மணிமண்டபம் – பயனுள்ள வகையில் இளைய தலைமுறையினர் வரலாறு அறியும் வகையில் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்துவது சிறப்பு!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டில் சுயமரியாதை இயக்கத்தின் முதல் தலைவராக தந்தை பெரியாரால் அறிவிக்கப்பட்ட ஊ.பு.அ.சவுந்தரபாண்டியனாருக்கு மணிமண்டபம் அரசு சார்பில் எழுப்ப இருப்பதாக நமது முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்திருப்பது பாராட்டத்தக்கது – வரவேற்கத்தக்கது! அந்த மணிமண்டபம் இளைய தலைமுறையினர் வரலாறு அறியும் வகையில் சொற்பொழிவுகள் உள்ளிட்டவை நடைபெறும் அறிவுக் கூடமாக அமைய ஆவன செய்வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:
தந்தை பெரியார் அவர்கள் தொடங்கிய (நிறுவனராக இருந்து) சுயமரியாதை இயக்கம், அதன் முதல் மாகாண மாநாட்டை செங்கற்பட்டில் நடத்தியபோது, அதன் தலைவராக, தந்தை பெரியார், தன்னை அறிவிக்காமல், அவரால் பெரிதும் போற்றப்பட்ட பட்டிவீரன்பட்டி W.P.A.சவுந்திரபாண்டியன் அவர்களையே தலைவராகவும், பெரியார், அவ்வியக்கத்தின் துணைத் தலைவராகவும், (மற்ற செயற்குழு உறுப்பினர்களும் உண்டு) அறிவித்தது – அப்போதைய வியப்பிற்குரிய செய்தியாகும்!
சுயமரியாதை இயக்கத்
தளபதிகளாகத் திகழ்ந்தோர்!
தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத் தளபதிகளாகத் திகழ்ந்தோர் – தென்மண்டலத்தில் அடிநாளில் மதுரை மாவட்டத்தில் W.P.A.சவுந்திர பாண்டியனாரும், இராமநாதபுரம் மாவட்டத்தில் சிவகங்கை இராமச்சந்திரனாரும், குமரி பகுதியில் வழக்குரைஞர் நாகர்கோவில் பி.சிதம்பரனாரும், நெல்லை தூத்துக்குடி பகுதியில் செ.தெ.நாயகம் அவர்களும் ஆவார்கள்.
மதுரை மாவட்டத்தில் அக்காலத்தில் ஓட்டப்பட்ட தனியார் பேருந்துகளில், தாழ்த்தப்பட்ட சகோதரர்கள், சகோதரிகள் ஏற்றப்படுவதில்லை என்ற கொடுமை இருந்தது.
அதனை அறவே ஒழிக்க சவுந்திரபாண்டியனார், மதுரை ஜில்லா போர்டு தலைவராக இருந்து ஆட்சி செலுத்தியபோது, (பஸ் பர்மிட் வழங்கும் அதிகாரம் இவருடையது என்பதால்,) ஆதிதிராவிட பழங்குடி சமூக மக்களை ஏற்ற மறுத்த பேருந்துகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவிப்புக் கொடுத்து, தீண்டாமைக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்.
‘அச்சம் அகற்றிய அண்ணல்’ என்று இன்றும் நினைவு கூறப்படுபவர் W.P.A.சவுந்திரபாண்டியனார் அவர்கள்!
சுயமரியாதை இயக்கம் அதன் சாதனைமிகு நூற்றாண்டினைக் கொண்டாடும் இந்தக் கால கட்டத்தில், அதன் முதல் தலைவர் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்றவர்களின் பெருமதிப்பைப் பெற்ற சுயமரியாதைச் சுடர் சவுந்திரபாண்டியனாருக்கு பட்டிவீரன்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பு மிகப்பொருத்தமானது!
நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டு!
எதையும் கூர்த்த மதியுடன் செயலாற்றும், நமது ‘திராவிட மாடல்’ அரசின் ஒப்பற்ற முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகருக்கு நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டு.
மணிமண்டபங்கள் வெறும் ‘‘நினைவுக்’’ கூடங்களாக மட்டுமல்லாமல், அவர்களது தொண்டறத்தை அவ்வப்போது இளைய தலைமுறையினருக்குப் புரிய வைத்திட சொற்பொழிவுகள் – நிகழ்ச்சிகளை ஆண்டிற்குப் பலமுறை அரசோ அல்லது அரசால் அவர்கள் தொடர்பினரைக் கொண்டு ஒரு குழு ஏற்படுத்தி, அம்மணிமண்டபங்களை செயலூக்கிகளாக இளம் மாணவர்களின் அறிவுக் கூடங்களாகவும் மாலை 8 மணிவரை கூட இயங்கிடும் வகையில் செய்தால் மிகுந்த உறுபயன் விளைவது உறுதி!
செயலாக்கத் திட்டம் ஒன்றினை
உருவாக்கினால் நல்லது!
இதுபற்றி செயல்திறன் மிக்க நமது தமிழ்நாடு அரசும், மாண்பமை முதலமைச்சரும் சிந்தித்து, செய லாக்கத் திட்டம் ஒன்றினை உருவாக்கினால் நல்லது!
சிந்திப்பார்களாக!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
9.4.2025