத்து வைணவப் பார்ப்பனர்கள் கம்பனை அலைக்கழித்த கொடுமை இருக்கிறதே அதனை விவரித்தால் அது ஓர் இராமாயணமாக வளர்ந்து போகும்.
பன்னீராயிரம் பாடல்களையும் சுமந்து கொண்டு கம்பன் திருவரங்கம் சென்று வைணவப் பெரிய மனிதர்களின் அடி பணிந்தான்.
அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? ‘சமஸ்கிருத மொழியில் இருந்தால் ஒன்றும் யோசனை பண்ண வேண்டியதில்லை; இது தமிழாக இருப்பதால், தமிழாய்ந்த தில்லைவாழ் மூவாயிரம் அந்தணர்கள்தான் இதனைச் சரிபார்க்க அருகர்; ஆகவே அவர்களிடம் சரி பார்த்து கைச் சான்றும் பெற்று வரும்படி’ ஆணை பிறப்பித்தனர்.
அங்கும் அலைந்தார் கம்பர். மூவாயிரம் பேர்களும் ஒன்று சேரும் நாளன்றுதான் கருத்துக் கூற முடியும் என்று ஒதுங்கிக் கொண்டனர்.
நாதியற்றுப் போன கம்பன் நடராசப் பெருமானின் பாதத்தில் தண்டனிட்டாராம். அவர் வழக்கம்போல கனவில் வந்து ஓர் ஏற்பாடு செய்தாராம்.
ஓர் அந்தணர் வீட்டுப் பிள்ளை நாகம் தீண்டி, மரணித்து விடும். அந்த வீட்டில் மூவாயிரம் அந்தணர்களும் பிரசன்னம் ஆவார்கள். அப்பொழுது நீ பாடியுள்ள நாகபாசபடலப் பாடலை எடுத்து விட்டால், செத்துப் போன அந்தணச் சிறுவன் உயிர் பிழைப்பான். அப்பொழுது சந்தோஷப்பட்டு அந்தணர்கள் கைச்சாற்றுக் கொடுப்பார்கள் என்றாராம் – சிதம்பரம் நடராசன் என்னும் தில்லை வாழ் கடவுள். அவ்வாறே நடந்ததாம். இதற்குப் பன்னிரெண்டு ஆண்டுகள் காத்துக் கிடக்க வேண்டியிருந்ததாம் கம்பனுக்கு.
மீண்டும் திருவரங்கம் சென்றார் கம்பர். அப்பொழுதாவது மனம் இரங்கியதா அந்த வைணவப் பார்ப்பனர்களுக்கு அங்கிருந்து திருநறுங்கொண்டை என்னும் ஊரில் உள்ள சமணப் புலவர்களின் இசைவைப் பெற்று வருமாறு ஆணை பிறப்பித்தனராம். அங்கும் சென்று அவர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விடையளித்து கைச் சான்று பெற்று வந்தார். அத்தோடு முடிந்ததா அவரின் கதை? இல்லை இல்லை.
மாவண்டூரில் பண்டித சிரேட்டனாகிய ஒரு கருமான் இருக்கிறான். அவரிடம் கையொப்பம் போய் வாங்கி வா என்று ஆணை பிறப்பித்தனர் திருவரங் கத்து வைணவப் பார்ப்பனர்கள். அங்கும் சென்று அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் விடையளித்து சான்றொப்பம் வாங்கி வந்தான் கம்பன்.
அப்பாடி முடிந்தது: கம்பன் காவியம் அரங்கேறி இருக்கும் என்று எண்ணிட வேண்டாம். சூத்திரன் எழுதிய காவியத்தை அவ்வளவுச் சீக்கிரம் அரங்கேற்ற அனுமதிப்பார்களா?
தஞ்சாவூரில் அஞ்சனாட்சி என்னும் தாசி ஒருத்தி இருக்கிறாள் – அவள் பிரபல வித்துவா மிசையிருக்கிறாள் அங்கு சென்றுவா என்றனர், சுய மரியாதையற்ற அந்தப் புலவனோ அங்கும் சென்றான் – அவள் பங்குக்குச் கேட்ட கேள்விகளுக்கும் விடை புகன்று விடைபெற்று திருவரங்கம் வந்து சேர்ந்தனன்.
எல்லாம் சரிதான், உன் மகன் அம்பிகாபதியின் ஒப்புதல் எங்கே என்று அடுத்த கேள்வியைப் போட் டனர். அவமானம் என்றால் ஒன்றா – இரண்டா? அவனிடமும் சென்றான்.
கடைசியாக ஆயிரத்தெட்டு கேள்விகளை திருவரங்கத்துப் பார்ப்பனர்கள் குடைந்து குடைந்து கேட்டு திருவரங்கம் கோயிலில் அரங்கேற அனுமதித்தனர்.
கம்ப நாட்டாழ்வான் என்றாலும் சரி, கவிச் சக்ரவர்த்தி என்று கிரீடம் சூட்டினாலும் சரி – கம்பன் யார்? சூத்திரன் தானே? அந்தப் பார்வையில் ஆரியப் பார்ப்பனர்கள் அவனை அலைய விட்டு அவமதித்த பாங்கு இருக்கிறதே – அது சாதாரணமானதா?
தமிழாய்ந்த பட்டிமன்ற பு(ளி)லிகள் உறுமுகிறார்களே – ஒரே ஒரு வார்த்தை இதுகுறித்துப் பேசுவதுண்டா?
கம்பனைப் போல இவர்களும் காட்டிக் கொடுப்ப தற்காகவே இருக்கிறார்களே – அவர்கள் எப்படி சர்ச்சிப்பார்கள் கருத்துகளைத்தான் எடுத்துக் கூறுவார்கள்?
– கருஞ்சட்டை