தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
மூக்கையா தேவர் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சரின் அறிவிப்பு வர வேற்கத்தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மக்களவை உறுப்பினராகவும், பலமுறை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் பெருவாரியான வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மூக்கையா தேவர் ஆவார்கள்.
1952 சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் பெரியகுளத்தில் போட்டியிட்டபோது, அவரை ஆதரித்து தந்தை பெரியார் உரையாற்றியுள்ளார்.
கச்சத்தீவை இந்திய அரசு, இலங்கைக்குத் தாரை வார்த்தபோது, அப்போது இராமநாதபுரம் மக்களவை உறுப்பினராக இருந்த மூக்கையா தேவர் அவர்கள் அதனைக் கடுமையாக எதிர்த்து, வெளிநடப்பு செய்தவர்.
இருமொழி திட்டத்திற்கு ஆதரவு
சேது சமுத்திரத் திட்டத்திற்கு ஆதரவாகக் குரல் எழுப்பினார்.
சட்டமன்றத்தில் முதலமைச்சர் அண்ணா அவர்கள், இருமொழி திட்டத்தை அறிவித்தபோது, அதற்கு ஆதரவாக நின்று உரையாற்றியவர்.
குறிப்பிட்ட ஜாதியினர் குற்றப் பரம்பரை என்று பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பட்டியலிடப்பட்டபோது, அதனை முறியடிப்பதில் முன்னணியில் இருந்தவர்.
உசிலம்பட்டி, நீலிதநல்லூர், கமுதி ஆகிய இடங்களில் கல்லூரிகளை நிறுவியவர்.
ஏழை, எளிய மாணவர்கள், கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டி ருந்த மாணவர்களுக்கு இலவச கல்வியோடு தங்கும் இடம், உணவு ஆகியவற்றிற்கு ஏற்பாடு செய்தவர்.
வரவேற்கத்தக்கது – பாராட்டத்தக்கது!
அத்தகைய பெருமகனாரின் நினைவைப் போற்றும் வண்ணம் ‘திராவிட மாடல்’ ஆட்சி நடத்தும் – சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மணிமண்டபம் எழுப்ப இருப்பதாக சட்டமன்றத்தில் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதும் – பாராட்டத்தக்கதும் ஆகும்.
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
5.4.2025