சட்டமன்றப் பேரவை 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஏப்.3 சட்டப் பேரவையில் இன்று (3.4.2025) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 110 விதியின்கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். சென்னை யில் காரல்மார்க்ஸ் சிலை அமைக்கப்படும், பி.கே. மூக்கையா தேவருக்கு, உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அப்போது அவர் அறிவித்தார்.
2 முக்கியமான அறிவிப்புகள்
தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றப் பேரவை 110ஆவது விதியின்கீழ் 2 அறிவிப்பு களை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
பேரவைத் தலைவர் அவர்களே, சட்டமன்றப் பேரவை விதி எண் 110-இன்கீழ் இரண்டு முக்கியமான அறிவிப்புகளை இம்மாமன்றத்தில் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் அறிக்கையை
தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார் பெரியார்
மார்க்ஸ் – ஏங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை முதன்முதலாகத் தந்தை பெரியார் அவர்கள். தமிழில் மொழிபெயர்த்து 1931ஆம் ஆண்டே வெளியிட்டார்.
முதலாவது அறிவிப்பு; உலக மாமேதை காரல் மார்க்ஸ் அவர்களைப் பெருமைப் படுத்திட, போற்றிட இந்த திராவிட மாடல் அரசு விரும்புகிறது.
உலகத் தொழிலாளர்களே ஒன்று கூடுங்கள் என்ற பிரகடனத்தை, உலகத் தொழிலாளர்கள் அனைவருக்குமான ஒரே முழக்கமாக பொதுவுடைமைத் தத்து வத்தை வடித்துத் தந்த புரட்சியாளர் காரல் மார்க்ஸ் அவர்கள். இழப்பதற்கென்று எதுவுமில்லை-பெறுவதற்கோ பொன்னுலகு இருக்கிறது என்ற நம்பிக்கை விதைகளை விதைத்தவர்! அறிவுலகத் தொலைநோக்குச் சிந்தனையாளர்!
வரலாற்றில் பலரும் பிறக்கிறார்கள்; பலர் வரலாற்றுக்குத் தொண்டாற்றி இருக்கிறார்கள். ஆனால், வரலாற்றின் போக்கினையே மாற்றி அமைத்தவர்கள் சிலர் தான். அந்த ஒரு சிலரில் தலைமகனாகப் போற்றப்படுபவர் காரல் மார்க்ஸ்.
உலகப் புரட்சிகளுக்கும், இந்த உலகம் இதுவரை அடைந்துள்ள பல் வேறு மாற்றங்களுக்கும் அடித்தளம் அமைத்தது அவரது சிந்தனைகள்தான். அப்படிப்பட்ட ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற சிந்தனையோடுதான், அவரது நினைவு நாளான கடந்த மார்ச் 14-ஆம் நாள், நம்முடைய நிதிலை அறிக்கையை இந்தப் பேரவையில் தாக்கல் செய்தோம்.
காரல்மாரக்ஸ் சிலை
இந்தியாவைப் பற்றி யாரும் எழுதாத காலத்தில், மிகச்சரியாக இந்தியாவைப் பற்றி எழுதியவர் அவர்தான். “தீர்க்க முடியாத முரண்பாடுகள் உள்ள பல்வேறு இனங்கள், குலமரபுகள், ஜாதிகள், சமயக் கோட்பாடுகள், அரசுகள் ஆகியவைகளை ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்டிருக்கிற புவியியல் ஒற்றுமையைத்தான் இந்தியா என்று அழைக்கிறோம். இந்தியாவின் கடந்த காலத்தில் அரசியல் எவ்வாறு மாறிய போதிலும் சமுதாய நிலை மாறவில்லை. எது எப்படி இருந்தாலும் சரி, அந்த மகத்தான, கவர்ச்சிகரமான தேசம் ஒரு காலத்தில் மறுமலர்ச்சி அடைவார்கள் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம்” என்று எழுதியவர் காரல் மார்க்ஸ்.
காரல்மார்க்சுக்கு சென்னையில் சிலை
அதனால்தான் மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை முதன்முதலாகத் தமிழில் மொழிபெயர்த்து 1931-ஆம் ஆண்டே வெளியிட்டார் தந்தை பெரியார் அவர்கள். அத்தகைய மாமேதை மார்க்ஸ் அவர்களது உருவச் சிலை தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரில் அமைக்கப்படும் என்ற மகிழ்ச்சியான அறிவிப்பை இம்மாமன்றத்தில் அறிவிப்பதில் பெருமையடைகிறேன்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பே தொழிற் சங்க இயக்கம் கோலோச்சிய இந்த சென்னை மாநகரில் அந்த மாமேதையின் சிலை அமைவது பொருத்தமானது என்று நான் கருதுகிறேன்.
மூக்கையா தேவருக்கு மணி மண்டபம்
அடுத்து, இரண்டாவது அறிவிப்பு;
அடுத்து, இரண்டாவது அறிவிப்பு;
அகில இந்திய பார்வர்டு பிளாக் தலைவரும் உறங்காப்புலி என்று போற்றப்பட்டவருமான பி.கே.மூக்கையாதேவருக்கு நாளை 103-ஆவது பிறந்தநாள்!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 1923-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4-ஆம் நாள் அவருடைய பிறந்த நாள். இளம் வயதில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் நம்பிக்கையைப் பெற்று பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்தார்.
சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் 1952-ஆம் ஆண்டு பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அதன்பிறகு 1957, 1962, 1967, 1971, 1977 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து உசிலம்பட்டி தொகுதியில் வெற்றி வாகை சூடியவர் மூக்கையா தேவர். 1971-ஆம் ஆண்டு இராமநாதபுரம் நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு வென்றவர். ஒரே தொகுதியில் தொடர்ச்சியாக வென்று மக்கள் நாயகனாக வளர்ந்தவர் அவர்.
நியாயத்துக்கு
ஒரு மூக்கையா என்றார் அண்ணா!
ஒரு மூக்கையா என்றார் அண்ணா!
1967-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் நடைபெற்றபோது அறிஞர் பெருந்தகை அண்ணாவுக்கு தோள் கொடுத்தவர் பி.கே.மூக்கையாத் தேவர் அவர்கள். அப்போது இந்தப் பேரவையில் தற்காலிகப் பேரவைத் தலைவராக இருந்த அவர்தான் அன்றைக்குச் சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் முழங்கியவரும் அவர்தான். தேவர் சமுதாய மக்களுக்காக கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்று முதலமைச்சர் அண்ணா அவர்களிடம் கோரிக்கை வைத்தவரும் அவர். அதனால்தான் கமுதி, உசிலம்பட்டி, மேலநீலிதநல்லூர் ஆகிய இடங்களில் அரசு கல்லூரிகள் தி.மு.க. ஆட்சியில் அப்போது அமைக்கப்பட்டன.
’நியாயத்துக்கு ஒரு மூக்கையா’ என்று அறிஞர் அண்ணா அவர்களால் போற்றப்பட்ட பி.கே.மூக்கையாதேவர் அவர்களை சிறப்பிக்கும் வகையில், உசிலம்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவிப்பதிலும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.