சுமதி
பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம்
கான்பெர்ரா, ஆஸ்திரேலியா
ஆசிரியர் அய்யா கி. வீரமணி அவர்களும், தோழர் அருள்மொழி அவர்களும் தான் வரப்போகிறார்கள் என்று எனக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. கான்பெர்ரா வில் நான் மட்டும் தான். மற்ற மாநிலங்களில் ‘பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்ட’த்தை சேர்ந்த மற்ற தோழர்கள் ஒன்றிணைந்து நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்திக் கொண்டிருந்தார்கள். கான்பெர்ரா ஆஸ்திரேலியாவின் தலைநகரம் மட்டுமல்ல, அதிக அரசு நிறுவனங்கள் செயல்படும் ஒன்றிய பகுதி. அதனாலேயே இங்கு வசிக்கும் மக்கள் கொஞ்சம் அரசியல் நிகழ்வுகளில் தங்களை அதிகம் ஈடுபடுத்தி கொள்ள மாட்டார்கள்.
வரவேற்பு
ஆசிரியர் அய்யா அவர்களையும், தோழர் அருள்மொழியையும் இதற்கு முன் சந்தித்து பேசியதுண்டு எனினும், இந்த முறை நான் அவர்களை வரவேற்பது முதன்முறை. இதற்கு முன் அந்த அனுபவம் இல்லை என்ற காரணம் மட்டுமல்ல, அடுத்த இரண்டு நாட்களுக்கு நான் அவர்களை வாகனத்தில் அழைத்து செல்ல வேண்டும் என்ற படபடப்பும் கூடவே இருந்தது. ஒரே ஆறுதல், PATCA தலைவர் அண்ணா மகிழ்நன் கூடவே இருப்பார் என்பது மட்டுமே.
நல்வாய்ப்பாக என்னுடன் இன்னும் இரண்டு நபர்கள் வரவேற்க வந்திருந்தார்கள். வரவேற்பு முடிந்து, பெட்டிகளை எடுத்துக் கொண்டு இரண்டு கார்களில் கிளம்பினோம். ஆசிரியரும் தோழர் அருள்மொழியும் மட்டும் என் காரில். அதுவே லேசான நடுக்கத்தை கொடுத்தது. இருவரும் வாகனத்தில் அமர்ந்ததும், மிக மெதுவாக காரை நிறுத்துமிடத்தில் இருந்து வெளியே எடுத்தேன். ரவுண்டானாவில் (Round about ) தவறான பாதையில் ஓட்டி விட்டேன். லேசாக இருந்த பதற்றம் கொஞ்சம் அதிகமானது. காரை பின்னுக்கு செலுத்தும் பொழுது, நடைபாதையின் மேல் ஏறி கீழே இறங்கி கார் அதிர்ந்தது. வாகனத்தை நேர் செய்து முன்செலுத்தும் போதும் நடைபாதையின் மேல் ஏறி இறங்கி, அதிர்ந்தது.
அந்தக் குரல்
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள மேக்னா கார்ட்டா அறிக்கையினைப் பார்வையிட்டபோது
எனக்கு அழுகையே வந்துவிட்டது. அப்போது பின்னால் இருந்த தோழர் அருள்மொழியின் குரல் கேட்டது, “சுமதி, பதற்றப்படாதீர்கள். ஒன்றும் அவசரமில்லை. நிதானமாக ஓட்டுங்கள்” என்று. அந்த குரலால் என் பதற்றம் பெரும் அளவு குறைந்திருந்தது. அதன் பின் அந்த இரண்டு நாட்களிலும் எந்த தவறும் நிகழாமல் ஆசிரியர் அய்யாவை மிக பத்திரமாக பார்த்துக் கொள்ள உதவியது.
முன்பே குறிப்பிட்டதை போல தோழர் அருள்மொழியை முன்பு ஒருமுறை சந்தித்திருந்த பொழுதும், அவர் தொலைக்காட்சி மூலமே மிக நெருக்கம். எவ்வளவு ஆத்திரமும் சலிப்பும் வரவைக்கும் கேள்விகள் கேட்கப்படும் பொழுதும், ஒருமுறை கூட சலிக்காமல், கோபப்படாமல் அவரால் மட்டுமே பதில் சொல்ல முடியும். உதாரணத்திற்கு, இருமொழி கொள்கைக்கு ஆதரவாக பேசும் விவாதங்களில் ‘பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்றாரே ?’ என்று கேட்பவர், அதற்கான விடையை குறைந்தது 1000 முறையாவது கேட்டிருப்பார். அதற்கான விடையை அருள்மொழி அம்மா 1 லட்சம் முறை யேனும் சொல்லி இருப்பார்.
இளம் தலைமுறைக்காக
கேட்பவர் கேட்பதற்கான காரணம், பதிலை பெறுவதற்கு அல்ல. அதுதான் தமிழை பற்றிய பெரியாரின் மதிப்பீடு என்று பரப்புவதற்காக. தோழர் அருள்மொழி சொல்லும் பதில் அவருக்கானது அல்ல. உண்மையில் பெரியார் எதற்காக அப்படி சொன்னார் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாய் இருக்கும் இளம் தலைமுறைக்காக. சில சமயங்களில் அவர் குரலை உயர்த்தினாலும் அதில் கடுமை கொஞ்சமும் இருக்காது. அவ்வளவு பரிச்சியமான அமைதியான அந்த குரலை கேட்டதும், பதற்றம் ஒட்டுமொத்தமாக மறைந்து போனது.
ஆசிரியரும் தோழர் அருள்மொழியும் வரப்போவது உறுதியானதில் இருந்து அவர்களை எப்படி கவனித்து கொள்ள வேண்டும் என்ற சிந்தனையில் தான் மனம் இருந்தது. அதனால் தோழர் அருள்மொழி அவர்களுடன் தனிமையில் பேசும் வாய்ப்பு இருந்த பொழுதும், அதிகமான அரசியல் சார்ந்த கேள்விகளை கேட்கவில்லை.
மரியாதை
சுமதியின் இல்லத்தில் அவரது இணையர் விஜயகுமாருடன்
கொஞ்சம் தனிப்பட்ட கேள்விகளை தான் கேட்டேன். அவர் அளித்த விடைகளில் இருந்து ஒன்று புரிந்தது. இந்த இயக்கத்திற்காகவும் இந்த மக்களுக்காகவும் அவர் தன் வருமானம், உடல்நிலை இரண்டையுமே சமரசம் செய்து கொண்டிருக்கிறார் என்பது ஏற்கெனவே இருந்த மரியாதையை இன்னும் கூட்டியது.
குடிதண்ணீர் மாறிக் கொண்டே இருந்ததால் அவருக்கு இருமல் வரத் துவங்கியது. அப்போது அவர் சொன்னது ‘மெல்போர்ன் தான் கடைசி நிகழ்ச்சி. அதுவரை நன்றாக இருந்துவிட்டால் போதும்’ என்று. அன்று மாலை லேசான காய்ச்சலும் சேர்ந்து கொள்ள, தான் கொண்டு வந்திருந்த மாத்திரைகளை வைத்து சமாளித்துக் கொண்டார்.
மெல்போர்ன் நிகழ்ச்சியில் பேசத் துவங்கியதும், இருமலுக்கான தடயமே தெரியவில்லையே என்று எண்ணிய பொழுது, கொஞ்சம் தண்ணீரை பருகினார். அப்போது தான் புரிந்தது, இருமலை முடிந்த அளவிற்கு கட்டுப்படுத்திக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார் என்று.
உண்மை
ஆசிரியர் சில வரலாறுகளை சொல்ல, அதை தோழர் அருள்மொழி புதிதாக கேட்பதை போன்று இருந்தது கொஞ்சம் ஆச்சரியத்தை கொடுத்தது. நமக்கு தான் அது தெரியாது, இவ்வளவு ஆண்டுகள் இயக்கத்தில் இருக்கிறார், அவருக்கும் தெரியாதா என்று தோன்றியது. அவரிடமே கேட்ட பொழுது ‘அவர் எனக்கு மட்டும் சொல்லவில்லை. உங்களுக்கும் சேர்த்தே சொல்கிறார். எனக்கு ஏற்ெகனவே தெரிந்த செய்தி என்று நான் அவர் சொல்ல வருவதை தடுத்தால் அந்த செய்தி உங்களுக்கு போய் சேராது. மேலும் எனக்குத் தெரியாத செய்தியை அடுத்து அவர் சொல்ல வாய்ப்புள்ளது. அதை தடுப்பது போல ஆகிவிடும்’ என்றார். எவ்வளவு உண்மையான வார்த்தைகள்.
அடுத்த நாள் அவர் அறைக்குச் செல்லும் பொழுது, ஒரு சிறிய நோட்டுப் புத்தகமும், நூலும் வைத்திருந்தார். குறிப்பெடுக்க என்றார். தினமும் ஒருமணி நேரமாவது தினசரிகளை படித்து குறிப்பெடுப்பேன் என்றார். விவாதங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலடி கொடுப்பதை பார்க்கும் பொழுது நிறைவாக இருக்கும். ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் உழைப்பு என்பது தினசரி மூளைப் பயிற்சி என்பது அப்போது தான் புரிந்தது. நூல்களைப் படிக்கும் பொழுது, வெறும் கோடு போடுவதனால் மட்டுமே பயன் இல்லை, நம் கைப்பட குறிப்பெடுப்பது நினைவில் வைத்துக் கொள்வதற்கும் உதவியாக இருக்கும் என்று பள்ளி ஆசிரியர் சொன்னதை மீண்டும் தோழர் அருள்மொழி அம்மாவின் குரலில் கேட்டேன்.
நெகிழ்வு
அய்யாவுக்கு நூல் பரிசளித்தபோது. ( சுமதியின் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.)
அய்யாவிற்கு என்ன உணவு கொடுக்கலாம். சோறு எவ்வளவு குழைந்து இருக்க வேண்டும், வெந்நீர் எந்த பதத்தில் இருக்க வேண்டும் என்பது முதற்கொண்டு, ‘அய்யா கொஞ்சம் முட்டை சேர்த்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் பழம் சாப்பிடுங்கள்’ என்று ஆசிரியரின் உடல்நிலையை கவனித்து கொண்டது பெரும் நெகிழ்வை ஏற்படுத்தி இருந்தது.
அதனாலோ என்னவோ, ஆசிரியரையும் தோழர் அருள்மொழியையும் வரவேற்க சென்ற நான், அவர்கள் கிளம்பும் பொழுது, என் தாத்தாவையும், என் அத்தையையும் பிரிவதை போல சோகம் ஏற்பட்டது. தோழர் அருள்மொழி இருந்த அந்த இரண்டு நாள்களும் என் குடும்பத்தாருடன் செலவிட்டதை போன்ற உணர்வே ஏற்பட்டது.
அரசியலில் நட்பு முரண், பகை முரணைத் தாண்டி, துரோகிகளை எப்படி அடையாளம் காண்பது என்று மூன்று வார்த்தைகளில் அருள்மொழி அவர்கள் சொன்னது தான், என் புதிய குறிப்பேட்டில் முதலில் இடம்பெறும். அவ்வளவு இரத்தின சுருக்கமாக சொல்லியது நெஞ்சில் ஆணி அடித்தது போல இருக்கிறது.
இனிய நினைவுகள்
அந்த இரண்டு நாட்களில் அனைத்தும் இனிமையான நினைவுகளாய் இருக்க, ஒரே ஒரு குறை மட்டும் உள்ளது. நான் பணி செய்யும் அலுவலக வளாகத்திற்கு ஆசிரியர், அருள்மொழி ஆகியோரை அழைத்துச் சென்று ‘தந்தை பெரியாரும் திராவிடர் இயக்கமும், அதற்கு பின்னால் உங்களை போன்றவர்களின் உழைப்பும் இல்லாமல், அந்த இடம் எனக்கு சாத்தியப்பட்டிருக்கவே வாய்ப்பில்லை’ என்று நன்றி தெரிவிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். நேரமின்மை காரணமாக அழைத்துச் செல்ல முடியாமல் போய்விட்டது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை நினைத்திருந்தேன். எனக்கு பெண் குழந்தைகள் இருந்திருந்தால் தோழர் அருள்மொழியைப் போல வளர்த்திருப்பேன் என்று. எவ்வளவு முட்டாள் தனமான எண்ணம். ஆண் குழந்தைகளுக்கும் தோழர் அருள்மொழி அம்மா ஒரு ரோல் மாடல் தான்.