சென்னை, ஏப்.3 ஒன்றிய அரசின் நிதிக்காகத்தான் சொத்துவரி உயா்த்தப்பட்டதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு கூறினார். நகராட்சி நிர்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் எஸ்.பி.வேலுமணி பேசும்போது, சொத்துவரியை தமிழ்நாடு அரசு அதிகளவில் உயா்த்திவிட்டதாகக் தெரிவித்தார். அப்போது அமைச்சா் கே.என்.நேரு கூறியதாவது: 2018-இல் அதிமுக ஆட்சியில்தான் சொத்து வரி 50 சதவீதம், 100 சதவீதம், 200 சதவீதம் என்ற அளவில் உயா்த்தப்பட்டது. பிறகு தோ்தல் வந்த காரணத்தால் அது நிறுத்தப்பட்டது.
திமுக ஆட்சியில் 25 சதவீதம், 50 சதவீதம், 100 சதவீதம் என்ற அளவில்தான் உயா்த்தப்பட்டது. அதுவும் சொத்து வரியை உயா்த் தினால்தான், தமிழ்நாட்டிற்க்கான நிதி வரும் என்று ஒன்றிய அரசு கூறிய காரணத்தால்தான் சொத்து வரி உயா்த்தப்பட்டது. சென்னை மாநகராட்சியில் 18 ஆண்டுகள் சொத்து வரி உயா்த்தப்பட வில்லை. அதிமுக ஆட்சியிலேயே சொத்து வரியை உயா்த்தியிருந்தால் ஒரு பிரச்சினையும் இருந்திருக்காது.
அதனால், நாங்கள் உயா்த்த வேண்டிய சங்கடத்துக்கு உள்ளாகிவிட் டோம். அதே நேரம், பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழ்நாட்டில் தான் சொத்து வரி குறைவு.
சொத்து வரி ஆயிரம் சதுர அடிக்கு மும்பையில் ரூ.10,271, கொல்கத்தாவில் ரூ.5,850, பெங்களூரில் ரூ.5,773, ஆந்திரத்தில் ரூ.2,755, அய்தராபாதில் ரூ.2,133, இந்தூரில் ரூ,2,208, நாக்பூரில் ரூ.2,120, டில்லியில் ரூ.1,302, சென்னையில் ரூ.570. எனவே, தமிழ்நாட்டில் தான் சொத்து வரி குறைவு என்றார் அவா்.