இழிவான சமாதானம்

viduthalai
2 Min Read

மறைமலை அடிகளும், தோழர் சோமசுந்தர பாரதியாரும் செய்யும் கிளர்ச்சிக்குக் காரணம் ஆரியத் துவேசம் என்று சொன்னாராம். கனம் ஆச்சாரியாரும் ஹிந்தியை எதிர்ப்பவர்களைப் பற்றி இப்படியே சொல்லுகிறார். தமிழுக்கு ஆரிய பாசையைப் புகுத்துவதும், அது கூடாதென்றால் ஆரிய துவேசம் என்று சொல்லி தப்பித்துக் கொள்ளப் பார்ப்பதும் என்றால், இது மிக இழிவான சமாதானம் என்றுதான் சொல்லுவேன்.

தோழர் மறைமலை அடிகளும், பாரதியாரும் வெகுகலமாய் ஆட்சேபித்து வந்திருக்கிறார்கள். இதைக் கண்டித்துப் பல புஸ்தகங்கள் போட்டு இருக்கிறார்கள்.
அன்றியும், இந்த நாட்டு தமிழ் மக்களுக்கு ஆரிய துவேசம் இருப்பது ஒரு அதிசயமா என்று கேட்கின்றேன்.

ஆரிய மதப்படி தமிழ் மக்கள் எவ்வளவு இழிவானவர்களாகக் கருதப்படக் கூடியவர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்.

ஒரு சமூகத்தை ஒரு சமூகம் கீழ் ஜாதியென்றும், அடிமை ஜாதியென்றும், தங்களுக்கு (ஆரியருக்கு) பாடுபட்டுப் போட்டு வாழ வேண்டியவர்கள் என்றும் சொல்லப்படுமானால் – கருதப்படுமானால் சமூகத்துக்குச் சமூகம் துவேசமில்லாமல் இருக்க முடியுமா? என்று பாருங்கள்.

தமிழ் மக்களுக்கு ஆரிய பாசை கட்டாயமாய் கற்றுக் கொடுத்தல்கூட துவேசப்படாமல் இருக்க முடியுமா? என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்.
வெள்ளைக்காரர் மீது பார்ப்பனர்கள் குறைகூறி அவர்களை ஓட்ட வேண்டுமென்று கூறியது குற்றமில்லை, துவேசமில்லை என்று கற்றுக் கொடுத்த இவர்கள் கொடுமையைப் பார்த்து இவர்கள் செய்கையைக் கண்டிப்பது துவேசமா என்று கேட்கிறேன்.

இன்று பார்ப்பனர்கள் நடத்தும் ராஜ்யபாரம் வெள்ளைக்காரர் ராஜ்ய பாரத்தைவிட 1000 மடங்கு கொடுமையானதாகவும், எதேச்சாதிகாரமாகவும் இருக்கிறதே, இதை நாம் சகித்துக் கொண்டிருக்க வேண்டியதுதான் நம் கதியா என்று நான் கேட்கிறேன்.

மனதறிந்த பித்தலாட்டம்

ஆச்சாரியார், ஹிந்தியைப் புகுத்துவதால் தமிழ் கெடாது என்று மனதறிந்த பித்தலாட்டம் பேசுகிறார். இன்று தமிழ் எங்கே இருக்கிறது? தமிழ் பழக்கவழக்கம், சுதந்திரம், மானம் ஆகியவைகளை உணர்த்தும் தமிழ் வார்த்தைகள் எங்கே?
ஒரு தமிழ் மகன், தன் மகளுக்கோ மகனுக்கோ கல்யாணம் செய்ய வேண்டுமானால் தமிழ் சொல் எங்கே?

தமிழ் கருத்தினால் வாழ்க்கைத் துணைநலம் என்பான். ஆனால், ஆரிய கருத்தில் பேசும்போது கல்யாணம், விவாகம், கன்னியாதானம் என்கிறான். வார்த்தை வரும்போது கருத்தும் மாறிவிடுகிறது. இதற்குத் தகுந்தபடி புரோகிதம், சடங்கு, செலவு பார்ப்பான் பிழைக்க வழி ஏற்படுவதல்லாமல் வாழ்க்கைத் துணை என்பதில் சம உரிமையும் கன்னியாதானம் என்பதில் ஆண்டான் அடிமை தன்மையும் புகுத்தப்பட்டு விடுகிறது.

இம்மாதிரியே ஆரியக் கலப்பால் தமிழின் தன்மை, உரிமை, நேர்மை எல்லாம் கெட்டு ஆரியருக்கு தமிழன் அடிமை என்பதுதான் மிஞ்சி விடுகிறது. அப்படியிருக்கும் போது இனியும் ஆரிய பாசையை கட்டாயமாக்கினால் என்ன ஆகும்?

ஆகையால் ஹிந்தியை ஆச்சாரியார் புகுத்துவது மத உணர்ச்சியாலேயே ஒழிய கல்வி உணர்ச்சியால் அல்ல என்பதை நீங்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகிறேன்.

(26.6.1938ஆம் தேதி சென்னை கடற்கரையில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்புக் கூட்டத்தில் பெரியார் ஆற்றிய சொற்பொழிவு – குடிஅரசு – 10.7.1938, பக்கம் 16)
– கி.பழநிசாமி, தெ.புதுப்பட்டி

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *