திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆஸ்திரேலியாவிலிருந்து காணொலியில் கருத்துரை!
சாந்தி நிகேதன், ஏப்.5 மேற்கு வங்கத்தில் செயல்பட்டு வரும் “பெரியார் அம்பேத்கர் சித்து கானு படிப்பு வட்டம்” சார்பில் நடைபெற்ற வைக்கம் நூற்றாண்டு, சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு விழாவில் திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இருந்து காணொலியில் கருத்துரை வழங்கினார். கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் நேரில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
பெரியார் அம்பேத்கர்
சித்துகானு படிப்பு வட்டம்!
சித்துகானு படிப்பு வட்டம்!
‘‘பெரியார் அம்பேத்கர் சித்துகானு படிப்பு வட்டம்” சார்பில் (சித்து, கானு ஆகியோர் வங்கத்தின் பழங்குடி மக்கள் போராளிகள் ஆவர்) நடைபெற்ற கலந்துரையாடலில், இவ்வாண்டு மேற்கு வங்க மாநிலம் முழுவதும், பல இடங்களில் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மற்றும் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழாக்களைத் தொடர்ந்து நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன் தொடக்கமாக, இவ்விழாக்கள் மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள சாந்தி நிகேதன் நகரில் 23.03.2025 அன்று சாந்தி நிகேதன் நகரில் உள்ள பாஞ்சாபோன் கலைக்கூடத்தில் காலை 9 மணியளவில் தொடங்கி நடைபெற்றன. தொடக்க நிகழ்வாக லாலன் பக்கீரின் பவுல் பாடல்கள் (BAUL of Lalan Fakir) தருண் கியேபா குழுவினரால் பாடப்பட்டன. ஜாதி ஒழிப்பைக் குறித்துப் பாடிய பாடல் நிகழ்வில் பங்கேற்ற அனைவரிடமும் ஒரு புத்தெழுச்சியை உண்டாக் கியது. அதனைத் தொடர்ந்து சாந்திநிகேதன் மண்ணுக்கே உரிய ரவீந்திரநாத் தாகூரின் இசைக் கோவைகளிலிருந்து தேவப்ரியா ப்ரம்மா, ராகுல் ஆகியோரால் ரவீந்திர சங்கீத் இசைக்கப்பட்டது.
வங்காளம், தமிழ், ஆங்கில
மொழிகளில் பதாகைகள்!
மொழிகளில் பதாகைகள்!
முதலில் பேராளர்கள் பதிவுடன் விழா தொடங்கியது. 230 பேராளர்கள் ஆர்வத்துடன் பதிவு செய்து நிகழ்வில் பங்கேற்றனர். அவர்களில் பழங்குடியினர், சமூகச் செயல்பாட்டாளர்கள், இடதுசாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோர் அடங்குவர். மேடைக்கு வங்காளத்தின் ஒடுக்கப்பட்ட சமூகத் தலைவரின் ”சக்தி பாத்யகர் மேடை” என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. மேடையில் தந்தை பெரியாரின் பெரிய படத்துடன் வங்காளம், தமிழ், ஆங்கில மொழிகளில் பதாகை வைக்கப்பட்டிருந்தது. அரங்கின் வெளியில் கருப்பு, சிவப்பு, நீலம் ஆகிய மூன்று நிறங்களில் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.
கழகத் தலைவரால் பாராட்டப்பெற்ற
சுப்ரியா தருண்லேகா!
சுப்ரியா தருண்லேகா!
தந்தை பெரியாரின் சிந்தனைகளை மேற்கு வங்க மாநிலத்தில் பரப்புரை செய்யும் வகையில், ”பெரியார் அம்பேத்கர் சித்துகானு படிப்பு வட்டம்” உருவாக்கப்பட்டுள்ளது. இதன் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படும் சுப்ரியா தருண் லேகா, மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் சென்று கூட்டங்களை நடத்தியும், புத்தகங்களை அறிமுகம் செய்தும் உரையாற்றி வருவதுடன், பெரியார் அம்பேத்கர் சிந்தனையாளர்களையும் ஓரணியில் திரட்டி வருகிறார். முதலில் இவர் தந்தை பெரியாரின் “இராமாயணப் பாத்திரங்கள்” நூலை வங்க மொழியில் பெயர்த்தார். பின்னர் தந்தை பெரியார் பற்றிய ஒரு அறிமுக நூலை வங்க மொழியில் எழுதினார். அவரின் இந்த தன்னலமற்ற தொண்டுக்காக திருச்சியில் இரண்டு நாள்கள் (28.12.2024, 29.12.2024) நடைபெற்ற இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு (FIRA) மாநாட்டில், சுப்ரியா தருண்லேகா தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் சிறப்பிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவிலிருந்து ஆசிரியர் உரை!
நிகழ்வுக்கு மேனாள் பத்திரிகையாளரும், சாந்திநிகேதன் நகரின் முக்கிய சமூகச் செயல்பாட் டாளருமான தபஸ் மல்லிக் தலைமையேற்று சிறப்பித்தார்.
பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் சார்பில் ஆஸ்திரேலியாவில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த உலக மகளிர் நாள் மற்றும் ஆஸ்தி ரேலியாவில் உள்ள சுயமரியாதைக் குடும்ப விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆஸ்திரேலியா சென்றிருந்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், மேற்கு வங்கத்தில் உள்ள ”பெரியார் அம்பேத்கர் சித்துகானு படிப்பு வட்டம்” சார்பில் நடைபெறும் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மற்றும் வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழாக் குழுவினரின் வேண்டுகோளுக்கிணங்க, ஆஸ்தி ரேலியாவிலிருந்து 12 நிமிடம் கருத்துரையைக் காணொலி வழியாக ஆங்கிலத்தில் உரையாற் றினார்.
கழகத் தலைவரின் உரைக்கு
பெரும் வரவேற்பு!
பெரும் வரவேற்பு!
திராவிடர் கழகத்தின் தலைவர் தனது உரையில், தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டப் பங்களிப்பின் சிறப்பை, தாக்கத்தை விரிவாக எடுத்துரைத்தார். இந்தியாவில் கடந்த நூற்றாண்டில் நடைபெற்ற முதல் மனித உரிமை போராட்டம் என்று போற்றத்தக்க வைக்கம் போராட்டம் தொடங்கியது முதல், பல்வேறு காலகட்டங்களில் போராட்டத்தின் நிலை குறித்தும் முதல் கட்டத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு பிறகு, அவர்களின் அழைப்பின் பேரில் வைக்கம் சென்ற தந்தை பெரியாரின் பங்களிப்பால் அது வெற்றி அடைந்ததையும் குறித்து பல்வேறு வரலாற்று செய்திகளை எடுத்துக் காட்டி உரையாற்றினார். வைக்கம் போராட்டத்தினை முன்னெடுத்த ஜார்ஜ் ஜோசப், கே.பி. கேசவ மேனன், மாதவன் நாயர், குரூர் நீலகண்டன் நம்பூதிரி, அன்னை நாகம்மையார், தந்தை பெரியாரின் தங்கை எஸ்.கண்ணம்மாள் உள்ளிட்ட பலரின் பங்களிப்பையும் காந்தியாரின் தலையீட்டையும், வைக்கம் போராட்டத்தின் வெற்றி என்பது இந்தியாவில் தீண்டாமை ஒழிப்புக்கும், சமூக நீதிக்கும், சுயமரியாதைக்குமான போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படுவதற்கு அடித்தளமாக இருந்துவருகிறது என்றும் அவர் தமது உரையில் சுட்டிக்காட்டினார். அரங்கத்தில் இருந்த மக்கள் மத்தியில் திராவிடர் கழகத் தலைவரின் உரை பெரும் வரவேற்பைப் பெற்றது. (உரையின் சுருக்கமான தமிழ் வடிவம் 4ஆம் பக்கம் காண்க)
தந்தை பெரியாரின் வாழ்வும், போராட்டமும்!
தொடக்க உரையைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பகுத்தறிவாளர் ஆனந்த் ஆச்சார்யா, ”தந்தை பெரியாரின் வாழ்வும் போராட்டமும்” என்ற தலைப்பில் உரையாற்றினார். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜாதிய அமைப்பு குறித்தும் பல்வேறு செய்திகளை எடுத்துரைத்தார். தந்தை பெரியார், ம.சிங்காரவேலர், புரட்சியாளர் அம்பேத்கர், ஜோதிபா பூலே ஆகியோரின் கொள்கைகள் இன்றைய பார்ப்பனிய பாசிச ஆட்சி நடைபெறும் சூழலில் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதையும் விளக்கிக் கூறினார். மேற்கு வங்கத்தில் ஜாதி அமைப்பு இல்லை என்று கூறுவது முற்றிலும் பொய்யான தகவல் என்றும், ஜாதி இருக்கிறது என்பதை நாம் ஏற்றுக் கொண்டால்தான் அதற்குரிய தீர்வை கண்டடைய முடியும் என்றும் விளக்கினார். தந்தை பெரியார் குறித்த ஒரு சிறு கையேடும், ஜோதிராவ்-சாவித்திரிபாய் பூலே ஆகியோர் பற்றிய ஒரு சிறு கையேடும் வங்க மொழியில் வெளியிடப்பட்டன.
சமூகச் செயல்பாட்டாளர்களின் உரைகள்!
அதனைத் தொடர்ந்து உரையாற்றிய பேராசிரியர் ரன்பீர் சுமித் தனது உரையில், மராட்டியத்தில் ஜோதிபா பூலே ஆற்றிய பணிகளையும், சாவித்ரிபாய் பூலே ஆகியோரின் பார்ப்பனக் கொடுமைகளுக்கு எதிரான செயல்பாடுகளையும் குறிப்பிட்டுவிட்டு, வங்காள மக்கள் அதிலிருந்து பாடம் கற்க வேண்டும் என்றும் கூறினார். ஷிவ்ரி வித்யாசாகர் கல்லூரி பேராசிரியர் தசரத் முர்மு அவர்கள், இந்திய விடுதலைப் போராட்டத்தில் பழங்குடி மக்களின் பங்களிப்பு குறித்து உரையாற்றினார். தொடர்ந்து உரையாற்றிய ஓய்வுபெற்ற பள்ளித் தலைமையாசிரியரும், ஒடுக்கப்பட்ட மக்கள் தலைவருமான பத்தியநாத் சாகா இன்றைய சூழலில் தந்தை பெரியாரின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். வங்காளத்தின் பெண்ணியப் போராளி ரொகையா பேகம் குறித்து விரிவான புகழ்பெற்ற பேராசிரியரும், சீரிய ஆய்வளருமான மீராதுன் நகார் அம்மையார் (ஓய்வு) மிகச் சிறப்பாக உரையாற்றினார்.
பார்ப்பனியத்திற்கு எதிராக
போராடிய நமோ சூத்திரர்கள்!
போராடிய நமோ சூத்திரர்கள்!
தொடர்ந்து, வங்காளத்தின் மட்டுவா சமூகப் புரட்சி இயக்கத்தின் நிறுவனரும், எழுத்தாளரும், சமூகச் செயல்பாட்டாளருமான சுக்ரிதி ரஞ்சன் பிஸ்வாஸ் பேசுகையில், சண்டாளர்கள் என்று இகழப்பட்ட மோசமான நிலையில் தங்களின் மட்டுவா சமூகம் தீண்டத்தகாத சமூகமாக ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்ததையும், பார்ப் பன ஆதிக்கத்திற்கு எதிராக ஹரிச்சந்திரா தாக்கூர், நமோ சூத்திரர்கள் எனப்பட்டோர் விடுதலைக்குப் போராடிய செய்திகளையும் எடுத்துக் கூறினார். பழங்குடியினர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் சட்டப்படியான உரிமைக ளை உறுதிசெய்தல் குறித்து, டாக்டர் சிப்போய் சர்வேஸ்வர் உரையாற்றினார். பின்னர் ரவிதாஸ் சிந்தனைகளைப் பின்பற்றுவோரின் தலைவர் களுள் ஒருவரான கார்த்திக் ரூய்தாஸ் உரை யாற்றினார்.
கழக துணைப் பொதுச்செயலாளர் உரை!
மதிய உணவுக்குப் பின்னர், பாடலுடன் தொடங்கிய நிகழ்வில் சந்தோஷ் சாகா, சிபு சோரன் மற்றும் தோழர்கள் கலந்துரையாடலை ஒருங்கிணைத்தனர். சுபநாத் கவிதைகளை வாசித்தார். அதன் பின்னர், திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆங்கிலத்தில் உரையாற் றினார். தந்தை பெரியாரின் தேவையை உணர்ந்து இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில், குறிப்பாக வங்காளத்தில் பழங்குடியின மக்களிடம் பெரியார் கருத்துகளைக் கொண்டு செல்லும் சுப்ரியா தருண்லேகா உள்ளிட்ட தோழர்களின் முயற்சிக்குப் பாராட்டு தெரிவித்தார். சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டில் தொடங்கப் பட்டிருந்தாலும், இந்தியா முழுமைக்கும், உலகம் முழுமைக்கும் உள்ள மக்களுக்குப் பொதுவான இயக்கம் என்பதை எடுத்துக் காட்டினார். தந்தை பெரியாரின் போராட்டங்கள் இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளுக்கு எந்த வகையில் பெரும் பங்காற்றியிருக்கிறது என் பதையும், இட ஒதுக்கீட்டின் வரலாற்றையும், இன்றைய பாஜக பாசிச ஆட்சி நடைபெறும் காலத்தில் தமிழ்நாடு மாநில உரிமைக்கும், மொழி உரிமைக்கும் நடத்தும் போராட்டத்தின் அடிப்படைகளையும் 25 நிமிட அளவில் சுருக்கமாக முன்வைத்தார்.
ஜாதிப் பின்னொட்டை நீக்குவதை இயக்கமாக்குங்கள்!
தனது பெயருடன் ஜாதிப் பெயரொட்டு இருக்கும் நிலையை தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டில் மாற்றிக் காட்டியது போல வங்காளத்திலும் நடைபெற வேண்டும் என்பதற்கு முன்மாதிரியாக சுப்ரியா பானர்ஜி என்ற தன் பெயரை சுப்ரியா தருண்லேகா என்று கடந்த ஆண்டு மாற்றிக் கொண்டார். அதனை எடுத்துக் காட்டி, வங் காளத்து முற்போக்காளர்களும் சமூகச் செயல்பாட்டாளர்களும் தங்கள் ஜாதிப் பெயரொட்டை நீக்குவதை இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் என்று கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் வேண்டுகோள் விடுத்தார். முன்னதாக, காலையில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, தந்தை பெரியார் குறித்த “பெரியார் ஒருவர்தான் பெரியார் – அவர் போல் பிறர் யார்” என்று தொடங்கும் தமிழ்ப் பாடலை கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் பாடினார். தொடர்ந்து விஸ்வபாரதி பல்கலைக்கழகத் தத்துவப் பேராசிரியரும் தமிழருமான முனைவர் டெரன்ஸ் சாமுவேல், தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளைக் குறித்து எளிய ஆங்கிலத்தில் தெளிவுபட உரையாற்றினார்.
செயல்பாட்டுக் குழு பொறுப்பாளர்கள் தேர்வு!
நிகழ்வின் இறுதியாக, பெரியார் வைக்கம் & சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு விழாக் குழு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். மார்ச் 31 கொல்கத்தாவிலும், அடுத்தடுத்து வங்காளத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வைக்கம் மற்றும் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு விழாக்களை நடத்த உறுதிமேற்கொள்ளப்பட்டது. சுப்ரியா தருண் லேகா தலைமையில் தோழர்கள் பியாலிதாஸ், அரிஜித் திவர், கோபால்நாத், சுபநாத், சத்யன் போஸ், பிப்லோ சாகா, தேவப்ரியா ப்ரம்மா, சந்தோஷ் சாகா, பிபத் தரன் பாக்தி, ஸ்ருதி செளத்ரி, ஆயிஷா, ருமா முகர்ஜி ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டனர். அபிஷேக் தத்தாராய் பொருளாளராகவும், இக் குழுவின் மாணவர் அமைப்பு ஒருங்கிணைப்பாளராக பினோய் தாஸ் பெயரும் அறிவிக்கப்பட்டது. மராத்திப் பேராசிரியர் ரன்பீர் சுமெத் அறிவுரைக் குழுவின் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
ஒருங்கிணைப்பாளர்களின் அரும் பணி!
சுரேஷ் மாட்டி, ரிஷான் மேதே, சாயிட் ஹபிப் மற்றும் ஏராளமான விஸ்வபாரதி பல்கலைக்கழக மாணவர்கள் நிகழ்வை ஒருங்கிணைக்க உதவினர். தமிழ்நாட்டைச் சேர்ந்த முனைவர் பட்ட ஆய்வாளர் சதீஸ்வரன், சேலம் கழக மாவட்டத் தலைவர் வீரமணி ராஜூ ஆகியோர் நிகழ்வை ஒருங்கிணைக்கத் தொடர்பாளர்களாக உதவினர். நிறைவாக, நிகழ்வின் தலைவர் தபஸ் மல்லிக் நன்றி கூறி நிறைவு செய்தார். கழக வெளியீடுகள் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. தந்தை பெரியாரின் சிலை, டி-சர்டுகளை பலரும் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். திராவிடர் கழக மாநாடு நடைபெறுவதைப் போலவே, நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கப்பட்டிருந்ததுடன், ஒருங் கிணைப்பாளர்கள், பங்கேற்பாளர்கள் பலரும் கருப்பு உடைகளியேலே நிகழ்வில் பங்கேற்றனர்.
தந்தை பெரியார் கண்ட சுயமரியாதை இயக்கத்தின் ஆணி வேர் தமிழ்நாட்டில் இருந்தாலும் அதன் பக்கவேர்கள் இந்தியா வின் பல்வேறு பகுதிகளுக்குள் ஊடுருவி ஆங்காங்கே முளைத்துக் கிளைத்து வளர்ந்து கொண்டிருப்பதை வெளிப்படையாக உணரத் தக்க வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. – நமது சிறப்பு செய்தியாளர்