அகில இந்திய காங்கிரஸ் இயக்கத்தின் மூத்த தலைவர் குமரி அனந்தன் மறைவையொட்டி சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு நேரில் சென்று திராவிடர் கழகத்தின் சார்பில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் குமரி அனந்தன் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ . அன்புராஜ், காரைக்குடி மாவட்ட கழக காப்பாளர் சாமி. திராவிட மணி, தென் சென்னை மாவட்ட தலைவர் இரா. வில்வநாதன், மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் ஆ. வந்தியத் தேவன், மதிமுக மாவட்ட கழக செயலாளர் சு. ஜீவன், தென் சென்னை மாவட்ட மதிமுக செயலாளர் வழக்குரைஞர் சைதை சுப்பிரமணியன், எழும்பூர் நிசார், காரை செல்வராஜ், கண்ணன், திராவிடர் கழக இளைஞரணி துணை செயலாளர் சோ . சுரேஷ், மாவட்ட துணைத் தலைவர் கரு. அண்ணாமலை, விருகை செல்வம், அரும்பாக்கம்
சா .தாமோதரன், மூவேந்தன், ஆனந்த், க .கலைமணி, கே. என்.மகேஷ், இரா. யுகேஷ், முரளி கிருஷ்ணன் சின்னத்துரை, அறிவுச் செல்வன் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர். (சென்னை, 9.4.2025)
மறைவுற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் குமரிஅனந்தன் உடலுக்கு இறுதி மரியாதைசெலுத்திய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
என்னுடைய கெழுதகை நண்பர் இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன் அவர்கள், ஏறத்தாழ ஓர் அறுபது ஆண்டுகாலமாக நாங்கள் ஒன்றாகப் பழகியவர்கள்.
கட்சிகளுக்கு, அரசியலுக்கு அப்பாற்பட்டு எங்களுடைய நட்பு என்பது பிரிக்க முடியாத நட்பாக என்றைக்கும் இருந்தது.
பெரியார் திடலில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்குத் திடீரென்று வந்து, பார்வையாளராக அமர்ந்து எங்களிடம் அன்போடு பேசிச் செல்வார். அப்படிப்பட்ட தமிழின உணர்வாளராகவே அவர் இருந்தார்.
எல்லா தலைவர்களிடமும் பண்போடும், பாசத்தோடும் பழகக் கூடியவர். நாங்கள் இருவரும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்கின்ற காலகட்டத்தில், எதிர் எதிர் முகாமில் இருந்தவர்கள்.
என்றாலும், எங்களுடைய நட்பு என்பது இருக்கிறதே, அது ஒருபோதும் குறைந்ததில்லை.
அவருடைய தமிழ்த் தொண்டு நாடறிந்த ஒன்றாகும். தமிழுக்காக அவர் செய்த பல்வேறு ஆற்றல் மிகுந்த ஆளுமைகள், வரலாறாக என்றைக்கும் நிலைத்திருக்கும்.
மணியார்டர் விண்ணப்பங்கள், தமிழ்நாட்டில் தமிழில் இருக்கவேண்டும் என்பதற்காக, நாடாளுமன்றத்தில் அவர் போராடி, தமிழுக்கு உரிய இடத்தைப் பெற்றுத் தந்தவர்.
கடைசிவரையில் அவர் ஒரு போராளியாக வாழ்ந்தார். நடைப் போராளியாகவும் தமிழுக்காக இருந்த அவர், என்றைக்கும் வாழ்வார்.
புரட்சிக்கவிஞர் அவர்கள் சொன்ன தைப்போல, ‘‘தமிழுக்குத் தொண்டு செய்தோர் சாவதில்லை’’ – அதுபோல, நமது இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன் அவர்கள், என்றைக்கும் வரலாற்றில் தமிழ்க்குமரியாகவே அவர் வாழ்வார்.
அவருடைய நினைவைப் போற்று வோம்!
அவருடைய பொதுவாழ்க்கை என்பது ஒழுக்கம் நிறைந்த பொதுவாழ்க்கை; எளிமை நிறைந்த பொதுவாழ்க்கை. காந்தியாரின் உண்மையான தொண்டராகவும், காமராஜரின் தொண்டராகவும், கலைஞருடைய நேசிப்பாளராகவும், இன்றைய ‘திராவிட மாடல்‘ அரசின், சிறந்த ஆதரவாளராகவும் இருந்தார்.
அதற்குப் பொருத்தமாக, ‘திராவிட மாடல்‘ ஆட்சி, அவருக்குத் ‘‘தகைசால் தமிழர்‘‘ விருது கொடுத்தது மட்டுமல்ல; அவரின் இறுதி நிகழ்வு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருப்பது, தமிழ்கூறும் நல்லுலகத்தின் நன்றிக்கும், நினைவிற்கும் உரியது.
எனவே, என்றும் குமரி, குமரியாகவே வாழ்கிறார், அவர் மறையவில்லை!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடையே கூறினார்.