பெரம்பலூர், ஏப்.7- பெரம்பலூரில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில், திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பொதுச் செயலாளர் சிற்பி செல்வராஜ், திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் 72ஆவது பிறந்தநாள் முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் மாவட்ட அமைப்பாளர் அரிபாஸ்கர் தலைமையில், மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்க கூட்டத்திற்குத் தலைமை வகித்து சிறப்புரையாற்றிய பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேசியதாவது;
தமிழ்நாடு தற்போது இந்தியாவிலேயே முதல் இடத்தில் விளங்குகிறது, பொருளாதாரத்தில், கல்வியில், மருத்துவம் போன்றவற்றில் முன்னேறி இருக்கும் மாநிலப் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளதை தலைநிமிர்ந்து சொல்கிறோம் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கின்றது. ஆனால் கடைசி இடத்தில் எந்த மாநிலம் இருக்கிறது என்று கேட்டால், பாஜகவினர் ஆளும் உத்திரப்பிரதேசம் மாநிலமே கடைசி இடத்தில் இருக்கிறது.
எனவே தமிழ்நாடு முதலமைச்சர் ஆளுகின்ற இந்த மாநிலமானது இந்தியாவிற்கே முன்னோடியாக விளங்கக்கூடிய ஒரு மாநிலமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆகையால் தளபதி மு.க.ஸ்டாலின் எப்போதும் நிரந்தர முதலமைச்சராக இருந்திட எல்லோரும் உறுதுணையாக நிற்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.