சென்னை, ஏப்.3- ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 2025-2026ஆம் கல்வியாண்டுக்கான அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித் துறை முன்கூட் டியே தொடங்கியது.
அந்த வகையில் கடந்த மாதம் (மார்ச்) 1ஆம் தேதி மாணவர் சேர்க்கையை அரசு பள்ளிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாணவர் சேர்க்கை தொடங்கி ஒரு மாதம் ஆன நிலையில், எவ்வளவு மாணவர்கள் இதுவரை சேர்ந்திருக்கின்றனர் என்பது குறித்த விவரத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் கூறியுள்ளார்.
அதில் அவர், ‘ஏராளமான பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஆர்வமுடன் அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகிறார்கள். சேர்க்கை தொடங்கியது முதல் கடந்த ஒருமாதத்தில் மாநிலம் முழுவதும் 1ஆம் வகுப்புக்கு 1,05,286 மழலையர் உட்பட ஏனைய வகுப்புகளும் சேர்த்து மொத்தம் 1,17,310 மாணவச்செல்வங்கள் சேர்ந்துள்ளனர். அனைவருக்கும் வாழ்த்துகள். தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கல்வியின் துணை கொண்டு உலகை வெல்ல நம் அரசுப் பள்ளிகளே தலைசிறந்த முறையில் அடித்தளமிடும்’ என பதிவிட்டு இருக்கிறார்.