திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ‘சன் நியூஸ்’ தொலைக்காட்சிக்கு தொலைப்பேசி வாயிலாக அளித்த பேட்டி வருமாறு:
நெறியாளர்: உச்சநீதிமன்றத் தீர்ப்பை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர் பதில்: உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தெளிவாக மூன்று செய்திகளைச் சொல்லியி ருக்கின்றனர் நீதிபதிகள்.
தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு சரியானது என்று இத்தீர்ப்பின்மூலம் வெளியாகியிருக்கின்றது ஒன்று.
இரண்டாவதாக, ஆளுநருக்கு, அவருக்கு இருப்பதாக, இல்லாத அதிகாரத்தை நினைத்துக் கொண்டு நடந்தது தவறு என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
வீட்டோ பவர் கிடையாது. அதேபோன்று, மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைக்க ஆளுநருக்கு அதிகாரம் ஏதுமில்லை; இவர் அத்தனையும் செய்திருக்கிறார் என்பதையெல்லாம் தெளிவாகச் சொல்லி, இன்னொரு வழக்கினை தனியே நாங்கள் விசாரிப்போம் என்றும் தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
தமிழ்நாடு ஆளுநர் நடந்துகொண்டுள்ளது சட்டப்படி சரியில்லை என்பதையே தங்களது தீர்ப்பில் தெளிவுபடுத்தி இருக்கின்றனர்.
இதன்மூலம் நாம் பெறவேண்டிய செய்தி என்னவென்றால், அரசமைப்புச் சட்டத்தின்மீது அவர் எடுத்துக்கொண்ட பதவிப் பிரமாணத்திற்கு விரோத மாகவும், அரசமைப்புச் சட்டக் கடமைகளை ஆற்றுவதற்கு முரணாகவும் நடந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவியை ஒன்றிய அரசு திரும்பப் பெறவேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றார் தமிழர் தலைவர்.