நமது முதலமைச்சர் இந்தியாவிற்கே பெற்றுத் தந்துள்ளார்! உண்மையான ‘சவுக்கிதார்’நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்து – பாராட்டுத் தெரிவித்த தமிழர் தலைவர் செய்தியாளர்களிடையே அளித்த பேட்டி
சென்னை, ஏப்.9 தி.மு.க. அரசு சார்பில் தமிழ்நாடு ஆளுநரின் போக்குகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் நேற்று (8.4.2025) அளித்த தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களுக்கான மாநில உரிமைகளைப் பெற்றுத் தந்துள்ளது; அந்த வகையில், உண்மையான சவுக்கிதார் – காவலர் இவர்தான் என்று செய்தியாளர்களிடம் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறியுள்ளார். உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையொட்டி, அண்ணா அறிவாலயத்தில் நேற்று (8.4.2025) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்துப் பொன்னாடை அணிவித்து வாழ்த்துச் சொல்லி பாராட்டினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
வரலாற்றுச் சிறப்புமிகுந்த ஒரு தீர்ப்பு! அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றிய, ஜனநாயகத்தைக் காப் பாற்றிய,சட்டப்பேரவை உரிமைகளைக் காப்பாற்றிய, மாநில உரிமைகளைக் காப்பாற்றிய ஒரு மகத்தான தீர்ப்பு இன்று (8.4.2024) உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பாகும்.
இதற்கெல்லாம் அடிப்படையாகத் துணிந்து, சட்டத்தின் மூலமாகவே சந்தித்து வெற்றி பெற்ற முதலமைச்சர் – ‘திராவிட மாடல்‘ முதலமைச்சர் அவர்கள், மிகச் சிறப்பாக இந்தச் சாதனையைச் செய்திருக்கிறார்.
இந்திய அரசமைப்புச் சட்ட வரலாற்றில் இல்லாத ஒரு திருப்பத்தை உருவாக்கியுள்ளார்
இதுவரை, இந்திய அரசமைப்புச் சட்ட வரலாற்றில் இல்லாத ஒரு திருப்பத்தை உருவாக்கியுள்ளார். மாநில உரிமைகளை நிலைநாட்டியுள்ளார். இந்த வழக்கின் வெற்றியின்மூலமாக, மாண்பமை உச்சநீதிமன்றத்தின் அமர்வின்மூலமாக, அரசமைப்புச் சட்டம் போற்றக்கூடிய விழுமியங்களை சரியாகச் செய்திருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க தமிழ்நாட்டில் ஓர் அடாவடித்தனத்தைச் செய்துகொண்டிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவியினுடைய போக்குக்குச் சரியான கண்டனமாகும்.
அவர் உடனடியாக பதவி விலகவேண்டும்; அல்லது விலக்கப்படவேண்டும். இதுதான் அந்தத் தீர்ப்பினு டைய அடிப்படைத் தத்துவமாகும்.
நேர்மையற்ற முறையில் அவர் செயல்பட்டு இருக்கிறார் என்று உச்சநீதிமன்றம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. ஆகவே, நேர்மையற்ற ஓர் ஆளுநர், தமிழ்நாட்டில் நீடிக்கக் கூடாது. அது ஜனநாயகத்திற்கும் கேடு, அரசமைப்புச் சட்டத்திற்கும் கேடு. இதுபற்றி அடுத்தகட்டமாக, ஒத்த கருத்துள்ளவர்களை அழைத்து, என்ன நடவடிக்கை என்று பார்க்கவேண்டும்.
ஒரே நாளில், பல பல்கலைக் கழகங்கள் நம்முடைய முதலமைச்சர் அவர்களால் காப்பாற்றப்பட்டு இருக்கின்றன.
இதுவரை யார் யாரோ, ‘சவுக்கிதார்’ நான்தான் ‘காவலர்’ என்று சொன்னார்கள்.
அரசமைப்புச் சட்டக் காவலர்,
மாநில உரிமைகளின் காவலர்!
ஆனால், உண்மையான காவலர், ஜனநாயகக் காவலர், சமூகநீதிக்காவலர், அரசமைப்புச் சட்டக் காவலர், மாநில உரிமைகளின் காவலர், சட்டப்பேரவைக் காவலர் என்ற முறையில், தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களின் உரிமைகளும் இதன்மூலமாகக் காப்பாற்றப்பட்டு இருக்கிறது.
இது ஒரு வரலாற்று அரசியல் திருப்பமாகும்.
செய்தியாளர்: தமிழ்நாடு ஆளுநரை மாற்றுவதற்கு, ஒன்றிய உள்துறை அமைச்சகம் முடிவு செய்திருக்கிறது என்று தகவல் வந்திருக்கிறதே?
தமிழர் தலைவர்: இப்போதாவது அவர்களுக்குச் சொரணை வந்ததற்கு நன்றி தெரிவிக்கின்றோம் – நீங்கள் சொல்வது உண்மையாக இருக்குமானால், அந்தச் சொரணை வந்ததற்காக நன்றி! சுயமரியாதையைக் காப்பாற்றுவதற்காக நன்றி! இவ்வாண்டு, சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவாகும்.
– இவ்வாறு செய்தியாளர்களிடையே கூறினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தமிழர் தலைவர் ஆசிரியருடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் சென்றிருந்தனர்.