இமையம்
தமிழ்நாட்டில் பிறப்பால், வாழிடத்தால், உணவுப் பழக்கத்தால், பிற சமூகக் காரணிகளால் எஸ்.சி., – எஸ்.டி., மக்கள்மீது உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ யார் தாக்குதல் நடத்தினாலும் சம்பந்தப்பட்டவர்கள்மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், வன்கொடுமைக்கு உள்ளானவர்களுக்கு உரிய இழப்பீட்டை விரைவாகப் பெற்றுத் தருவதற்காகவும் அமைக்கப்பட்டதுதான் இந்த தமிழ்நாடு ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் ஆணையம். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் மாநில அளவில் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. தேசிய அளவில் எஸ்.சி. – எஸ்.டி., ஆணையம் இருந்தாலும்கூட, பாதிக்கப்பட்டவர்களுக்குச் சட்டப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும்; விரைவாக நிவாரணம் வழங்க வேண்டும்; வன்கொடுமைகளுக்கு ஆளான மக்களின் சட்டக் குரலாக ஒலிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு தமிழ்நாடு முதலமைச்சர் இந்த ஆணையத்தை 2021இல் அமைத்தார்.
ஆணையத்தின் தலைவராக உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியும், உறுப்பினர் செயலராக அய்.ஏ.எஸ். அதிகாரி ஒருவரும், துணைத் தலைவர் மற்றும் அய்ந்து உறுப்பினர்களும் கொண்ட தன்னாட்சி அமைப்பாக செயல்பட்டு வருகிறது.
ஆணையம் தன்னிடம் வரும் புகார் மனுக்கள்மீது மூன்று மாதங்களுக்குள் தீர்வை எட்ட முயல்கிறது. 2025 மார்ச் மாதத்தில் மட்டும் வேலூர், சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவரின் முன்னிலையில், மாவட்டத்தின் அனைத்துத் துறைகளைச் சார்ந்த உயர் அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பொதுமக்கள் தங்களுடைய குறைகளை, தேவைகளைக் கூற ஏற்பாடு செய்யப்பட்டது. பெறப்படும் மனுக்கள் மீது உடனே தீர்வு வழங்கப்பட்டு வருகிறது. உடனடியாக தீர்வு எட்டப்பட முடியாத மனுக்களுக்கு 15 நாள்களுக்குள் தீர்வு காணப்பட்டு, அதற்கான அறிக்கையை ஆணையத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும். மேற்க்குறிப்பிட்டுள்ள அய்ந்து மாவட்டங்களிலும் ஆய்வுக் கூட்டத்தை ஆணையம் நடத்தியபோது, தாட்கோ மூலம் கடன் பெறப்பட்ட பயனாளிகள் 225 பேர், ஜாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் 191 பேர். இதன் மூலம் தீர்வு உதவித் தொகையாக ரூபாய். 3,16,12,500 (மூன்று கோடியே பதினாறு லட்சத்து பன்னிரண்டாயிரத்து அய்ந்நூறு ரூபாய்) வழங்கப்பட்டது. விலையில்லா வீட்டு மனைப்பட்டா 1,475 பேருக்கும், தூய்மைப் பணியாளர்கள் 206 பேருக்கு தையல் இயந்திரங்களும், நலவாரிய உறுப்பினர்கள் 138 பேருக்கு அடையாள அட்டை மற்றும் பல்வேறு சமூக நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. இது தனிப்பட்ட எஸ்.சி., – எஸ்.டி., ஆணையத்தின் முயற்சியால் நடந்திருக்கிறது.
அரசின் நலத்திட்டங்கள் எஸ்.சி., – எஸ்.டி., மக்களுக்குச் சென்று சேர்கிறதா என்பதைக் கண்காணிப்பதும், ஜாதிய வன்கொடுமைகள் நடைபெறும் இடங்களில் காவல்துறை எவ்வாறு செயல்படுகிறது, வழக்குகள் முறையாக நடக்கின்றனவா, ஜாதிக் கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தீர்வு உதவித்தொகை சரியாக வழங்கப்படுகிறதா என்பதை அவதானிப்பதும், காவல்துறையைச் சரியாகச் செயல்பட வைப்பதும் ஆணையத்தின் பணிகளில் முக்கியமானவை. இந்த ஆணையம் தமிழ்நாட்டில் வாழ்கிற எஸ்.சி., – எஸ்.டி., மக்களுக்கான சட்ட சமூகப் பாதுகாப்பு அமைப்பு ஆகும். மற்றபடி இது வேறு எந்த விதத்திலும் பிற சமூகத்திற்கு எதிரானது அல்ல. சமூகக் குற்றவாளிகள் உருவாகாமல் தடுப்பதும், சமூகக் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனைகளைப் பெற்றுத்தருவதும்தான் இந்த ஆணையத்தின் முக்கிய நோக்கம்.
ஆணையம் என்று ஒன்று இருக்கிறது என்பதும், அது எஸ்.சி., – எஸ்.டி., மக்களுக்காக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவல் அனைத்து மக்களுக்கும் இன்னமும் சென்று சேரவில்லை. விவரமறிந்தவர்கள், சங்கத்தினர், அமைப்பினர் மட்டுமே ஆணையத்தை அணுகக்கூடிய நிலைதான் இன்றும் இருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஆணையத்தை அணுகும் நிலை ஏற்பட வேண்டும். அப்போதுதான் ஆணையம் மேலும் வலுப்பெறும். ஆணையத்தை அமைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் நோக்கமும் நிறைவேறும்.
ஆணையத்திற்குப் புகார் மனுக்களை நேரில் வழங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அஞ்சல் மூலமாகவும் இமெயில் வழியாகவும் அனுப்பலாம். ஆணையத்திற்கு வரும் மனுக்களை வெறும் புகார், குற்றச்சாட்டு, தேவை சார்ந்தது என்று மட்டுமே அணுகாமல், தனிப்பட்ட ஒரு மனிதருடைய; ஒரு குடும்பத்தினுடைய; ஒரு ஊரினுடைய அத்தியாவசியத் தேவை, வலி, ஏக்கம், பரிதவிப்பு, அவலம், உயிர் வாழ்தலுக்கான பாதுகாப்பு, கண்ணீர் அனைத்தும் நிறைந்திருப்பதாகவே பார்க்கிறது. யாரையும் நிற்க வைக்கக் கூடாது, காக்க வைக்கக் கூடாது, மனம் நோகும்படி பேசக் கூடாது என்பது ஆணையத்தின் அடிப்படை நெறிகளாக இருக்கின்றன.
5300 ஆண்டுகளுக்கு முன்னதாக இரும்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்திய சமூகம், 3200 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்தை பயன்படுத்திய சமூகம், கீழடியில் நகர நாகரீத்தோடு வாழ்ந்த சமூகம், தொல்காப்பிய இலக்கண நூல் கண்ட சமூகம், சங்க காலத்தில் பெண்களும் கல்வி கற்றறிந்த சமூகமாக இருந்த தமிழ் இனம், பக்தி இலக்கிய காலத்தில் மொழியும் இலக்கியமும் கோவிலோடு இணைந்தது. அதன் பிறகுதான் ஜாதிய சமூகமாக மாறியது. 1100 ஆண்டுகளுக்கு மேலாக பின்பற்றி வந்த ஜாதிய பாகுபாடுகளை ஒரு நாளில், சட்டத்தால் மட்டுமே, நிர்வாகத்தால் மட்டுமே களைய முடியாது. மனம் மாற்றத்தின் மூலம் மட்டுமே ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை அகற்ற முடியும். அதற்கு நாம் மனிதர்களாக இருப்பதும், மனித மான்பை காப்பதும்தான் தீர்வு.
குரலற்றவர்களின் குரலாக, பாதுகாப்பற்றவர்களின் பாதுகாவலனாக, உரிமை கோருபவர்களின் உரிமைகளைப் பெற்றுத்தருபவனாக, ஆணையம் செயல்பட வேண்டும் என்றால் அனைத்து எஸ்.சி., – எஸ்.டி., மக்களும் தங்களுடைய சட்டபூர்வமான உரிமைகளுக்காக ஆணையத்தை அணுகினால்தான் இது சாத்தியம்.
இந்த ஆணையம் உங்களுக்கானது. இதை நீங்கள் பயன்படுத்தும்போதுதான் அந்த அமைப்பு உயிர் பெறும், முழுமை பெறும்.
தொடர்புக்கு:
தமிழ்நாடு ஆதி திராவிடர் (ம)
பழங்குடியினர் மாநில ஆணையம்,
எண் – 725, இரண்டாவது மாடி,
எல்.எல்.ஏ. பில்டிங்,
அண்ணா சாலை, சென்னை 600 002.
email: [email protected]