சென்னை, ஏப். 9- சமையல் எரிவாயு உருளை விலை ரூ.50 உயர்வு, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.2 அதிகரிக்கப்பட்டிருப்பதற்கு அரசியல் கட்சித் தலை வர்கள் கடும் கண்டனம் தெரி வித்துள்ளனர்.
சமையல் எரிவாயு
விலை உயர்வு
சமையல் எரிவாயு விலை உயர்வின் மூலம் எளிய மக்களின் மீது பொருளாதார யுத்தத்தை தொடுக்கும் ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைக்கு எதிராக வலுவான கண்டன இயக்கங்களை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில், “பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு மக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, சமையல் எரிவாயு விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதோடு, பெட்ரோல் மற்றும் டீசல் மீது சிறப்பு கலால் வரி உயர்த் தப்பட்டதால் அதன் விலையும் அதிகரித்திருக்கிறது.
ஏற்கெனவே விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் – டீசல் விலை உயர்வு என்பது மேலும் ஒரு பேரிடியாகும். பன்னாட்டு அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு விலை குறைந்துவரும் நிலையில், சமையல் எரிவாயு விலை உயர்வு மூலம் சுமார் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கும், பெட்ரோல் மற்றும் டீசலுக்கான சிறப்பு கலால் வரி அதிகரிப்பால் சுமார் ரூ.32 ஆயிரம் கோடி அளவுக்குமான சுமையை ஒன்றிய பாஜக அரசு மக்கள் தலையில் சுமத்தியிருக்கிறது.
மக்களின் அன்றாட வாழ்க் கையில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிற இத்தகைய நடவடிக்கைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனது கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது. ஒன்றிய அரசு உடனடியாக எரிவாயு விலை மற்றும் சிறப்பு கலால் வரி உயர்வை திரும்பப் பெற வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகிறது.
இத்தகைய விலை உயர்வின் மூலம் எளிய மக்களின் மீது பொருளாதார யுத்தத்தை தொடுக்கும் ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைக்கு எதிராக வலுவான கண்டன இயக்கங்களை நடத்த வேண்டுமெனவும் கட்சி அணிகளை மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது” இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
ஜோதிமணி
காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, “உல கெங்கும் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து கொண் டிருக்கிறது. நியாயமாகப் பார்த்தால் பெட்ரோலியப் பொருள்களின் விலை குறைக்கப்படவேண்டும். ஆனால், இந்தப் பகல்கொள்ளை பா.ஜ.க அரசாங்கம் விலையை உயர்த்தி, ஏழை எளிய நடுத்தர மக்களின் வயிற்றில் அடிக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 26 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுக்கிறது.
கச்சா எண்ணெய் விலை உச்சத்திலிருந்தபோது கூட, காங்கிரஸ் ஆட்சியில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 450தான். ஆனால், இன்று ரூ. 1000 ஆகிவிட்டது. பெட்ரோல், டீசல் விலையும் இருமடங்காகிவிட்டது. இத்துடன் கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு மற்றும் வேலைவாய்ப்பின்மை. நரேந்திர மோடி ஆட்சியில் சாதாரண மக்கள் நிம்மதியாக வாழவே முடியாது” என்று பதிவிட்டிருக்கிறார்.
செல்வப்பெருந்தகை
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது ட்விட்டர் பக்கத்தில், “மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த 2014ஆம் ஆண்டு முதல், வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை 410 ரூபாயில் இருந்து தொடர்ந்து உயர்ந்து கொண்டே போய் தற்போது ரூ 820 என்ற அளவில் உயர்ந்துள்ளது. அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய தேவையான சமையல் எரிவாயு உருளை விலையை இன்று ரூபாய் 50 என்ற அளவில் உயர்த்தி அடித்தட்டு மக்களில் தலையில் இடியை இறக்கியுள்ளது ஒன்றிய பாஜக அரசு. மேலும், வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் ஏழை, எளிய மக்களின் துயரத்தைக் கண்டுகொள்வதே இல்லை.
நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வரும் சூழலில், காஸ் சிலிண்டர் விலையையும் ஒன்றிய பாஜக அரசு உயர்த்தியுள்ளதை வன் மையாகக் கண்டிக்கிறேன். இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.