உலகெங்கும் இருக்கிற இசுலாமியர்கள் தங்களின் பெருவிழாவான ரம்ஜானைச் சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர். போரினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட காசாவில் கூட, குண்டுவீச்சால் உருக் குலைந்து குப்பைமேடாக காணப்படும் மசூதிக்கு அருகிலேயே தொழுகை நடத்தி, ரம்ஜானைக் கொண்டாடிய காட்சிகளை ஊடகங்களில் கண்டோம். ஆனால், உலகில் அதிகமான இசுலாமியர்கள் வாழும் நாடான இந்தியாவிலோ இரண்டு விதமான ரம்ஜான் கொண்டாட்டங்களைக் காண முடிந்தது. ஒன்று வடக்கில் அச்சத்தோடு கொண்டாடப்பட்ட ரம்ஜான்; மற்றொன்று தெற்கில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட ரம்ஜான்.
குறிப்பாக, உத்தரப் பிரதேச மாநிலத்தில் உளவியல் ரீதியாக இசுலாமியர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகினர். மீரட் மாவட்டத்தில், சாலைகளில் தொழுகை நடத்தக்கூடாது, மீறினால் சட்ட நடவடிக்கை பாயும், பாஸ்போர்ட் உரிமம் ரத்து செய்யப்படும் என்று காவல்துறையே எச்சரிக்கை விடுத்தது. ஆனால், இந்துக்களின் விழாக்களுக்கு இதுவரை இப்படி எந்த உத்தரவும் எங்கும் பிறப்பிக்கப்பட்டதே கிடையாது. சம்பல் மாவட்டத்தில், சமீபத்தில் நடந்த கலவரத்தைக் காரணம் காட்டி, வீட்டின் மொட்டை மாடிகளில் கூட தொழுகை நடத்தக்கூடாது என, அரசே மிரட்டல் விடுத்தது. அதிகப்படியான காவலர்களைப் பொது இடங்களில் இறக்கிவிட்டு, வீண் பதற்றத்தை ஏற்படுத்தினர்.
உத்தரப் பிரதேசத்தின் இந்த உளவியல் அச்சுறுத்தல் களைப் பார்த்து, பீகாரிலும் இதே கெடுபிடிகளைப் பின்பற்ற வேண்டுமென்று அங்குள்ள இந்துத்துவா அமைப்புகள் அரசை வற்புறுத்தின. ஆனால், தமிழ் நாட்டிலோ பிரியாணியும், இனிப்புப் பரிமாறலுமாக ரம்ஜானை இசுலாமியர்களோடு இணைந்து இந்துக்களும் கொண்டாடினர். கோவையில், கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்குச் சென்ற இசுலாமியர்கள், அங்கே இருந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். பதிலுக்கு கோயில் நிர்வாகத் தரப்பில் இருந்தும் கட்டியணைத்து ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்த காட்சிகள் இணையத்தை ஆக்கிரமித்தன. இதுபோல தேவாலயங்களுக்கும் சென்று இனிப்பு வழங்கி, ரம்ஜானைக் கொண்டாடினர் இசுலாமியர்கள். சமூக ஊடகங்களிலும் இருதரப்பும் மாறி மாறி தங்களது வாழ்த்தையும், அன்பையும் பரிமாறிக்கொண்டனர்.
ஒரே நாடு, ஒரே விழா, ஆனால், கொண்டாட்ட மனநிலை மட்டும் இரண்டு.
“வடக்கு பிற்போக்கானது; தெற்கு முற்போக்கானது” என்ற புரட்சியாளர் அம்பேத்கரின் கருத்து இன்றும் பொருந்திப் போகிறது.
‘முரசொலி’ 2.4.2025