செய்திச் சுருக்கம்

viduthalai
2 Min Read

கல்வி உதவித் தொகை – சரிபார்க்க உத்தரவு

கல்வி உதவித் தொகை பெறும் மாணவர்களின் விவரங்களை ‘எமிஸ்’ இணைய தளத்தில் சரிபார்க்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ச.கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே-19இல் வெளியீடு

பிளஸ்-2. பிளஸ்-1. வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது. இந்தப் பணியில் தமிழ்நாடு முழுவதும் 43,000 முதுநிலை பட்டதாரிகள் ஈடுபட்டுள்ளனர். திருத்தும் பணி ஏப்ரல் மாதம் 3ஆம் வாரத்தில் முடியும். அதன்பின் மதிப்பெண் பட்டியல் தயார் செய்யப்படும். திட்டமிட்டபடி மே மாதம் 19ஆம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிட தேர்வுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

6 நாள்களுக்கு
வெப்ப அலை

இந்தியாவின் வடமேற்கு மற்றும் மத்திய இந்தியாவில் உள்ள அரியானா, டில்லி, மேற்கு உ.பி., இமாச்சல் பிரதேசம், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான், மேற்கு ம.பி. பகுதிகளில் வெப்ப நிலை கடுமையாக அதிகரிக்கும். குறிப்பாக டில்லியில் ஏப்ரல் 6 அல்லது 7ஆம் தேதிக்குள் பகல் நேர வெப்பநிலை சுமார் 42 டிகிரி செல்சியசாக உயரும் என இந்திய வானிலை மய்ய இயக்குநர் ஜெனரல் எம்.மொஹபத்ரா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கோடை மழைக்கு வாய்ப்பு

தென்தமிழ்நாட்டில், உள் மாவட்டம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் 20ஆம் தேதி வரை கோடை மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகும் சூழல் ஏற்படுவதால் தமிழ்நாட்டில் அடுத்த சில நாள்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை அதிகம் இருக்காது. ஆனால், மற்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு, வைகை அணைகளுக்கு
நீர் வரத்து அதிகரிப்பு

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகள், குளம், கண்மாய், ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர் மட்டம் 56.40 அடியாக உள்ளது. நீர்வரத்து 110 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து 396 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 113.15 அடியாக உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *