* நான் சொல்லுகின்ற கருத்தை நீங்கள் ஏற்கவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை!
*சுயமாகச் சிந்தியுங்கள், சரியென்று பட்டால் எடுத்துக்கொள்ளுங்கள்;
*சரியில்லை என்று சொன்னால், தள்ளிவிடுங்கள்!
யார்மீதும், எந்தக் கருத்தையும் திணிக்காத இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம்!
சிட்னி, ஏப். 4 நான் சொல்லுகின்ற கருத்தை நீங்கள் ஏற்கவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. சுயமாகச் சிந்தியுங்கள்; சரியென்றுபட்டால் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு சரியில்லை என்று சொன்னால், தள்ளிவிடுங்கள். யார்மீதும், எந்தக் கருத்தையும் திணிக்காத இயக்கம்தான் இந்த இயக்கம். அதுதான் பகுத்தறிவு! அதுதான் சுயமரியாதை! அப்படிப்பட்ட ஓர் அற்புதமான இயக்கத்தை நீங்கள் சிறப்பாகக் கொண்டாடுகிறீர்கள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
உலக மகளிர் நாள் விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்று சிறப்புரை!
கடந்த 15.3.2025 அன்று ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் உள்ள வென்ட்வொர்த்வில்லே அரங்கில், பெரியார் – அம்பேத்கர் சிந்தனை வட்டத்தின் சார்பில் நடைபெற்ற உலக மகளிர் நாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
பெண்களுடைய விடுதலையை ஆண்கள் ஒருபோதும் பெற்றுத் தர முடியாது!
ஆகவேதான் பெரியார் சொன்னார், ‘‘பெண்களுடைய விடுதலையை ஆண்கள் ஒருபோதும் பெற்றுத் தர முடியாது’’ என்று.
விடுதலை என்று வரும்போது, அவரவருடைய உணர்வுகளில் வரவேண்டும்.
அதனால்தான், இப்போது பெண்களுக்குத் துணிச்சல் வருகிறது. ஏன் பெண்களே, சமைக்கவேண்டும்; ஆண்கள் ஏன் சமைக்கக்கூடாது? என்று பெரியார் கேட்டார்.
இப்போது நல்ல வாய்ப்பாக, வெளிநாட்டிற்கு வந்ததால் ஒரு பெரிய லாபம் என்னவென்றால், தமிழ்நாட்டு ஆண்கள் சமையல் கற்றுக்கொண்டார்கள். ஆஸ்திரேலியாவில் மட்டுமல்ல, அமெரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்றாலும். ஆனால், அதே நண்பர், தமிழ்நாட்டிற்கு, தன்னுடைய சொந்த ஊருக்கு வரும்போது, அவர் சமையல் அறைப் பக்கமே போவதில்லை.
சின்னச் சின்ன விஷயங்களில்கூட, பெண் இனத்தைக் காலங்காலமாக இப்படிப்பட்ட ஓர் அடிமையாக்கும் மனநிலை இருக்கிறது.
பண்பாட்டுப் படையெடுப்பு மிகப்பெரிய ஆபத்து!
அதேபோன்று பண்பாட்டு அடிமைத்தனம் என்பது மிகப்பெரிய ஆபத்து, பண்பாட்டுப் படையெடுப்பினால் உண்டாவது – அந்த ஆபத்து!
நம்முடைய பண்பாடு, ஆரம்பத்தில் இருந்த பண்பாடு, ‘‘யாவரும் கேளிர்’’ என்பதுதான். அதிலொன்றும் பிரிவினை கிடையாது.
ஆனால், இடையில் புகுந்ததொரு பண்பாடு இன்னொரு பண்பாடு -நமக்கு நேர்விரோதமான ஒரு பண்பாடு. மனிதநேயத்தை அங்கீகரிக்காத அந்த ஒரு பண்பாடு என்ன செய்தது என்றால், ஆண் – எப்போதுமே ஆண்களுக்கான அந்த இடத்தை பெண்களா£ல் நிரப்ப முடியாது. அதுதான் உயர்ந்த, பெண்களால் தொட முடியாத இடம் என்றார்கள்.
கடவுள்களில்கூட இன்றைக்கு ஒரு பெரிய போராட்டம் நம்முடைய நாட்டில் இருக்கிறது. அந்த ஆபத்தும் இங்கேயும் வரக்கூடிய ஆபத்தும் இருக்கிறது.
உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருக்கலாம்; இல்லாமல் இருக்கலாம். அது வேறு செய்தி.
இரண்டு சிமிழிக்குள் தவறாக அடைத்துவிடுகிறார்கள்!
தந்தை பெரியார் அவர்களைப்பற்றி சொல்லும்போது, அவருடைய மனிதநேயத்தையெல்லாம் மறைத்துவிட்டு, அவர் கடவுள் இல்லை என்று சொன்னவர்; அவர் ஒரு குறிப்பிட்ட ஜாதியை தாக்கியவர் என்று இரண்டு சிமிழிக்குள் தவறாக அடைத்துவிடுகிறார்கள்.
ஒருமுறை தந்தை பெரியார் சொன்னார், ஆண்களுக்கு அறிவுரை சொல்லும்போது, ‘‘ஆண்களாக இருக்கும் தோழர்களாகிய உங்களுக்குச் சொல்கிறேன், பெண்ணுக்கு உரிமை என்று சொல்லுகின்ற நேரத்தில், உங்கள் மனைவியை நினைத்துக்கொண்டு பார்க்காதீர்கள். மனைவியை நினைத்துக் கொண்டீர்கள் என்றால், எந்த ஆணுமே பெண்ணுக்கு உரிமை கொடுக்கமாட்டார்கள். ஏனென்றால், ஓர் நல்ல அடிமை கிடைத்துவிட்டார்; சம்பளம் இல்லாத ஒரு வேலைக்காரி கிடைத்து விட்டாள். வாழ்நாள் முழுவதும் இவரை வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்துவிடுவார்கள். அதனால், உங்களுடைய தங்கையையோ, மகளையோ நினைத்துக் கொள்ளுங்கள்’’ என்று சொன்னார்.
பெண் உரிமையை இன்னொருவர் கொடுக்க முடியாது; பெண்களே எடுத்துக் கொள்ளவேண்டும்!
ஆகவே, பெண் உரிமை என்பது இருக்கிறதே, அதை இன்னொருவர் கொடுக்க முடியாது. பெண்களே எடுத்துக் கொள்ளவேண்டியதுதான். ஆண்கள் தருவார்கள் என்று நினைத்தால், உங்களுக்கு ஒருபோதும் அந்த உரிமை கிடையாது. எங்கேயாவது பூனைகளால், எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா? என்று பெண்களுக்கும் அறிவுரை சொன்னார் தந்தை பெரியார் அவர்கள்.
உலக மக்கள் தொகையில் பெண்கள் சரி பகுதியாக இருக்கக் கூடியவர்கள். அவர்களுக்கு சமத்துவம், சம வாய்ப்பு, சம உரிமை வந்தால், பெண்களுக்கு மிகப்பெரிய லாபமாகும்.
ஆனால், அந்த நிலைமை நம்முடைய நாட்டில் இல்லையே! பாமர மக்கள் மத்தியில்கூட இந்த அறிவுரையைச் சொல்லி, நாள் தவறாமல் பிரச்சாரம் செய்தவர் தந்தை பெரியார் அவர்கள்.
தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் தந்தை பெரியார்!
‘‘தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் தந்தை பெரியார்; அவருடைய வகுப்பு மாலை நேரக் கல்லூரி’’ என்று அண்ணா அவர்கள் மிக அழகாகச் சொன்னார்.
பெரியார் அவர்கள் மிக எளிமையாக ஒரு கேள்வி கேட்டு, மக்களைச் சிந்திக்க வைத்தார். அதுதான் மிகப்பெரிய எழுச்சியை உண்டாக்கியது.
நம் உடலில் இரண்டு கைகள், இரண்டு கால்கள் சரி சமமாக இயங்கவேண்டும்!
பெரியார் கேட்டார், ‘‘நம் உடலில் இரண்டு கைகள் இருக்கின்றன. ஒரு கை இயங்கி, இன்னொரு கை இயங்கவில்லை என்றால், அதற்குப் பெயர் பக்கவாதம் என்று பெயர். அதுபோன்று ஆண் – பெண் என்று இருப்பதில், பாலின வேறுபாடு எதற்கு? நம்முடைய உடலில் உள்ள இரண்டு கால்கள் சரியாக இயங்கவேண்டும் அல்லவா! இரண்டு காதுகள் சரியாக கேட்கவேண்டுமா இல்லையா? இரண்டு கண்களுக்கும் சரியான பார்வை இருக்கவேண்டும் அல்லவா! ஒரு கண்ணுக்குப் பார்வை, ஒரு கால் இயங்காது என்றால், அது பக்கவாதம் அல்லவா’’ என்றார்.
பெண்களை சமையல் கருவிகளாக ஆக்காதீர்கள் என்று சொன்னார் தந்தை பெரியார் அவர்கள்.
பெண்கள், இவ்வளவு பேர் படித்து பொறியாளராக ஆகியிருக்கிறீர்கள். நாமெல்லாம் மிகப்பெரிய வாய்ப்பைப் பெற்றிருக்கின்றோம்.
ஆனால், எம்.பி.ஏ., எம்.பி.பி.எஸ்., படித்த பெண்கள், திருமணம் ஆன பிறகு, நீங்கள் வேலைக்குப் போக வேண்டாம்; வீட்டில் உள்ள வேலையைப் பார்த்தால் போதும் என்று ஆண்கள் சொல்வார்கள்.
இந்த நாட்டில் உள்ளவர்கள் முற்போக்குச் சிந்தனை உள்ளவர்களாக இருக்கிறீர்கள்.
சுயமரியாதை இயக்கம் தோன்றுவதற்கு முன்னால்…
இந்த இயக்கம் தோன்றுவதற்கு முன்னால், பெண்களுக்கு சமத்துவம் கிடையாது. அந்த சமத்து வத்தை உருவாக்கவேண்டும்; சம வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான், இந்த இயக்கம் பாடுபட்டது.
பெண்கள் வெறும் சமையல் அறையில் பணியாற்று பவர்களாக இருக்கக்கூடாது. பிள்ளை பெறும் இயந்தி ரங்களாக இருக்கக்கூடாது என்று பெரியார் சொன்னார்.
பெண்கள் அலங்காரப் பொம்மைகளாக இருக்கக்கூடாது!
நீண்ட நாள்களுக்கு முன்னால் பெரியார் அவர்கள், கர்ப்ப ஆட்சியைப்பற்றி சொன்னவர். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தவேண்டும் என்று ஏன் சொன்னார் என்றால், பொருளாதாரக் காரணங்களுக்காக மட்டும் சொல்லவில்லை. பெண்களுக்கு விடுதலை வரவேண்டும் என்றால், குழந்தைப் பெறுவது அளவோடு இருக்கவேண்டும்; பெண்கள் அலங்காரப் பொம்மைகளாக இருக்கக்கூடாது என்று சொன்னார்.
பெரியார் – அம்பேத்கர் ஆகியோருக்கு ஏன் சிறப்பு செய்யவேண்டும் என்று சொன்னால், பழைமைக் கருத்துகள் இந்த நாட்டில் நுழைகிறது. அங்கிருந்து வரும்போது, எதை விட்டுவிட்டு வரவேண்டுமோ, அதை விட்டுவிட்டு வரவில்லை. அதனுடைய விளைவுதான் இப்போது.
இந்த நாட்டுச் சட்டம் எனக்குத் தெரியாது. ஆனால், எங்கள் நாட்டுச் சட்டத்தில், குறிப்பாக மிகப்பெரும்பா லான மதம் என்று சொல்லக்கூடிய அளவில் அப்போது, ஆண்களுக்குச் சொத்துரிமை உண்டு. ஆனால், பெண்களுக்குச் சொத்துரிமை இல்லை.
பெண்களுக்குச் சொத்துரிமை தீர்மானத்தை 1929 ஆம் ஆண்டிலேயே நிறைவேற்றினார்!
பெண்களின் சொத்துரிமைக்காக, இன்றைக்கு அல்ல, பெரியார், சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கி, செங்கல்பட்டு என்ற இடத்தில், முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டில், பெண்களுக்கு, ஆண்களைப் போலவே சொத்து ரிமை கொடுக்கவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினார்.
ஒரு வீட்டில், மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள்; அதில் ஒரு பெண்; இரண்டு ஆண்கள் என்றால், பெற்றோருடைய சொத்துக்களை சமமாகப் பிரித்துக் கொடுக்கவேண்டும் அல்லவா! ஆனால், அந்த நிலை அப்போது இல்லை.
அரசமைப்புச் சட்டத்தை எழுதிக் கொடுத்த அம்பேத்கர் அவர்கள், சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக இருந்தார்.
சட்ட அமைச்சர் பதவியிலிருந்து அம்பேத்கர் விலகியது ஏன்?
அப்போது, பெண்களுக்குச் சொத்துரிமை கொடுக்க வேண்டும் என்று ஒரு மசோதாவை கொண்டு வரு கிறார். அதற்கு அங்கே இருந்த பழைமைவாதிகள், பிற்போக்குவாதிகள், ஸநாதனிகள் என்ன செய்தார்கள் என்றால், பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு அவர்க ளையே மிரட்டினார்கள்.
மிக முக்கியமான பொறுப்பில் இருந்த ஒருவர், பெண்களுக்குச் சொத்துரிமை கொடுக்கவேண்டும் என்ற மசோதாவை அனுமதிக்க முடியாது என்று பகிரங்க மாகச் சொன்னார்.
அதைக் கேட்ட அம்பேத்கர் அவர்கள், ‘‘பெண்க ளுக்குச் சொத்துரிமை கொடுக்க முடியாது என்று சொல்கிறீர்களே, இது நியாயமா?’’ என்று கேட்ட நேரத்தில்,
‘‘பெண்களுக்குச் சொத்துரிமை கொடுத்தால், மதம் போயிற்று, ஜாதி போயிற்று, ஸநாதனம் போயிற்று, சடங்கு போயிற்று’’ என்று சொன்னார்கள்.
உடனடியாக அம்பேத்கர் அவர்கள், தனது சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலகினார், தனது கொள்கைக்காக.
சிலர் பேர் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவார்கள்; ஏனென்றால், அதைவிட பெரிய இலாகா கொடுக்க வில்லை என்பதற்காக. ஆனால், அம்பேத்கர் அவர்கள், கொள்கைக்காக விலகினார்.
பெண்களுக்குச் சொத்துரிமையைப் பெற்றுக் கொடுத்தது திராவிட இயக்கம்தான்!
எனவே, சுதந்திரம் அடைந்த நாட்டில், அரச மைப்புச் சட்டம் வந்த பிறகு, சமத்துவம் வந்த பிறகு, பெண்களுக்கு அந்த வாய்ப்பைக் கொடுக்க மறுத்தது ஸநாதனம்.
திராவிட இயக்கம் என்ன செய்தது? என்று சிலர் புரியாமல் கேட்கிறார்களே, அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறோம்; பெண்களுக்குச் சொத்துரிமையைப் பெற்றுக் கொடுத்தது திராவிட இயக்கம்தான்.
தந்தை பெரியார் அவர்கள், 1929 ஆம் ஆண்டி லேயே பெண்களுக்குச் சம உரிமை வேண்டும் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல், அவர்க ளுக்குச் சொத்துரிமை வேண்டும் என்றும் சொன்னார்.
கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது, பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு என்கிற சட்டத்தைத் தமிழ்நாட்டில் நிறைவேற்றி னார்.
2006 ஆம் ஆண்டு, பெண்களுக்குச் சொத்துரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது!
பெண்களுக்குச் சொத்துரிமை கொடுக்க முடி யாது என்று எந்த இந்திய நாடாளுமன்றத்தில் சொல்லப்பட்டதோ, அதே நாடாளுமன்றத்தில், 2006 ஆம் ஆண்டு, பெண்களுக்குச் சொத்துரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதற்குக் காரணம், திராவிட இயக்கம். இன்றைக்கு ஆண்களைப் போலவே, பெண்க ளுக்குச் சம அளவு சொத்துரிமை உண்டு.
நேற்றுகூட, தமிழ்நாடு சட்டப்பேரவையில், நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பெண்கள் பெயரில் சொத்து வாங்கினால், பதிவுக் கட்டணத்தில் ஒரு சதவிகித வரி விலக்கு என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
பெண்கள் பெயரில்தான் பட்டா!
அதேபோன்று, இலவசமாக நிலம் கொடுக்கும்போது, பெண்கள் பெயரில்தான் பட்டா கொடுக்கப்படுகிறது.
காலங்காலமாக வேற்றுமைப்படுத்தப்பட்ட ஒரு சமுதாயம் – காலங்காலமாக உரிமை மறுக்கப்பட்ட பெண்கள் சமுதாயம் – அவர்களுக்கெல்லாம் உரிமை யைப் பெற்றுத் தரவேண்டும்.
இதை ஏன், இங்கே வந்து சொல்கிறார், அது எந்த வகையில் நமக்குப் பொருந்தும் என்று நீங்கள் நினைக்கலாம்.
அந்த நோய் வந்ததைப்பற்றி சொன்னேன் அல்லவா – அதுபோன்று, இங்கே மீண்டும் வருணாசிரம தர்மத்தை கல்விக்குள் புகுத்தலாம் என்கிற முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆகவே, நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இல்லையானால், நம்முடைய பிள்ளைகளின் வாழ்க்கைக் கெட்டுப் போகும்.
நம்முடைய நாட்டிலிருந்து நீங்கள் வந்ததே கல்வியினால்தான் வந்தீர்கள். இங்கே வந்து நன்றாக இருக்கிறீர்கள். கல்வியில் வருணாசிரம தர்மம் நுழைந்தால், அது சமுதாயத்தை மாற்றி, கி.மு. காலத்திற்குக் கொண்டு போய்விடும்.
இது செயற்கை நுண்ணறிவு காலம். இந்தக் காலத்தில், நாம் பழைமைக் காலத்திற்குச் சென்றுவிடக்கூடாது.
எனவேதான், பெண்ணுரிமை என்று சொன்னா லும்கூட, அது மனித உரிமையாகும்.
பெண்ணுரிமையைப்பற்றி தந்தை பெரியார்!
நான் முன்பே கூறியபடி அதைத்தான் பெரியார் சொன்னார், ‘‘பெண்ணுரிமை என்று வரும்போது, உங்கள் மனைவியை நினைத்துக் கொண்டு பார்க்காதீர்கள்; உங்கள் மகளை நினைத்துக் கொண்டு யோசியுங்கள்; இதில் உங்கள் தாயை நினைத்துக் கொண்டு, உங்கள் சகோதரியை நினைத்துக் கொண்டு உங்கள் அணுகுமுறை இருக்கவேண்டும்’’ என்றார்.
தனது தங்கையையோ, தாயையோ, மகளையோ நினைத்தால், பெண்களுக்குச் சுதந்திரம் வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால், தன்னுடைய மனைவியை மட்டும் நினைத்தால், அவர் அடிமையாக இருக்கவேண்டும் என்றுதான் நினைப்பீர்கள். ஆகவேதான், இந்த அடிமைச் சிந்தனைக்கு இடம் தராதீர்கள் என்று சொன்னார்.
ஒரு புதிய சமுதாயத்தைப் படைப்போம்!
பெண்ணுரிமை என்பது மானுட உரிமையாகும். மனிதர்களாக பெண்கள் மதிக்கப்படவேண்டும்.
சுயமரியாதை இயக்கம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு சமூக இயக்கமாகும்.
சுயமரியாதை இயக்கத்தினுடைய முக்கிய நோக்கமே மனிதநேயம்தான்.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், சுயமரியாதை, பகுத்தறிவு உள்ள ஒரு புதிய சமுதாயத்தைப் படைப்போம்.
அந்த நோய், இங்கே வராமல் நீங்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அதை ஏன் இப்போது சொல்கிறார்; இப்போதுதான் இங்கே எதுவும் அவ்வாறு இல்லையே என்று நீங்கள் நினைக்கலாம்.
‘‘வருமுன்னர்க் காவாதார் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்’’
மருத்துவத்தில் இரண்டு வகை உண்டு!
மருத்துவத்தில் இரண்டு வகை உண்டு. அதை மருத்துவர்கள் நன்றாக அறிவார்கள்.
ஒன்று, நோய் வருவதற்கு முன் தடுப்பது;
இன்னொன்று நோய் வந்த பின்பு குணப்படுத்துவது.
‘‘நோய் வராமல் தடுப்பது என்பது, நோய் வந்த பிறகு குணப்படுத்துவதைவிட சிறந்ததாகும்.’’
எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்த நேரத்தில் இதைச் சொல்கிறேன்.
நண்பர்களே, இவ்வளவு நீண்ட நேரம் நீங்கள் பொறுமையாக இருந்து நான் சொன்ன கருத்துகளை நீங்கள் கேட்டமைக்கும், அன்பாக வரவேற்றமைக்கும் நன்றி!
நான் சொல்லுகின்ற கருத்தை நீங்கள் ஏற்கவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை.
இது எங்களுடைய கருத்து. உங்களுக்கு சுய அறிவு, சிந்தனை இருக்கிறது.
‘‘ஆனால்’’, என்பது மிகவும் ஆபத்தானது!
ஆகவே, சுயமாகச் சிந்தியுங்கள்; சரியென்று பட்டால் எடுத்துக்கொள்ளுங்கள்.
சரியென்று பட்டால் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும்போது, ‘‘எல்லாம் சரிதான், ஆனால்’’ என்று போடக் கூடாது. ‘‘ஆனால்’’, என்பது மிகவும் ஆபத்தானது.
தயவு செய்து உங்களுக்கு சரியில்லை என்று சொன்னால், தள்ளிவிடுங்கள். ஆகவேதான், ‘‘இவ்வளவு நேரம் நான் சொன்ன கருத்தை நம்புங்கள்; இல்லையென்றால், நீங்கள் நரகத்திற்குப் போய்விடுவீர்கள். அங்கே உங்களை கொதிக்கின்ற எண்ணெயில் துவைத்து எடுப்பார்கள்’’ என்று உங்களைப் பயமுறுத்தி நாங்கள் எங்கள் கருத்துகளைச் சொல்லமாட்டோம்.
யார்மீதும், எந்தக் கருத்தையும் திணிக்காத இயக்கம்தான் இந்த இயக்கம்.
அதுதான் பகுத்தறிவு!
அதுதான் சுயமரியாதை!
அப்படிப்பட்ட ஓர் அற்புதமான இயக்கத்தை நீங்கள் சிறப்பாகக் கொண்டாடுகிறீர்கள்!
வாழ்க, வளர்க!
நன்றி! நன்றி!! நன்றி!!!
மீண்டும் சந்திப்போம்!
சிக்கனமாக வாழுங்கள்!
சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள்!
உங்கள் வாழ்க்கையை செம்மையாக்கிக் கொள்ளுங்கள்! சிக்கனமாக வாழுங்கள்! சேமிப்புக்கு முக்கியத்துவம் கொடுங்கள்! குழந்தைகளை நன்றாக வளருங்கள்; குடும்பத்தோடு இருங்கள்! மனிதநேயம் வளரட்டும்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.