செய்திச் சுருக்கம்

viduthalai
2 Min Read

நாட்டை படுகுழியில் தள்ளும் மோடி அரசு: சோனியா சாடல்

வக்ஃப் திருத்த மசோதா அரசமைப்பின் மீதான வெட்கக்கேடான தாக்குதல் என சோனியா காந்தி விமர்சித்துள்ளது. நாடாளுமன்றத்தில் மசோதா வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இது சமூகத்தை நிரந்தரமாக பிளவுபடுத்தி வைக்க வேண்டும் என்ற பாஜகவின் சதி எனவும் அவர் சாடியுள்ளார். கல்வி, சிவில் உரிமைகள் என எதுவானாலும், மோடி அரசு நாட்டைப் படுகுழியில் தள்ளுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதிய ரூ.500, ரூ.10 ரூபாய் நோட்டுகள்: ஆர்.பி.அய். அறிவிப்பு

ரூ.500 மற்றும் ரூ.10 கரன்சி நோட்டுகள் புதிதாக வெளியிடப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. காந்தி படங்கள் கொண்டிருக்கும் தற்போதைய கரன்சி நோட்டின் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், புதிதாக ரிசர்வ் வங்கி கவர்னராக பொறுப்பேற்றுள்ள சஞ்சய் மல்ஹோத்ராவின் கையெழுத்து புதிய நோட்டுகளில் இடம்பெறும். பழைய நோட்டுகளும் செல்லும். ரூ.100, ரூ.200 நோட்டுகளும் கூட விரைவில் மல்ஹோத்ரா கையெழுத்துடன் வெளியாக உள்ளன.

காவல் துறையில்
1,299 பணியிடங்கள்.

தமிழ்நாடு காவல் துறையில் 1,299 உதவி ஆய்வாளர், 2ஆம் நிலை காவலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். டிகிரி முடித்து, 20-30 வயதுடையோர் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.36,900 -ரூ.1,16,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொது மற்றும் துறை ரீதியான ஒதுக்கீடுதாரர்களுக்கு தனித்தனியாக எழுத்து தேர்வு நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் 7 முதல் மே 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அட காட்டுமிராண்டித்தனமே!

உ.பி. சம்பலில் சிக்கிய போலி மாந்திரீகர்களிடம் இருந்து அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. ஏழைகளே அவர்களது குறி. உங்கள் வீட்டில் இருக்கும் சிறுமிக்கு மாந்திரீக பூஜை செய்தால் பணம் கொட்டும் என பெற்றோரிடம் ஆசை காட்டி அந்த கும்பல் அத்துமீறியுள்ளது. தனியறையில் சிறுமியின் அந்தரங்க உறுப்பை வணங்கி பூஜை நடக்குமாம். அதன்பிறகு அவர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு அதனை காட்சிப் பதிவு செய்துள்ளனர்.

தங்க நகைக் கடன்: ஆர்.பி.அய்.க்கு உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

தங்க நகைக் கடன் புதிய விதிமுறை தொடர்பாக பதிலளிக்க ரிசர்வ் வங்கிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட தங்க நகைகளை வட்டியோடு அசல் தொகை செலுத்தி நகைகளைப் பெற்று, மறுநாள் புதிதாக அடகு வைக்க முடியும் என ரிசர்வ் வங்கி(RBI) அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், ஒன்றிய நிதித்துறைச் செயலர், ரிசர்வ் வங்கி மேலாளர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *