கேள்வி 1: “உலகம் பெரியார் மயம், பெரியார் உலக மயம் ஆகவேண்டும்” என்ற உயரிய நோக்கில் ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் தந்தை பெரியார் கொள்கையை விதைத்துவிட்டு, தாயகம் திரும்பியுள்ள தங்களை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் வாயார-மனதார பாராட்டி மகிழ்வதை தாங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
– இல.சீதாபதி, மேற்கு தாம்பரம்.
பதில் 1: “மேலும் இப்பணி செய்ய உடல்நிலையையும், வயது முதிர்வையும் யோசித்துத் தயங்காது தொடர்ந்து பணி செய்துகொண்டே இரு: நீ ஒரு பெரியாரின் இராணுவ வீரன் – களத்தில் நிற்பவன் – களப் போராளி – கடைசி வரை ஓய்வுக்கு – தயக்கத்திற்கு இடம் தராதே! குனிவதோ, வளைவதோ பெரியார் தொண்டன் – மாணவனுக்கு இலக்கணமல்ல. மேலும், உன் பணியையும், பயணங்களையும் மூச்சுள்ள வரை செய்து உன்னை ஓடாக்கு; உலகத்தைப் பெரியார் மயமாக்கு. அதுவே மானுடப் பற்றாளன் நீ என்பதற்கான உண்மை அடையாளம்” என்று ஊக்கப்படுத்துவதாகவே பார்த்து மேலும் உழைக்க உறுதி பூணுகிறேன். நன்றி!
–- – – – –
கேள்வி 2: தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் கொண்டுவந்து அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருப்பதின் மூலம் இனிமேலாவது மீனவர்கள் வாழ்வில் விடியல் ஏற்படுமா?
– த.முனியாண்டி, ஆரணி.
பதில் 2: வேதனை, துயரம், துன்பம் என்று மீனவர் வாழ்வில் தொடர்ந்து போனது. ஒன்றிய ஆட்சி மாற்றம் – மனிதநேய முறையில் ஓர் ஆட்சி அமையும் வரை இதே நிலைதானோ? கவலையாக உள்ளது!
–- – – – –
கேள்வி 3: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வக்ஃபு வாரிய திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டிருப்பது சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி அல்லவா?
– கு.நல்லத்தம்பி, காஞ்சிபுரம்.
பதில் 3: சிறுபான்மை மக்கள் என்றாலே அவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு, வெறுப்போடு பார்க்கும், நடத்தும் ஓர் ஆட்சி ஆளுமை – ஆர்.எஸ்.எஸ். ஆட்சி இருக்கும் வரை இதே நிலை மேலும் தொடரும் என்பதுதானே யதார்த்தம்.
–- – – – –
கேள்வி 4: ஏற்கெனவே ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மக்கள் அவதிப்படும் அவலநிலையில், தற்போது ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கான சேவை கட்டணத்தையும் ரிசர்வ் வங்கி உயர்த்தி இருப்பது கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கும், சிறு-குறு வணிகர்களுக்கும் பெரும் சுமையாக இருக்கும் அல்லவா?
– உ.பூந்தளிர், பூந்தமல்லி.
பதில் 4: முன்பு வங்கிக் கணக்கு திறக்கக் கூறி, பிறகு அவர்களிடம் குறைந்தபட்ச இருப்பு குறைவாக இருப்பதால், தங்கள் பணம் செலுத்தும்படி, ஏழைகளுக்கு இன்னல், அதற்கு முன் பண மதிப்பிழப்புத் திருக்கூத்து, அதன் பிறகு நம்ம பணத்திற்கே நாம் இழக்கும் புதுவகை அபராதம். அப்படிப்பட்ட அனர்த்தங்களுக்கு அளவே இல்லையா?
–- – – – –
கேள்வி 5: மதத்தையும், அரசியலையும் கலக்காதீர்கள் என்று வக்ஃபு மசோதா விவாதத்தில் மக்களவையில் ஆ.ராசா அவர்கள் பேசியதை பொருட்படுத்தாமல் “செவிடன் காதில் ஊதிய சங்கு” என்ற நிலையில் ஒன்றிய அரசு செயல்படுவது வேதனை அளிக்கும் செயல் அல்லவா?
– அ.ஆசைத்தம்பி, அய்தராபாத்.
பதில் 5: ஆம்; ஆம்; ஆம்!
–- – – – –
கேள்வி 6: தேநீர்க் கடைகளில் போண்டா, பஜ்ஜி, வடை போன்ற பலகாரங்களை அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் கொடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் தடை விதித்துள்ளது போன்று, தமிழ்நாட்டிலும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘திராடவிட மாடல்’ அரசு அச்சுக் காகிதங்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க ஆவன செய்யுமா?
– ப.இளையநிலா, இடையான்குடி.
பதில் 6: அறிவியல் ரீதியாகவே அச்சிட்ட காகிதங்களில் பலகாரங்கள் – எண்ணெய்ப் பலகாரம் வழங்குவது உடல்நலக்கேடு – உடல்நலக் கோளாறு உண்டாக வாய்(மை மூலம்)ப்பு. எனவே, இது அரசுக்கு ஒரு நல்ல யோசனை!
–- – – – –
கேள்வி 7: திருச்சியில் ரூ.290 கோடியில் அமைய உள்ள நூலகத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதின் மூலம் பச்சைத் தமிழர் என்று தந்தை பெரியாரால் போற்றப்பட்ட காமராஜருக்கு மேலும் பெருமை சேர்க்கும் என்று எதிர்பார்க்கலாமா?
– செ.தங்கம், திருச்சி.
பதில் 7: அதிலென்ன அட்டி? கலைஞர் ஆட்சி காமராசர் பிறந்த ஜூலை 15அய்க் கல்வி நாளாகவே கொண்டாட தனிச்சட்டமே இயற்றி நடைமுறையாக்கியது. இப்போது நமது திராவிட நாயகரோ அதற்கு மேலும் ஒரு படி மேலே சென்று காமராசர் புகழ் விளங்க நல்ல அறிவிப்பை செய்துள்ளார்!
–- – – – –
கேள்வி 8: வக்ஃபு திருத்த மசோதா இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்துக்கே எதிரானது என்று நாடாளுமன்றத்தில் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டி இருப்பதை ஒன்றிய அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளுமா?
– இ.வேலம்மாள், வேலூர்.
பதில் 8: ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தி கோல்வால்கர் தமது நூலில் “முஸ்லிம்கள்தான் முதல் எதிரிகள்” என்று எழுதியிருப்பதே இதற்கு மூல காரணம்.
–- – – – –
கேள்வி 9: பெண்ணுக்கு கன்னித்தன்மை பரிசோதனை நடத்த நிர்ப்பந்திக்கக் கூடாது என்ற சட்டீஸ்கர் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பாராட்டுக்குரியது அல்லவா?
– ரேவதி சுதாகர், புதுவை
பதில் 9: பாராட்டி வாழ்த்த வேண்டிய முடிவு இது!
–- – – – –
கேள்வி 10: காவி மயமாக்கல், தனியார்மயம் போன்றவற்றால் கல்வி அமைப்பை படுகொலை செய்வதை நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தி இருப்பதற்கு ஒன்றிய அரசு செவிமடுக்குமா?
-ஜெ.பாபுஜனார்த்தனன், வண்டலூர்
பதில் 10: திருமதி சோனியா காந்திக்கு பொது நலம் – மக்கள் நலம் மனப்பாங்கு உள்ளதால் இப்படிக் கூறியிருக்கிறார். இந்த ஆர்.எஸ்.எஸ். அரசுக்கு அவை காதில் ஏறவே ஏறாது! கொள்கைகளைத் திணிக்க அசாதாரண அவசரம் காட்டுகிறார்கள்! காரணம் அடுத்த முறை ஆட்சிக்கு வர முடியாது என்பதாலோ என்னவோ!