சாந்திநிகேதன், ஏப்.5 வைக்கம் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தப்பட்டது கோயில் தெருக்களில் நடப்பதற்காக மட்டுமல்ல; மனித உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகத்தான். அதை சாதித்துக் காட்டினார் பெரியார்! அதனால் தான் பெரியார் கொண்டாடப்படுகிறார் என்றார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து, மேற்கு வங்காளம் சாந்திநிகேதனில் ‘பெரியார் – அம்பேத்கர் சித்துகானு படிப்பு வட்டம்’ சார்பில் (23.03.2025) நடைபெற்ற, வைக்கம் மற்றும் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்காகக் காணொலி வழியாக உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
பெரியார் தனி மனிதரல்ல; பெரியாரியம் ஒரு தத்துவம்!
இந்தியாவிலுள்ள சாந்திநிகேதன் பல்கலைக் கழகத்தில், ‘‘பெரியார் – அம்பேத்கர் சித்து கானு படிப்பு வட்டம்’’ சார்பில் நடைபெறும் சிறப்பு வாய்ந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதைப் பெருமையாகக் கருதுகிறேன். இந்தப் பெரும் முயற்சியைச் செய்ததற்காக உங்களை நான் வாழ்த்துகிறேன். பெரியார் இன்றைக்கு முக்கியமான தலைவராகத் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஏன் இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் தேவைப்படுகிற ஒருவராக இருக்கிறார். பெரியார் தனி மனிதரல்ல; பெரியாரியம் ஒரு தத்துவம்; அவர் தன்னைத்தானே நிறுவனமயமாக்கிக் கொண்டவர். அவர் வளமான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். இருந்தாலும், தன்னை மக்கள் தொண்டுக்கு ஆளாக்கிக் கொண்டவர். 1924 ஆம் ஆண்டு கேரளாவிலுள்ள வைக்கம் சத்தியாகிரகத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
முதல் மனித உரிமைப் போராட்டம்
வைக்கம் சத்தியாகிரகம் என்பது அரசியல் போராட்டம் அல்ல. இது கடவுளுக்கும், மதத்திற்கும், எந்தவொரு தனி மனிதருக்கும் எதிரானது அல்ல. இது முதல் மனித உரிமைப் போராட்டம். கேரளாவில் உள்ள திருவாங்கூர் சமஸ்தானம் மன்னர் ஆட்சியின் கீழ் இருந்தது. அது இந்து மத பழக்க வழக்கங்களைக் கொண்ட ஆட்சியாகத்தான் தொடர்ந்தது. அங்கிருக்கும் மகாதேவர் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு தெருக்களில் ஈழவர்கள், தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்டவர்கள் நடக்கக் கூடாது என்ற தடை இருந்தது. உலகத்தில் எங்கும் இல்லாத ஒரு கொடிய பழக்க வழக்கமான இந்தத் தீண்டாமை, பாராமை, நெருங்காமை ஆகியவை இந்தியாவில் தீவிரமாக நடைமுறையில் இருந்த காலம் அது.
பெரியாருக்கு வைக்கம் சிறையிலிருக்கும் தலைவர்கள் எழுதிய கடிதம்!
மகாதேவர் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு தெருக்களில் நுழைய இருந்த தடைதான் வைக்கம் சத்தியாகிரகப் போராட்டத்திற்கான தொடக்கப்புள்ளி. இந்தப் போராட்டத்தில் ஜார்ஜ் ஜோசப், குரூர் நீலகண்டன் நம்பூதிரி, கே.பி.கேசவ மேனன் ஆகிய தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பெரியாருக்கு வைக்கம் சிறையிலிருக்கும் தலைவர்கள், “நீங்கள் வந்து இந்தப் போராட்டத்தைத் தொடரவில்லை என்றால், வைக்கம் சத்தியாகிரகப் போராட்டம் ஒன்றும் இல்லாமல் முடங்கிவிடும்” என்று கடிதம் எழுதினார்கள். கடிதம் கண்ட பெரியார், ஈரோட்டிலிருந்து உடனடியாக வைக்கம் புறப்பட்டார். திருவாங்கூர் மன்னர் பெரியாருக்கு மரியாதை செய்யத் தயாராக இருந்த நிலையிலும், பெரியார் அதை ஏற்க மறுத்து அரசுக்கு எதிராகப் போராடினார். அதனால் ஒருமாதம் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து மீண்டதும் அவர் தமிழ்நாட்டுக்குத் திரும்பவில்லை. மறுபடியும் போராடினார்.
வைக்கம் சத்தியாகிரகத்தின் தனித்துவமான அம்சம் என்னவென்றால், பெரியார் கைது செய்யப்பட்ட பிறகு, பெரியாரின் மனைவி நாகம்மையார், பெரியாரின் தங்கை கண்ணம்மாள் மற்றும் பெண்கள் குழுவினர் அப்போராட்டத்தில் இணைந்தனர்; போராளிகளாகப் பங்கேற்றனர். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வேறு மாநிலத்தில் இருந்து, கேரளாவில் உள்ள மகாதேவர் கோயில் தெருவில் நடக்கக்கூடாது என்பதால், பாதிக்கப்படாதவர்கள் மனித உரிமைக்காகச் சென்று போராடினார்கள் என்பது இன்றைக்கும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத சாதனையாகும்.
பகுத்தறிவுள்ள மனிதர்களாகிய நாம் இதை எப்படி பொறுத்துக் கொள்வது?
அண்ணல் காந்தியார் கூட, “உயர்ஜாதிக்காரர்களின் எதிர்ப்பு இருக்கிறதே. நீங்கள் ஏன் அங்கு சென்று போராடுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்குப் பெரியார் பொறுமையாக, “இங்கே கோயில் தெருக்களில் பன்றிகளும், கழுதைகளும் சுதந்திரமாக நடக்கின்றன. அவை சத்தியாகிரகம் செய்த பிறகா இந்த உரிமையைப் பெற்றன? ஆனால், மனிதர்கள் நடமாட முடியவில்லையே! பகுத்தறிவுள்ள மனிதர்களாகிய நாம் இதை எப்படி பொறுத்துக் கொள்வது?” என்று பதில் சொல்லிவிட்டு, தனது போராட்டத்தைத் தொடர்ந்தார்.
இரண்டாம் முறையாகவும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். உயர் ஜாதிக்காரர்கள் என்று கருதப்பட்டவர்கள் பெரியாரை ஒழித்துக்கட்ட ‘‘சத்ரு சம்ஹார யாகம்” செய்தனர். அதுவொரு மூடநம்பிக்கை. ஆகவே, அதனால் ஒன்றும் நடக்கவில்லை. அதே காலகட்டத்தில் மன்னர் இறந்து போனார். அதன் பின்னர் பெரியார் உள்ளிட்ட வைக்கம் போராட்டக்காரர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மறுபடியும் பெரியார் போராடினார். மெல்ல மெல்ல மனித உரிமைகள் மீட்கப்பட்டன.
பெரியார் ஏன் கொண்டாடப்படுகிறார்?
கோயில் தெருக்களில் நடப்பதா என்பதல்ல கேள்வி, மனித உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதுதான் முக்கியம். அதை சாதித்துக் காட்டினார் பெரியார்! அதனால் தான் பெரியார் கொண்டாடப்படுகிறார்.
“மனித உரிமை மீட்பு இயக்கம்!”
ஜாதி என்பது மனிதர்களை மனிதத் தன்மை அற்றவர்களாக்குகிறது. பெரியாரின் இயக்கம் என்பது மனிதத் தன்மையற்றவர்களாக இருப்பவர்களை மறுபடியும் மனிதத் தன்மை உள்ளவர்களாக மாற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளது. சுயமரியாதை இயக்கம் ஒரு “மனித உரிமை மீட்பு இயக்கம்”.
ஜோதிபா பூலே, சாவித்திரிபா பூலே, வங்காளத்தின் மாபெரும் போராளி ரொகையா பேகம் என்ற ரொக்கையா சகாவத், ஆதிவாசிகள் ஆகியோரை முன்னிலைப்படுத்தியுள்ளீர்கள். ‘‘ஆதிவாசி’’களை இப்போது சிலர் ‘‘வனவாசி’’கள் என்று அழைக்கின்றனர். அது தவறு. குறிப்பாக நமது சுப்ரியா தருண் லேகா ‘பெரியார் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதற்காகவே அவர் திருச்சியில் நடைபெற்ற FIRA மாநாட்டில் பாராட்டப்பட்டிருக்கிறார். தாகூர் பிறந்த மண்ணில் பெரியாருக்கு விழா எடுக்கிறீர்கள். உங்கள் முயற்சி பெரிய வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகிறேன்.
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.