வக்ஃபு வாரியத் திருத்தச் சட்டம் என்பது ஆர்.எஸ்.எஸ். செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதே!
சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பறிப்பது – பச்சைப் பாசிசமே!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை!
பி.ஜே.பி. தலைமையிலான ஒன்றிய அரசு நிறை வேற்றியுள்ள வக்ஃபு வாரிய திருத்தச் சட்டம் என்பது சிறுபான்மை மக்களின் உரிமையைப் பறிப்பது மட்டுமல்ல; இந்திய அரசமைப்பு சட்டத்துக்கும், ஜனநாயகம், மதச் சார்பின்மைக்கும் ஊறுவிளைவிப்பதாகும். மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைந்து இந்தப் பாசிச ஆட்சியை வீழ்த்தவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இந்திய அரசமைப்புச் சட்டம் மதச் சிறுபான்மை யினருக்கு வழங்கும் உரிமைகளைப் பறிக்கும் வண்ணம், ஒன்றிய பா.ஜ.க. அரசு தனது ஹிந்துத்துவ-
ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. வக்ஃபு வாரியத் திருத்தச் சட்டம் என்ற பெயரில் மக்களவையில் பெரும்பான்மையான எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையில், அதிகாலை 2 மணிக்கு மசோதாவை நிறைவேற்றியுள்ளது ஒன்றிய அரசு.
232 எம்.பி.,க்கள் எதிர்ப்பு!
எதிர்க்கட்சிகளும், வக்ஃபு திருத்த மசோதாவுக்காக நாடாளுமன்றக் கூட்டுக் குழுவும் முன்வைத்த திருத்தங்க ளையும் பொருட்படுத்தாமல், வக்ஃபு வாரியத்தின் உரிமைகளை நசுக்கும் வகையில் இந்தச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. 232 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், நிதிஷ்குமார், சந்திரபாபு ஆகியோரின் கட்சி ஆதரவுடன் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது சிறுபான்மைச் சமூக மக்களுக்கு, இஸ்லாமியர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுள்ள பெரும் தாக்குதலாகும்.
வக்ஃபு வாரியச் சொத்துகளை நிர்வகிக்க இரண்டு இஸ்லாமியர் அல்லாதவர்களை நியமிக்க வகை செய்துள்ளது அடிப்படை நியாயத்திற்கே முற்றிலும் விரோதமாகும். இந்து அறநிலையத் துறையின் கோயிலில் அறங்காவலர் குழுவில் இந்து மதத்தைச் சார்ந்தவர் என்றாலும், இஸ்லாமியப் பெயர் உடையவர் என்பதற்கே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இந்து அறநிலையத் துறையினால் நிர்வகிக்கப்படும் கல்லூரிகளில் இந்து மதத்தவர் அல்லாதவர் வேலைக்குக் கூட சேரக் கூடாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
ஆனால், இஸ்லாமியர் சொத்துகளை நிர்வகிக்க இரண்டு இஸ்லாமியர் அல்லாதவர்களை ஒன்றிய அளவிலும், மாநில அளவிலும் நியமிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றியிருக்கிறார்கள் இப்போது!
இது எந்த வகையில் நியாயம்?
உள்துறை அமைச்சரின் நோக்கம் புரிகிறது!
ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வக்ஃபு வாரியச் சொத்துகளுக்கு, அவ் வாரியம் உரிமை கோருவதற்கு முடிவு கட்டவே இந்தச் சட்டம் என்று வெளிப்படையாக அறிவிக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா! நாட்டில் மேலும் கலவரத்தை, பிரச்சினைகளைத் தூண்டு வதற்கான சட்டப்படியான ஏற்பாட்டை இதன் மூலம் ஒன்றிய அரசு செய்துள்ளது.
இந்தச் சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு சட்டப் பேரவை யில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும், எழுப்பப்பட்டுள்ள கண்டனமும், பிரதமருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எழுதியுள்ள கடிதமும் முக்கியமானவை ஆகும். இச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் வழக்குத் தொடுக்கப்படும் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.
ஆட்சிக்காக, அரசியலுக்காக, இச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளவர்கள், பாசிசப் போக்குக்கு வழிகோலியவர்கள் ஆவார்கள். இப்படித்தான் சி.ஏ.ஏ., சட்டத்தை நிறைவேற்ற அ.தி.மு.க. துணைபோய் மாறாப் பழியைத் தேடிக் கொண்டது.
ஆபத்தான பாசிசப் போக்கு!
தொடர்ந்து சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கு ஊறு விளைவித்துக் கொண்டிருக்கும் ஒன்றிய பி.ஜே.பி. அரசின் செயற்பாடுகள் இந்திய அரசமைப்புக்கும், ஜனநாயகத்துக்கும், மதச்சார்பின்மைக்கும் ஆபத்தான பாசிச போக்கே!
மதச்சார்பற்ற சக்திகள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டிய காலகட்டம் இது!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
திராவிடர் கழகம்
சென்னை