முதலமைச்சரின் சட்டமன்ற கூட்டத் தொடர் அறிவிப்பின்படி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கவிதைப் போட்டிகள் நடத்தி சிறந்த படைப்புகளை தெரிவு செய்து அந்த மாணவ, மாணவிகளுக்கு “இளம் கவிஞர் விருது” மற்றும் பரிசுகள் வழங்குமாறு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்களுக்கு 2024 நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் மாவட்ட அளவில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு கவிதைப் போட்டிகள் நடத்தி அதில் சிறந்த 3 மாணவர்கள் மற்றும் 3 மாணவியர்களை தெரிவு செய்யப்பட்டனர்.
பின்பு மாவட்ட அளவில் அரசுப்பள்ளிகளில் கவிதை போட்டிகள் வைக்கப்பட்டு அதிலிருந்து சிறந்த 3 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இறுதியாக மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 பேருக்கு போட்டி வைக்கப்பட்டது.
இளம் கவிஞர் விருதுக்கான போட்டியில் வெற்றி பெற்ற சிவகெங்கை மாவட்டம், அரியக்குடி அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கவிதைப் போட்டியில் பங்கேற்றனர்.
இதில் சிவகங்கை மாவட்டம் அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவி ரா.சண்முகசிவானி முதலிடம் பெற்றார்.
அவருக்கு பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இளம் கவிஞர் விருதும், ரூ.1 லட்சம் பரிசும் வழங்கினார். வெற்றி பெற்ற மாணவியை பள்ளி தலைமை ஆசிரியர் வி.ஜே.பிரிட்டோ மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.