சென்னை, ஏப். 5- வக்பு திருத்தச் சட்டத்தை கண்டித்து ஏப்.8ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முஸ்லீம் அமைப்புகளும் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த போதும், அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக வக்பு திருத்தச் சட்டத்தைப் பாசிச பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.
இது சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியலை அடிப்படையாகக் கொண்ட மிகவும் அப்பட்டமான பாசிசத் தாக்குதலாகும். வக்பு நிர்வாக அமைப்புகளில் முஸ்லிம் அல்லாதவர்களைப் பெரும்பான்மையான எண்ணிக்கையில் உறுப்பினர்களாக நியமித்து அதன்மூலம் வக்ஃபு சொத்துகளை அபகரிப்பதற்கு பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு அரசமைப்புச் சட்டத்துக்கும் தேசிய ஒருமைபாட்டுக்கும் எதிரான வக்ஃபு திருத்தச் சட்டத்தைக் கண்டித்து விசிக சார்பில் வரும் ஏப்.8ஆம் தேதி புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஏப்.8 அன்று ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். மேலும், சட்டத்தை எதிர்த்து விசிக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் ரசாயனம் கலந்த தர்பூசணி விற்பனை இல்லை: உணவுப் பாதுகாப்புத் துறை விளக்கம்
சென்னை, ஏப்.5- சென்னையில் ரசாயனம் கலந்த தா்பூசணி பழங்கள் விற்கப்படவில்லை என்றும், பொதுமக்கள் அச்சமின்றி தா்பூசணி பழங்களை வாங்கி உட்கொள்ளலாம் என்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.
தா்பூசணி பழங்களில் ரசாயனம் கலக்கப்பட்டதாக பரப்பப்படும் உண்மையற்ற செய்திகளால் பொதுமக்களிடம் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், உணவுப் பாதுகாப்புத்
துறை அதிகாரி வெளியிட்ட விழிப்புணா்வு காணொலிதான் அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் என்றும் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியிருந்தாா்.
மேலும், தா்பூசணி பழங்களை சாப்பிட மக்கள் தயங்குவதால், அதன் விற்பனை பெருமளவில் குறைந்து விட்டதாகவும், சில வாரங்களுக்கு முன் ஒரு டன் ரூ. 14 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்ட தா்பூசணி பழங்களை, தற்போது ரூ. 3 ஆயிரத்துக்கு கூட வாங்க யாரும் முன்வருவதில்லை என்றும் அவா் தெரிவித்திருந்தாா்.
இது தொடா்பாக விளக்கமளிக்கும் வகையில், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அதிகாரி சதீஷ்குமாா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சென்னையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் ரசாயனம் கலந்த கலப்படமிக்க தா்பூசணி பழங்கள் (அடா்சிவப்பு பழங்கள்) கண்டு பிடிக்கப்படவில்லை. அதே நேரம், சோதனையின்போது பல கடைகளில் கெட்டுபோன, எலி கடித்த, அழுகிப்போன பழங்கள் ஏராளமாகக் கிடைத்தன. அவற்றையெல்லாம் பறிமுதல் செய்து அப்போதே அழித்துவிட்டோம். எனவே பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை என்றாா் அவா்.