கவிஞர் கலி.பூங்குன்றன்
தன்மான இயக்கம் – திராவிடர் கழகம் என்று வருகின்றபோது – அதன் கொள்கைகள் என்கிற வாட்படை சங்கராச்சாரியாரின்கொள்கைகள் என்கிற ஆணி வேரை வெட்டி அக்னிக்கு இரையாக்குபவையாகும்.
பிறப்பில் பேதம் என்பது சங்கராச்சாரியார்களின் இந்து மதத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். பிறவியில் பேதம் கூடாது என்பது தந்தை பெரியாரின் கோட்பாடாகும்.
இந்த வகையில் சங்கர மடமும் பெரியார் நிறுவனமும் எதிர் துருவங்களாகும்.
தந்தை பெரியாரின் தன்மான இயக்கம் சூறாவளியாகச் சுழன்று வீசிய அந்தக் கால கட்டத்தில் சங்கர மடங்களை நடு நடுங்கச் செய்தது என்பதுதான் உண்மை.
தந்தை பெரியாருக்கு சிருங்கேரியாரின் மடல்!
சிருங்கேரி சங்கராச்சாரியார் தந்தை பெரியாருக்கு ஸ்ரீமுகம் (கடிதம்) எழுதினார். (‘குடிஅரசு’ 2-3-1930)
தந்தை பெரியாரையும் அவர்தம் தொண்டு களையும் புகழ்ந்து எழுதி, தமது மடத்துக்குத் துணைவியாருடன் வரவேண்டும் என்று வேண்டு கோள் விடுத்திருந்தார்.
அதற்குத் தந்தை பெரியார் பதிலும் எழுதினார்.
“அந்த ஸ்ரீமுகத்திலே சனாதன தருமத்தைக் கெடுக்காமல், கரும காண்டத்தில் உள்ள அவரவர்கள் கடமையைச் செய்து ‘சாஸ்திரங்கள் இடம் கொடுக்கும் வரையில்’ என்கிற நிபந்தனைகள் கண்டு, அதற்கு விரோதம் இல்லாமல் சில சுவ தந்தரங்கள் அளிக்கப்படும் என்கின்ற வாசகங்கள் காணப்படுகின்றபடியால், நாம் அங்குச் செல்வதால் ஏதாவது பயன் ஏற்படுமா என்கிற விஷயம் நமக்குச் சந்தேகமாக வேயிருக்கின்றது” என்று பதில் எழுதினார். அங்கே செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
சங்கராச்சாரியார்கள் பற்றி தந்தை பெரியாரின் ‘குடிஅரசு’ ஏடு வரிந்து தள்ளி இருக்கிறது. அதுவும் கைவல்யம் கட்டுரைகள் தூள் பறக்கச் செய்யக் கூடியவை. ஒரு ஊருக்குக் கைவல்யம் வருகிறார் என்றால் சங்கராச்சாரியார்கள், சந்நியாசிகள், உபந்நியாசிகள் சிறுநீர் கழித்து விடுவார்களாம். அந்த அளவுக்கு சாஸ்திரங்களில் கற்றுத் துறை போனவர்; அவரின் விவாதங்கள் வேதியத்தின் வேரைத் துளைத்து வெற்றிக் கொடியை நாட்டுவதாக இருக்கும்.
தோலுரிக்கிறார் தந்தை பெரியார்
லோகக் குரு என்று சங்கராச்சாரியார்களை அழைக்கிறார்களே அதுபற்றி தந்தை பெரியார் கூறுகிறார்:
சங்கராச்சாரியார்கள் இந்தியாவுக்குக் குரு அல்ல. இந்துக்களில் பார்ப்பனர்கள் எல்லோருக் கும் குரு அல்ல. பார்ப்பனர்களில் உள்ள பல பிரிவுகளில் ‘ஸ்மார்த் தர்கள்’ என்கிற ஒரு சிறு கூட்டத்தாருக்கு இவர் குரு என்ற பாத்திர முடையவர். அச்சிறு கூட்டத்தாருக்கும் இவரைப் போல் இன்னமும் நான்கு அய்ந்து சங்கராச் சாரியார்கள் என்போர்கள் உண்டு. ஆகவே ஒரு சிறு கூட்டத்தில் அதாவது நமது நாட்டிலுள்ள சில ஆயிரக்கணக்கான மக்களில் 5 அல்லது 6 இல் ஒரு பாகத்தாருக்குக் குரு என்று ஏற்பட்ட ஒருவர், அக்கூட்டத்தின் செல்வாக்காலும், தந்திரத்தாலும், ஏமாற்று தலாலும் – நம்மவர்களின் அறிவீனத்தாலும், ஏமாந்த தனத்தினாலும் லோகக் குரு என்பதாக அழைக் கப்பட்டு, இந்துக்கள் என்கிற எல்லா மக்களுக் கும் குருவாகி, கோடிக் கணக்கான ரூபாய்களை கொள்ளை அடித்து வெறும் பார்ப்பனர்களுக்கே பொங்கிப் போட்டு பார்ப்பனப் பிரச்சாரம் செய்து வருகிறார் (குடிஅரசு 25-9-1927).
இவ்வாறு தந்தை பெரியார் லோகக் குரு என்ற பந்தாவின் அந்தரங்கத்தை அலசியுள்ளார்.
தோலுரிக்கிறார் அண்ணா!
தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியில் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி பேசினார் (11-4-1942)
“இவ்வருஷம் மிராசுதார்கள் தங்களுடைய நியாயமான வரவு செலவு போக எஞ்சியிருக்கும் பணத்தை ஏழைகளுக்கு அன்னமிடுவதில் செலவு செய்ய வேண்டுமென்றும், வீடு கட்டுவதோ, நிலம் வாங்குவதோ, ஆபரணங்கள் செய்வதோ, பாங்கியில் போடுவதோ கூடா தென்றும், வியாபாரிகள் இதரர்களும் அதே மாதிரி இவ்வருஷம் கிடைக்கும் லாபத்தை மேற்சொன்ன வழியில் விநியோகிக்க வேண்டு மென்றும், அந்தப் பணத்தைத் தன்னுடைய குடும்பச் செலவுக்கு உபயோகப்படுத்தாமல், அதை விஷமாகப் பாவிக்க வேண்டும்” என்றும் பேசினார்
இதனை எடுத்துக்காட்டி அறிஞர் அண்ணா விவேகமிக்க வார்த்தை சாட்டைகளால் வேண்டும் மட்டும் விளாசித் தள்ளியுள்ளார் (திராவிட நாடு’ 19-4-1942).
தலையங்கத்தின் தலைப்பே வேடிக்கையானது.
“சங்கராச்சாரி பதவி தற்கொலை!”
ஏப்ரல் 11ஆம் தேதி மன்னார் குடியில் ஜகத் குரு சங்கராச்சாரியார் பேசியுள் ளார். அவரது சொற்பொழிவிலே காணப்படும் சில கருத்துகள், பிறருக்கு உபதேசமாக இருத்தலுடன் அவருக்கே சட்ட திட்டமாகவும் அமைவதாயின், அவரது பதவியைத் துறந்து, பாதசாரியாகி, பாட்டாளி யாகி, பாராருக் குழைக்கும் பண்பின ராகி அவர் வெளிவந்து விடுதல் வேண்டும்.
முதலில்லா வியாபாரம்! சோக மில்லா வாழ்வு! உழைப்பு கிடையாது! உல்லாசத்திற்குக் குறைவு கிடையாது! இங்ஙனம் இவர் வாழ்ந்து கொண்டு, மிராசுதாரர், வியாபாரி, மற்றவர் ஆகியோருக்கும் இதோபதேசம் புரிவது ஏதேனும் பொருளுடைய தாகுமா? கன்னக் கோலன் கனவின் கேடு பற்றியும், காம உள்ளத் தான் ஒழுக்கப் போதனை யையும், கசடன் கற்றதனாலாய பயனையும் எடுத்துக் கூறுவது எள்ளி நகையாடக் கூடியதன்றோ.. என்று அடுக்கிக் கொண்டே போகின்றார் அறிஞர் அண்ணா.
தோலுரிக்கிறார் தமிழர் தலைவர்
திராவிடர் இயக்க வரலாற்றில் இந்தத் திசையில் திராவிடர் கழகத் தலைவர் – தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் குன்றத்துப் பெரு விளக்காக ஒளி வீசுகிறார்!
சங்கராச்சாரியார் பற்றி 1983இல் அவர் ஆற்றிய அந்த பத்துச் சொற்பொழிவுகள் காலத்தை விஞ்சி நிற்கக் கூடியவை. கசடனும் கற்றுத் தெளியக் கூடியவையாகும் ‘சங்கராச் சாரி-யார்?” என்ற அந்த நூல் “நூல்களின் ஆதிக்கத்தை” கறாராக அறுத்தெறியக் கூடியதாகும்.
ஆங்கிலத்திலும் The Saint or Sectarian என்ற பெயரில் வெளிவந்து (1988) லோகக் குருவை லோகம் முழுவதும் முகத்திரையைக் கிழித்துக் காட்டிவிட்டது.
அதேபோல காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாகக் காஞ்சீபுரம் மடத்தை விட்டு வெளியேறினாரே (23–8–1987) அதன் பின்னணியை வெளிப்படுத்தி, அதனை ஆவணமாகத் தமிழ்நாட்டுக்குத் தந்த பெருமையும் அவருக்கே உரியது.
இப்பொழுது கொலைக் குற்றவாளியாகி, மக்கள் மன்றத்திலே மானம் மரியாதை இழந்து குமுறிக் கொண்டிருக்கும் ஜெயேந்திர சரஸ்வதி குறித்து மக்கள் மன்றத்திலே அவர் ஆற்றிய உரைகள் அலாதியானவை. அவ்வுரைகளும் “புதிய திருவிளையாடல் புராணம் – காஞ்சி சங்கராச்சாரியார்கள்மீது கொலை வழக்கு, ஏன்? எதற்கு? எப்படி?” (முழுத் தகவல்கள்) என்ற தலைப்பில் 254 பக்கங்களில் வெளிவந்து பரபரப்பாக விற்றுத் தீர்ந்தன. அந்தச் சிறப்புச் சொற்பொழிவுகளுக்கு பல்துறைகளைச் சேர்ந்த பெருமக்கள் கடல் அலைபோல்கூடி ஆர்ப்பரித் தார்கள். 25-11-2004 முதல் 16-4-2005 வரையிலான இடைப்பட்ட காலத்தில் ஏழு சொற்பொழிவுகளை ஆதாரப் பூர்வ ஆய்வுரை களாக நிகழ்த்தினார்.
இதில் இன்னொன்றையும் மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்ய வேண்டும். பெரும் செல்வாக்கு உள்ளவர். குடியரசுத் தலைவர் பிரதமர்கள் எல்லாம் அவர் கால்களில் மண்டியிடுகின்றனர் என்பதை அறிந்திருந்தும், அந்தக் காஞ்சி சங்கராச்சாரியாரை ஜெயேந்திர சரஸ்வதியை தக்க ஆதாரங்களின் அடிப்ப டையில் கைது செய்தாரே (11-11-2004- ஒரு தீபாவளி நாளில்) தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா -அது சாதாரண மானதல்ல. மனந்திறந்து பாராட்ட வேண்டும்.
வேடத்தாலும், பிரச்சாரத் தந்திரங்களாலும் மக்கள் மன்றத்திலே ஊதி வானத்திலே பறக்க விடப்பட்ட அந்த லே(ம)ாகக் குரு என்கிற பலூனை சட்டத்தின் ஊசி முனையாலே வெடித்துச் சிதற அடித்துவிட்டார்.
சங்கராச்சாரியார்கள், சாமியார்கள், சந்நியாசிகள் என்றாலே கேவலமானவர்கள், வேடதாரிகள், காமக் கிறுக்கர்கள், கொலையும் செய்ய அஞ்சாதவர்கள் என்கிற உண்மை வெளிச்சத்துக்கு இதன் மூலம் வந்துவிட்டது. அவர்கள் குடலைக் கிழித்துக் காட்டினாலும் பக்தர்களேகூட நம்பத் தயாராக இல்லை என்பதுதான் எதார்த்தமாகும். இது திராவிடர் இயக்கத்துக்கு – தந்தை பெரியாரின் கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியன்றோ!
இவர்தான் ஜெயேந்திரர்!
திருக்குறள்பற்றி ஜெயேந்திர சரஸ்வதி
(2-4-1982 அன்று ஈரோட்டில் திருக்குறள் முனுசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற திருக்குறள் பேரவை 4ஆம் ஆண்டு விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்)
“திருக்குறளில் உள்ள அறத்துப்பாலை, அதிலும் முதலில் பத்துக் குறட்பாக்களை மட்டும் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுத்துவிட்டு, பொருட்பால், காமத்துப் பாலை சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசி யமில்லை என்று காஞ்சி மடத் தலைவரான தவத்திரு ஜெயேந்திர சரஸ்வதி துறவியார் திருக்குறளைப் பற்றித் திரிபான முறையில் தம் கருத்தைக் கூறியிருப்பது அதிர்ச் சியையும் வருத்தத்தையும் தருகிறது. காஞ்சி மடத்தார் அடுத்தடுத்து திருக்குறளைப்பற்றி புறங்கூறி வருவதற்கு கண்டனம் தெரிவிப் பதுடன், அக்கருத் துக்களை திரும்பப் பெற வேண்டுமென காஞ்சி மடத்தை ஈரோடு திருக்குறள் பேரவை கேட்டுக் கொள்கிறது”.
• • •
விஜயேந்திரர் சொல்கிறார்:
“நமதுநாடு பல புராண, இதிகாச, சாஸ்திரங்களைக் கொண்டுள்ளது. அவைகளின் படி நடந்தால் மட்டுமே நமது நாடு சிறப்பான பாதையில் செல்ல முடியும். நமது சாஸ்திரங்கள் கூறுகிறபடி நாட்டை ஆட்சி செய்யும் ஆட்சியாளர் கள் நாத்திகராக இருக்கக்கூடாது, ஆத்திக ராகத்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் நாட்டை நல்ல முறையில் நிருவகிக்க முடியும். ஆட்சியாளர்கள் ஆன்மீக சிந்தனையோடு செயல்பட்டால் மட்டுமே நாடு சுபிட்சமாகத் திகழும். ஆன்மீக சிந்தனையைப் பாதுகாப் பதிலும், வளர்ப்பதிலும், ஆட்சியாளர்கள் ஈடுபட வேண்டும்”
(காஞ்சீபுரத்தில் 23-7-2000 அன்று நடைபெற்ற பசுவதைத் தடுப்பு மாநாட்டில் பேசியது)
• • •
திருப்பதியில் ஜெயேந்திரர் அத்துமீறல்:
3.11.2000 அன்று திருப்பதியில் தோமாலை சேவையின் போது குல சேகரன் படியில் அமர்ந்து அங்கு அர்ச்சகர்கள் ஆட்சேபித்தும், ஒரு முகூர்த்த காலம் (ஒன்றரை மணி) காஞ்சி ஜெயேந்திரர் அர்ச்சனை செய்தார். இதற்கு எதிர்ப்புக் கிளம்பியது.
குறிப்பு: கருவறையில் அர்ச்சகர்கள் தவிர யாரும் அர்ச்சனை செய்ய எந்த ஆகமமும் உரிமை வழங்கவில்லை என்று அவர்களே கூறுகிறார்கள். அப்படி இருக்கும்போது ஜெயேந்திரர் நுழைந்தது எப்படி?
• • •
சிருங்கேரி சங்கராச்சாரியாருக்கும், காஞ்சி சங்கராச்சாரியாருக்கும் (ஜெயேந்திரர்) யார் பெரியவர் என்பதில் சண்டை:
14-2-2001 அன்று இராமேசுவரம் இராமநாத சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ் வதி ஆகியோரும் சிருங்கேரி சங்கராச் சாரி யாரும் கலந்துகொண்டனர், விழாக் குழுவினர் இந்தச் சங்கராச்சாரிகளுக்கு சிறப்புச் செய்யும் பொழுது யாருக்கு முதல் மரியாதை என்பதில் மோதல் ஏற்பட்டது, உடனே, மதுரை ஆதீனம் தலையிட்டு அன்று இரவு விடிய விடிய கட்டப் பஞ்சாயத்து நடத்தி இரண்டு மடாதிபதி களுக்கும் சமரசம் செய்து வைத்தார்.
(தினபூமி 15-2-2001)
• • •
திருப்பதி ஏழுமலையானுக்கு மூன்று கிலோ தங்கத்தில் பூணூல் செய்து காஞ்சி சங்கராச் சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி 5-4-2002 அன்று அணிவித்தார்.
(‘மாலை மலர்’ 16-3-2002)
• • •
“ஆண்டவனுக்கு மேல் அந்தணன்!”
9-10-2002 அன்று சென்னை நாரத கான சபையில் ‘தாம்ப்ராஸ்’ எனப்படும் தமிழ்நாடு பார்ப்பனர் சங்கத்தின் ஏற்பாட்டில் ‘அருந் தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள்’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. அந்த நூலை வெளியிட்டு ஜெயேந்திர சரஸ்வதி பேசியதாவது:
“எந்த ஆட்சியாக இருந்தாலும் அந்தணர் சொற்படிதான் நடந்திருக்கிறது என்பதை பழைய நூல்கள் கூறுகின்றன. இராமர் ஆட்சி செய்தாலும், அவர் வசிஷ்டர் சொற்படிதான் நடந்தார். மதுரையை நாயக்கர்கள் ஆண்ட போதும்… அந்தணர்தான் குருவாக இருந்தார். தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஆண்டபோது கோவிந்த தீட்சதர் என்பவர்தான் குரு. அவர் வம்சத்தில் வந்தவர்தான் மறைந்த காஞ்சிப் பெரியவாள். ஆண்டவன்கூட அப்புறம்தான். அந்தணன்தான் முதலில்!
(நக்கீரன்: 15-11-2002)
(தொடரும்)