முடியாட்சி நடைபெறும் சில நாடுகளில் அரசுக்கு எதிராக செயல்படுபவர்களை பிடித்து வைத்து தலையைத் துண்டாக்கி விடுவார்கள். இப்போது சில ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் சிரியா போன்ற நாடுகளில், புரட்சிப்படையினர் என்று கூறிக் கொள்ளும் ஆயுதக்குழுக்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அப்பாவிகளைப் பிடித்துவந்து பொது இடத்தில் வைத்து தலையைத் துண்டிப்பார்கள்.
அதற்குக் கனமான பெரிய அளவிலான வெட்டுக் கத்தியைப் பயன்படுத்துவார்கள். இவ்வகைக் கத்தி தலையை வெட்ட மட்டுமே பயன்படும், மாடுகளைக் கூட இது வெட்டாது. காரணம், அவற்றின் கழுத்து மிகவும் தடிமனாக, அகலமாக உள்ளதால் அவற்றை வெட்ட முடியாது. ஆடுகளை வெட்ட சாதாரண அரிவாள் போதுமானது. அப்படி இருக்க மனிதர்களின் தலையை மட்டுமே வெட்டப் பயன்படும் இந்த ஆயுதத்தை எதற்காக ராமநவமி ஊர்வலத்தில் கொண்டு வர வேண்டும்?
இராமாயணத்தை ஒழுங்காகப் படித்தவர்களுக்கு, இது ஆச்சரியத்தையோ, அதிர்ச்சியையோ ஒரு போதும் ஏற்படுத்தாது.
ஒரு பார்ப்பான் வீட்டில் அவன் மகன் மரணம் அடைந்ததற்குக் காரணம் – வருண தர்மத்துக்கு எதிராக சூத்திரன் ஒருவன் தவம் இருந்ததுதான் என்று கூற, தவம் செய்து கொண்டிருந்த சம்புகன் என்ற சூத்திரனை வாளால் வெட்டிக் கொன்றவன் தானே ராமன்.
‘ஓ! வலது கையே, இறந்து போன பிராமணச் சிறுவன் மறுபடியும் உயிர் பெற்று எழுவதற்கு இந்தச் சூத்திரத் துறவியைக் கொல்லுவதே மருந்தாகையால், கூசாமல் இவனை வெட்டி விடு, நீ ராமனின் அங்கங்களில் ஒன்றன்றோ?’ என்று கூறி, ஒரு காட்டில் தலை கீழாகத் தொங்கி தவம் செய்துகொண்டிருந்த சம்புகன் என்ற சூத்திரனை வாளால் வெட்டிக் கொன்றவனேதான் ராமன்!
சூத்திர சம்புகன் ராமனால் வெட்டப்பட்டுக் கொல்லப்பட்ட அந்தத் தருணத்திலேயே, செத்துப் போன பார்ப்பனன் வீட்டுச் சிறுவன் உயிர் பிழைத்தான் என்று வால்மீகி இராமாயணத்தின் உத்தரகாண்டம் பகுதி சொல்லவில்லையா?
இராமன் அவதரித்ததே வருண தருமத்தைக் காப்பாற்றத்தானே. இந்து மதத்தின் அவதாரமே கையில் கொலைகார ஆயுதத்துடன் திரிந்தான் என்றால், அந்த ராமன் பிறந்ததாகக் கூறப்படும் ‘ராம நவமி’ நாளில் அவன் பக்தர்கள், ராமநவமி ஊர்வலத்தில் ஆயுதத்தை ஏந்திச் செல்வதில் என்ன ஆச்சரியம்?
ஆர்.எஸ்.எஸின் ஒரு பிரிவாகிய விஸ்வ ஹிந்து பரிஷத் (வி.எச்.பி.) நடத்தும் நிகழ்ச்சிகளில் திரிசூலம் வழங்குவது உண்டே!
ஒரு சூலம் கிறித்தவர்களையும், இன்னொரு சூலம் முஸ்லிம்களையும், மூன்றாவது சூலம் மதச் சார்பின்மை பேசுபவர்களையும் பதம் பார்க்கும் என்று சூலங்களை வழங்கி வன்முறை வெறியைத் துண்டுவதுண்டே!
பசுவதைத் தடுப்பு என்ற பெயரால் பச்சைத் தமிழர் காமராசர் டில்லியில் ஓய்வில் இருந்தபோது இதே சாமியார்கள் சூலங்களோடு அணி வகுத்து நின்று, காமராசர் தங்கியிருந்த வீட்டுக்குள் புகுந்து கொலை செய்ய எத்தனிக்கவில்லையா?
ராம நவமி ஊர்வலத்தில் கொலைகார ஆயுதங்களுடன் அவர்கள் அணி வகுத்துச் சென்றதில் ஆச்சரியம் இல்லை. இதனை நாட்டு மக்கள் நல்ல வண்ணம் புரிந்து கொண்டு, வெகு மக்கள் மத்தியில் இந்த வன்முறையாளர்களைத் தனிமைப்படுத்துவதுதான் நாம் செய்ய வேண்டிய அடிப்படைக் கடமையாகும்.