பெண்கள் ஹாக்கியில் புதிய சாதனையை இந்தியா கொண்டாடி வருகிறது. 300 பன்னாட்டுப் போட்டிகள் என்ற அரிய மைல்கல்லை எட்டிய முதல் இந்திய மகளிர் ஹாக்கி வீராங்கனை என்ற வரலாற்றை வந்தனா கட்டாரியா படைத்தார். 2005 முதல் 2010 வரை லக்னோவில் மாநில அரசு நடத்திய பெண்கள் ஹாக்கி போட்டியில் தனது திறமைகளை மெருகேற்றிய கட்டாரியா, ஆசிய வாகையர் போட்டியில் ஜப்பானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்த குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தினார்.
இது தொடர்பான அவரது பயிற்சியாளர் கூறும்போது பன்னாட்டு அளவில் இந்தியாவின் பெயரை உயர்த்திய வந்தனாவுக்கு இது ஒரு பெரிய சாதனை. நான் அவளுடைய விளையாட்டுத் திறமையைப் பார்த்திருக் கிறேன் நாங்கள் பேசும்போதெல்லாம் அவளுடைய வெற்றிக்காக எப்போதும் நாங்கள் காத்திருபோம்.
இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் ஜன்னெகே ஸ்கோப்மேன், வந்தனாவின் திறமைகளை பாராட்டினார், அவரது உடற்தகுதி, கடின உழைப்பு மற்றும் அவரது விளையாட்டு நுணுக்கம் உடனடியாக துல்லியமாக எடுக்கும் முடிவுகளை நினைவு கூர்ந்தார். ஹரித்வாரைச் சேர்ந்த வந்தனா, 2011 ஆம் ஆண்டு சீனாவின் ஓர்டோஸில் நடைபெற்ற மகளிர் ஆசிய வாகையர் போட்டியில் தன்னுடைய முதல் பன்னாட்டுப் போட்டியை துவங்கினார். இவரது வெற்றி அவ்வளவு எளிதாக கிடைத்தது அல்ல.
2021ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கின் அரையிறுதி ஹாக்கிப் போட்டியில் இந்திய மகளிர் அணி அர்ஜென்டினாவிடம் 2-1 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வியுற்றது. இந்திய மகளிர் ஹாக்கி அணியில் பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட சமுகத்தினர் இடம்பெற்றிருந்தாலேயே அணி தோல்வியுற்றதாகக் கூறி, உத்தராகண்டில் உள்ள அவரது வீட்டின்முன்பு மிகவும் அவதூறு வார்த்தை களைப் பேசி, அவரது குடும்பத்தாரை இழிவு செய்தனர். அரை நிர்வாணமாக ஆடினர். குப்பைகளை வீசிவிட்டுச் சென்றனர். ஜாதி ரீதியாக இழிவுபடுத்தி வந்தனாவின் உறவினர் குடும்பத்தை திட்டியும் உள்ளனர். இதை நாடாளுமன்றத்தில் கண்டித்துகுரல் எழுப்பிய ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மதுரை சுவெங்கடேசன். வந்தனா கட்டாரியாவிற்கு ஒரு கோடி ரூபாய் இந்திய அரசு கொடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சியின் போது அவரது காலணியில் கழிப்பறையைக் கழுவும் ஆசிட்டை யாரோ ஊற்றிவிட மிகவும் சிரமப்பட்டு பணம் சேர்த்து வாங்கிய விலை உயர்ந்த காலணி உருக் குலைந்து போனதால் வெறும் காலில் விளையாடியதாக அவர் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.